மே தினத்தை முன்னிட்டு, அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் சங்கமும் தமிழ் முரசும் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதை எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்தன.
முதல் முறையாகத் தமிழ் முரசோடு இணைந்து இக்கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்களின் எழுத்தாற்றலையும் தமிழ் ஆர்வத்தையும் அங்கீகரிப்பதே இப்போட்டியின் நோக்கம்.
‘சிங்கப்பூரும் என் அனுபவங்களும்’ என்ற தலைப்பை மையமாகக் கொண்டு ஏறத்தாழ 60 வெளிநாட்டு ஊழியர்கள் கவிதை எழுதினர். அவர்களில் சிலர் தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
“நான் கட்டுமானத் துறையில் பணிபுரிகிறேன். என்னைப் போன்று வேலையிலேயே முழுக் கவனம் செலுத்தி மன அழுத்தத்தோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு இப்போட்டி மனத்திற்கு ஆறுதல் அளிக்கிறது. மேலும் பல கவிதைகளை எழுத வேண்டும் என்ற உற்சாகத்தையும் பெறுகிறேன்,” என்றார் இப்போட்டியில் பங்கெடுத்த பொன்னம்பலம் கருணாநிதி, 47.
“கவிதை, இலக்கியம் போன்ற கலைகள் சார்ந்த நுண்ணறிவை வெளிப்படுத்துவதற்கான மேடை அமைய வேண்டும். அதற்கான வாய்ப்பை இப்போட்டி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது,” என்று இப்போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிசுபாலன், 29.
“சிங்கப்பூரில் தமிழை மேம்படுத்த வேண்டும். மக்களிடையே தமிழ்ப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். வளர்ந்துவரும் மாணவர் சமுதாயத்தினர்தான் தமிழை நிலைநிறுத்தப் போகிறார்கள். அவர்களிடையே அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் மேலும் சில போட்டிகளை நடத்தவிருக்கிறோம்,” என்று அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இரா.புகழேந்தி, 67, தெரிவித்தார்.
“உழைப்பாளர் தினத்தன்று பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், அதையும் தாண்டி தமிழுக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இத்தனை பேர் கலந்துகொள்வதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் போட்டியின் பங்கேற்பாளர் தர்மசாஸ்தா கணேசன், 23.
“என் நண்பர் மூலம் இப்போட்டி பற்றித் தெரிந்துகொண்டேன். இதற்கு முன்பு கவிதை எழுதியதில்லை. ஆனால், இன்று அனைவரோடும் ஒன்றுசேர்ந்து இந்தப் போட்டியில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“படிக்காதவர்கள்கூட தமிழை வளர்க்க முன்வந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இதுபோன்று தொடர்ந்து சிங்கப்பூரில் தமிழ் நிலைத்திருக்க வேண்டும்,” என்றார் ராமுத்தேவர் வேலுச்சாமி, 63.