பிரபல மூத்த உள்ளூர் நடிகர் திரு ஜெயராமன் ராமைய்யா காலமானார். அவருக்கு வயது 86.
50 ஆண்டுகளுக்குமேல், நகைச்சுவை நிறைந்த தன் தத்ரூபமான நடிப்போடு மக்களை மகிழ்வித்து வந்தார்.
1939ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிறந்த அவர், தமிழ் ஊடகத் துறையில் நாடக நடிகராகவும் பின்னணிக் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார்.
பிரதானமாகத் தொலைக்காட்சியில் அவர் இடம்பெற்றிருந்தாலும் வானொலி, மேடை நாடகம் என மற்ற பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலாய் போன்ற பிற மொழிகளிலும் பணியாற்றியுள்ள திரு ஜெயராமன், ‘குடும்பம் யுனைடெட்’, ‘இது நம்ம வீடு’ போன்ற மீடியாகார்ப் நாடக தொடர்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் ஊடகத் துறையில் தடம்பதித்துள்ளார்
‘இது நம்ம வீடு’ நாடகத் தொடரில் திரு ஜெயராமனின் நடிப்பைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு 2018ஆம் ஆண்டு மீடியாகார்ப்பின் ‘பிரதான விழா’வில் சிறந்த நகைச்சுவைக் கதாபாத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது. அவ்விருதைப் பெற்ற ஆக மூத்த கலைஞராக அவர் விளங்கினார்.
அவரது திறமை மட்டுமின்றி, நடிப்புத் துறையில் அவர் கொண்ட ஆர்வமும் ஈடுபாடுமே அவரின் தனித்துவமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் ஊடகத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் திரு ஜெயராமன் காலமானது குறித்து தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.