கிரிக்கெட் மூலம் ஒன்றிணைந்த பரங்கிப்பேட்டைச் சமூகம்

கிரிக்கெட் மூலம் ஒன்றிணைந்த பரங்கிப்பேட்டைச் சமூகம்

படம்: பரங்கிப்பேட்டைச் சங்கம்/ஃபேஸ்புக்

20 Oct 2026 - 6:00 am

2 mins read

தமிழகத்தில் உள்ள சிறிய கடற்கரை நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது பரங்கிப்பேட்டை (போர்ட்டோ நோவோ) சமூகத்தின் வரலாறு.

சிங்கப்பூரில் அச்சமூகம் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி, சமூகத்தினர் ஒன்றுகூடி இன்பமாகப் பொழுதைக் கழிக்க நல்வாய்ப்பாக அமைந்தது.

சிங்கப்பூரில் உள்ள பரங்கிப்பேட்டைச் சங்கம் அக்டோபர் 11ஆம் தேதி தனது முதல் சமூக ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. காலாங்கில் திறந்தவெளிப் பகுதியில் கிட்டத்தட்ட 60 விளையாட்டாளர்கள், வருகையாளர்கள், ஆதரவாளர்களை அந்நிகழ்ச்சி ஒன்றுகூட்டியது.

அந்தத் திறந்தவெளிப் பகுதி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையக் கட்டடத்துக்கு அருகே அமைந்துள்ளது.

இரண்டு 10 ஓவர் ஆட்டங்கள்

அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பிஎன்ஓ லயன்ஸ், பிஎன்ஓ டைகர்ஸ் குழுக்கள் சந்தித்தன. அவ்விரு குழுக்களும் இரண்டு 10 ஓவர் ஆட்டங்களில் மோதின.

ஏறுத்தாழ 20 விளையாட்டாளர்கள் மாறி மாறி களமிறக்கப்பட்டனர். அனைவருக்கும் வாய்ப்பளிக்க அவ்வாறு செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பரங்கிப்பேட்டைச் சமூகம் அதிகாரபூர்வமாக சிங்கப்பூரின் சங்கங்கள் பதிவகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதையடுத்து அச்சங்கத்துக்கு இந்தப் போட்டி முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

முதன்முறையாக நடைபெற்ற இந்த ஒன்றுகூடலுக்கு கிரிக்கெட் இயல்பாகவே நல்லதொரு களமாக விளங்குகிறது என்றார் பரங்கிப்பேட்டைச் சங்கத் தலைவர் முஸ்தஃபா கமால். விளையாட்டாளர்களில் சிலர் தங்களின் பள்ளி, கல்லூரிகளுக்காவும் விளையாடியவர்கள்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் சிங்கப்பூர் வீரர்

சிங்கப்பூர் தேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிலோன் விளையாட்டு மன்ற கிரிக்கெட் குழு உறுப்பினருமான மோகன் குமார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வேகப் பந்துவீச்சாளரும் நடுநிலை பந்தடிப்பாளருமான திரு மோகன், 2005லிருந்து 2008ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடினார்.

பசார் கேலாங் சிராய் வர்த்தகச் சங்கத்தின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். அச்சங்கத்தின் தலைவர் ஒஸ்மான் சுடினும் அவர்களில் ஒருவர்.

பரங்கிப்பேட்டை, தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். பல நூற்றாண்டுகளாக அந்நகரம், அரபு வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்தது. பிறகு போர்ச்சுகீசிய, நெதர்லாந்து, பிரிட்டி‌ஷ் வர்த்தகர்களுடனும் அது தொடர்பில் இருந்தது.

பல நூற்றாண்டுகால வரலாறு

அந்தத் தொடர்புகள், பரங்கிப்பேட்டைச் சமூகத்தினர் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே மலாய்த் தீபகற்பத்துக்கு இடமாற வகைசெய்தன.

தற்போது பரங்கிப்பேட்டைச் சமூகத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ள கிட்டத்தட்ட 350 குடும்பங்கள் சிங்கப்பூரில் வசிக்கின்றன. அச்சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க உறுப்பினர்களில் எம்இஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.அப்துல் ஜலீலும் ஒருவர்.

அச்சமூகத்தினர் சிலர் இப்போது தமிழ் பேசுவதில்லை. ஆனால், தங்களின் முன்னோர்கள் பரங்கிப்பேட்டையிலிருந்து வந்தவர்கள் என்பதை அவர்கள் அறிவர்.

தொடர் முயற்சி

இந்நிகழ்ச்சி, சம்பந்தப்பட்ட 350 பரங்கிப்பேட்டைக் குடும்பங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுக் குடும்பங்களைச் சென்றடைந்தது. எஞ்சிய குடும்பங்களையும் அடையாளம் கண்டு தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தி: வி. கே. சந்தோ‌ஷ் குமார்
குறிப்புச் சொற்கள்