மனிதவள அமைச்சின் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் பொங்கல் கொண்டாட்டம்

மனிதவள அமைச்சின் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் பொங்கல் கொண்டாட்டம்

2 mins read
593a5db2-9cbf-4f26-b445-d2f295c0436e
நிதி, மனிதவள அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் ஹுவாங், வெளிநாட்டு ஊழியர்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். - படம்: ரவி சிங்காரம்

மனிதவள அமைச்சின் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி அண்மையில் திறக்கப்பட்டதையடுத்து, அங்கு ஜனவரி 25ஆம் தேதி பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்தேறின.

ஜனவரி 17ஆம் தேதி திறக்கப்பட்ட ‘நெஸ்ட் துக்காங்’ (NESST Tukang) தங்குவிடுதியில் கொண்டாடப்படும் முதல் பண்டிகையே தமிழ்ப் பண்டிகையான பொங்கல் என்பதால் வெளிநாட்டு ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் முன்னிலையில் பால் பொங்கும் அதேவேளையில், ஊழியர்களின் அகத்திலும் முகத்திலும் இன்பம் பொங்கியது.

தங்குவிடுதியை இயக்கும் ‘நெஸ்ட் சிங்கப்பூர் லிமிட்டெட்’, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஆதரவுடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து பசுவும் கன்றுக்குட்டியும் கொண்டுவரப்பட்டன. இந்திய மரபுடைமை நிலையத்திலிருந்து பொங்கல் கண்காட்சியும் தங்குவிடுதிக்கு இடம்பெயர்ந்தது.

நிதி, மனிதவள அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் ஹுவாங் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.

“வெளிநாட்டு ஊழியர்கள், தங்கள் இல்லங்கள், குடும்பங்கள், நண்பர்களைவிட்டு வெகுதூரம் உள்ளனர். பொங்கல் திருநாள் ஒரு பாரம்பரியக் கொண்டாட்டமாகும். ஒன்றுசேர்ந்து விளக்கேற்றி, பாலைப் பொங்கவைத்தது, பொங்கலைச் சுவைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொங்கலில் மசாலா, சாய் சுவையையும் உணரமுடிந்தது,” என்றார் திரு ஷான்.

“இவ்வாண்டு வேறெந்த தங்குவிடுதியிலும் செய்யாத வகையிலான பொங்கல் நிகழ்ச்சியைச் செய்துள்ளோம். ஊழியர்களுக்குப் பொங்கல், கரும்பு தந்து ஒன்றாகக் கொண்டாடுகிறோம்,” என்றார் லிஷாவின் பொங்கல் ஒளியூட்டுக்குத் தலைமைதாங்கிய திரு கார்த்திகேயன்.

ஜல்லிக்கட்டு பார்க்காத ஏக்கம் ஊழியர்களிடத்தில் இருந்தாலும், பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மனநிறைவடைந்ததாக ஊழியர்கள் பலரும் கூறினர்.

துக்காங் தங்குவிடுதி பொங்கல் கொண்டாட்டத்தில் 300க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
துக்காங் தங்குவிடுதி பொங்கல் கொண்டாட்டத்தில் 300க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர். - படம்: ரவி சிங்காரம்

“இங்கு தங்குவிடுதியில் அனைத்து இனத்தவரும் இருந்தாலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கண்டு மகிழ்கிறேன்,” என்றார் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த கணேசன் நித்திஷ்குமார்.

“தமிழ்நாட்டில் கொண்டாடுவது போன்று சிறப்பாக உள்ளது. இதையடுத்து திரைப்படமும் எங்களுக்காகத் திரையிடுவர்,” என்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த சங்கர் நாராயணனும் காரைக்குடியைச் சேர்ந்த மெய்யப்பன் பழனியப்பனும்.

இதுதான் தாம் சிங்கப்பூரில் கொண்டாடும் முதல் பொங்கல் என்றார் பங்ளாதேஷ் நாட்டவர் ரம்ஜான்.

“புதிய தங்குவிடுதியில் பெரிய அறைகள், தோட்டம், கிரிக்கெட் விளையாட இடம் எனப் பல வசதிகளும் உள்ளன,” என்றார் அவர்.

“நம் பங்காளிகளுடன் இணைந்து லிட்டில் இந்தியாவைத் துக்காங்குக்குக் கொண்டுவந்து, ஊழியர்களின் மகிழ்ச்சியைக் காணும்போது மனநிறைவடைகிறோம்,” என்றார் நெஸ்ட் சிங்கப்பூர் தலைமை நிர்வாகி தங் சீ மெங்.

கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்