போர்ட்டோ நோவோ கஃபேயின் சஹர் உணவு விநியோகச் சேவை

போர்ட்டோ நோவோ கஃபேயின் சஹர் உணவு விநியோகச் சேவை

2 mins read
76226ce5-bcde-40f8-9a7d-28e11f65dc7e
போர்ட்டோ நோவோ கஃபேயின் ஊழியர்கள் - படம்: தமிழ் முரசு
multi-img1 of 2

முஸ்லிம்கள் நோன்பைத் தொடங்கும் முன்னர் உட்கொள்ளும் ‘சஹர்’ உணவை அவர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கும் பணியை டன்லப் ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் இந்திய உணவகமான போர்ட்டோ நோவோ கஃபே மேற்கொண்டு வருகிறது. மூன்று ஆண்டுக்கு முன்பு வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தொடங்கப்பட்ட சஹர் உணவு விநியோகச் சேவை, இப்போது 150 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

“ஆரம்பத்தில் 20 பேருக்கு மட்டுமே சஹர் உணவை வழங்கினோம். இந்த ஆண்டு 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் சுமார் 150 பேருக்கு உணவு வழங்கிவருகிறோம். இதற்காக 150 வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுவை வைத்துள்ளோம். அன்றாடம் மாலை 5 மணிக்கு ஆட்டிறைச்சி, கோழிக்கறி உட்பட 2, 3 உணவு வகைகளை அதில் பதிவிடுவோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அன்றைய சமையல் அமையும்,” என்றார் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஷாஹுல் ஹமீத், 36.

இரவு 7 மணிக்கு உணவகத்தின் கைதேர்ந்த சமையல் கலைஞர்கள் சஹர் உணவைத் தயாரிப்பதில் ஈடுபடுகின்றனர்.

“உணவு இரவு 9 மணிக்குத் தயாராகிறது. இரவு 11.30 முதல் நள்ளிரவு 12 மணிக்குள் பொட்டலமிடப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு விநியோகம் தொடங்குகிறது. நான் உட்பட மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் மூவர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் 25 வீடுகளுக்கு உணவை விநியோகிக்கிறோம். அதிகாலை நேரத்துக் குளிரையும் பொருட்படுத்தாமல் நோன்பு நோற்கும் மக்களுக்குச் சரியான நேரத்தில் உணவு சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இதனை மனமுவந்து செய்கிறோம்,” என்றார் உணவகத்தின் மேலாளர் ஸாஹா அலி.

போர்ட்டோ நோவோ என்பது பரங்கிப்பேட்டைக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்.

இந்தச் சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு சஹர் உணவு விநியோகச் சேவையை இன்னும் கூடுதலான வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார் திரு ஷாஹுல் ஹமீத்.

குறிப்புச் சொற்கள்