அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் மே 1ஆம் தேதி நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதை எழுதும் போட்டியில் ‘சிங்கப்பூர் – என் அனுபவங்கள்’ என்ற தலைப்பை மையமாகக் கொண்டு 61 ஊழியர்கள் கவிதை எழுதினர்.
வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக மே தினத்தை முன்னிட்டு, தமிழ் முரசும் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவும் இணைந்து கவிதை எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்தன.
கவிமாலை அமைப்பின் காப்பாளர் மா.அன்பழகன், கவிஞர் ந.வீ. சத்திய மூர்த்தி, கவிஞர் சபா முத்து நடராசன் ஆகியோர் போட்டிக்கு நடுவர்களாக இருந்து போட்டியாளர்களின் கவிதைகளை மதிப்பிட்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
போட்டியின் முதல் பரிசை திரு சின்னையன் கருணாகரசு தட்டிச் செல்கிறார்.
இரண்டாம் பரிசை திரு கிருஷ்ணன் மகேஷ் குமாரும் மூன்றாம் பரிசை திரு பெரியசாமி குகனும் பெற்றனர்.
மூன்றாம் பரிசாக $400 ரொக்கமும், இரண்டாவது பரிசாக $600 ரொக்கமும், முதல் பரிசு பெற்றவருக்கு $1,000 ரொக்கமும் வழங்கப்படும். அதோடு 20 கவிதைகளுக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
வெற்றிபெற்றவர்களுக்கு இத்தகவல் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். பரிசுகளை வழங்கும் நிகழ்வு பற்றிய மேல்விவரங்கள் பின்னர் தமிழ் முரசு நாளிதழில் அறிவிக்கப்படும்.