பிரதான விழா 2026: விக்னேஷ் வரதராஜன், ஈஸ்வரி குணசேகருக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது

பிரதான விழா 2026: விக்னேஷ் வரதராஜன், ஈஸ்வரி குணசேகருக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது

3 mins read
அரங்கம் நிறைந்த உற்சாகத்துடன் விழா அரங்கேறியது
10e99a37-93ba-4f83-9f7a-153bcef04525
இவ்வாண்டின் பிரதான விழா சனிக்கிழமை (பிப்ரவரி 7) இரவு மீடியாகார்ப் அரங்கில் நடைபெற்றது. - படம்: பிரதான விழா

‘கருவனம்’ நாடகத் தொடரில் நடித்துள்ள விக்னேஷ் வரதராஜனுக்கு ‘பிரதான விழா 2026’ நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘மெய்’ நாடகத் தொடரில் நடித்துள்ள ஈஸ்வரி குணசேகர், சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். ஈஸ்வரியால் நிகழ்ச்சிக்கு வர முடியாததால், அவரது சார்பில் அவருடைய சகோதரி ஷாமினி குணசேகர் அவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.

வெற்றியாளர் பட்டியல்

சிறந்த துணை நடிகர், துணை நடிகைக்கான விருதுகளை ‘கருவனம்’ தொடருக்காக கார்த்திகேயன் சோமசுந்தரம், காயத்ரி சேகரன் இருவரும் பெற்றுள்ளனர்.

மிகப் பிரபலமான ஆண் நட்சத்திரம் விருதை குருவும் பெண் நட்சத்திரம் விருதை நிஷா குமாரும் வென்றுள்ளனர். இந்த விருதுகள், பொதுமக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

சிறந்த நாடகத்துக்கான விருதை வென்றுள்ளது ‘பிதாமகன்’ தொடர்.

‘மெய்’ நாடகத் தொடரில் ‘இந்த வாழ்க்கை’ பாடலுக்காக சிறந்த பாடகருக்கான விருதை ஸ்டெஃபன் ஸக்காரியா வென்றுள்ளார்.

“செய்யும் பணியில் எப்போதும் 100 விழுக்காடு சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றுவதற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது. மனநிறைவாக உள்ளது,” என்றார் ஸ்டெஃபன்.

சிறந்த மின்னிலக்க நிகழ்ச்சிக்கான விருதை ‘திகில் டேல்ஸ்’ நிகழ்ச்சி வென்றுள்ளது. இதனைப் படைப்பாளர்கள் இளமாறன், ஜனனி இருவரும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கிடையே, ‘பிரதான விழா 2026’ நிகழ்ச்சியில் ‘பிரதான விழா 2025’ நிகழ்ச்சி இரு விருதுகளைப் பெற்றுள்ளது.

‘சிறந்த தகவல் கதம்பத் தொடர்’ எனும் பிரிவிலும் கடந்த ஆண்டு நிகழ்ச்சியின் ‘விண்ணைத்தொடு’ பாடலுக்காக சிறந்த பாடல் உருவாக்கம் பிரிவிலும் 2025 நிகழ்ச்சி இவ்விருதுகளைப் பெற்றது.

அப்பாடலுக்கு இசையமைத்த ஷபீர் விருதைப் பெற்றுக்கொண்டார்.

அரங்கம் நிறைந்த உற்சாகத்துடன் ‘பிரதான விழா 2026’ சனிக்கிழமை (பிப்ரவரி 7) இரவு மீடியாகார்ப் அரங்கில் விறுவிறுப்புடன் அரங்கேறியது.

​பிரபல உள்ளூர் கலைஞர்கள் உதய சௌந்தரி, ஜெய கணேஷ் ஈஸ்வரன், கார்த்திகேயன் சோமசுந்தரம், ரவி ஜி ஆகிய நால்வரும் விழாவை தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சிகள் பிரிவில் ஆறு விருதுகள், கலைஞர்கள் பிரிவில் பத்து விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல கலைஞர்களுக்கான இரு விருதுகள் என இவ்வாண்டு 19 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் விருதாக, சிறந்த வளரும் கலைஞர் பிரிவில், ‘கருவனம்’ நாடகத் தொடருக்காக நவ்யா முத்துகிருஷ்ணன், 23, விருதுபெற்றார்.

இந்த விருது தமக்கு ஊக்கமளிப்பதாகவும் இப்பயணத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனும் உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறந்த வானொலிப் படைப்பாளர் விருதைப் பெற்றார் நித்யா. 

‘ஆனந்தம் ஆரம்பம்’ எனும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ் பேசும் ஆங்கில விவசாயி கிருஷ்ணா மெக்கென்ஸியை நேர்காணல் செய்ததற்காக இவ்விருதை அவர் வென்றார். 

சிறந்த ஒலிவழி நிகழ்ச்சிப் பிரிவில் ‘சிங்கப்பெண்ணே’ நிகழ்ச்சிக்காக படைப்பாளர்கள் ரஃபி, ஹலிமா இருவரும் விருதுபெற்றனர்.

சிறந்த படைப்பாளர் (தகவல் நிகழ்ச்சி) பிரிவில், ‘பேசுவோம்’ நிகழ்ச்சிப் படைப்பாளர் கார்த்திகேயன் சோமசுந்தரம் விருது வென்றார்.

சிறந்த நிகழ்ச்சி (தகவல் விளக்கத்தொடர்) பிரிவில், ‘எங்க பேட்டை 2’ நிகழ்ச்சிக்காக ‘தி மீடியா’ வென்றது. தி மீடியாவின் நிர்வாகத் தயாரிப்பாளர் முகமது அலி விருதைப் பெற்றுக்கொண்டார்.

சிறந்த படைப்பாளர் விருதை ஒன்பதாவது முறையாக இவ்வாண்டும் வென்றுள்ளார் சரவணன் அய்யாவு. ‘பிரதான விழா 2025’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்