செம்பவாங் வெஸ்ட் தொகுதியின் அடையாளச் சின்னமாக உட்லண்ட்ஸ் கேலக்ஸி சமூக மன்றத்தில் நடைபெறும் பொங்கல் விழா உருவெடுத்துள்ளது.
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியாக உருவானதிலிருந்து, கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கு அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வரிசையில், ‘பொங்கல் விழா 2026’ ஜனவரி 24ஆம் தேதி உட்லண்ட்ஸ் கேலக்ஸி சமூக மன்றத்தில் நடைபெற்றது.
தலைமுறைகளுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்கவும் இளையர்களுக்கும் புதிய குடிமக்களுக்கும் பொங்கலின் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துவதும் இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் என்று செம்பவாங் வெஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு தளமாக விளங்கும் இந்நிகழ்ச்சி, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் இந்தியப் பண்பாட்டை நேரடியாக அனுபவிக்க அழைப்பு விடுத்தது.
தொழில்முறை நடனக் கலைஞர்களின் பாரம்பரிய நடனங்களோடு உள்ளூர் பள்ளிகள், பாலர் பள்ளிகளின் மாணவர் படைப்புகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
“இந்தியர் அல்லாத மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பல்லினக் கலாசாரச் சூழலை உருவாக்குகிறது,” என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
கோலம் வரைதல், பானைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் குடியிருப்பாளர்கள் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பொங்கல், தமிழ்மொழி மாதம், தீபாவளி போன்ற வருடாந்தர முயற்சிகளின் மூலம் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து மகிழ்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் திரு ஈஸ்வரன் கூறினார்.
பொங்கல் சடங்குகளின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலம் பேசும் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
பங்கேற்பாளர்களுக்கு சைவ உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடவடிக்கைகளுடன் விறுவிறுப்பான அதிர்ஷ்டக் குலுக்கலிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அமைந்தது.
நிகழ்ச்சியின் அலங்காரங்கள், குறிப்பாக, மாடுகளின் அட்டைப்படம் ஒன்று தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட கணக்காய்வாளர் லட்சுமி ராமலு, அதிர்ஷ்டக் குலுக்கில் முதல் பரிசு வென்றதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

