‘வாமனத் தீவு’ நூலுக்குப் புகழாரம்

‘வாமனத் தீவு’ நூலுக்குப் புகழாரம்

3 mins read
92cae8e3-e29f-468a-934a-34a73bd617eb
பேராசிரியர் பழநி அரங்கசாமிக்கும் நூலாசிரியருக்கும் சேர்த்து பொன்னாடை போர்த்தினார் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ. திரு மணிமாறன், திரு இரா.செழியன், கவிஞர் திருநாவுக்கரசு, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் உடன் உள்ளனர். - படம்: அரசு இலக்கிய முற்றம், தஞ்சாவூர்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதியுள்ள ‘வாமனத் தீவு’ எனும் சிங்கப்பூர் வரலாற்று நூலுக்குப் பேராசிரியர் பழநி அரங்கசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் ஜனவரியில் நடைபெற்ற ‘வாமனத் தீவு’ நூலின் அறிமுக விழாவில் உரையாற்றிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் பழநி அரங்கசாமி அதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

‘தஞ்சாவூர் அரசு இலக்கிய முற்றம்’ எனும் அமைப்பு, நூல் அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சிங்கப்பூரில் சில ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய கவிஞர் திருநாவுக்கரசு அந்த அமைப்பை நடத்தி வருகிறார்.

விழாவில் தலைமையுரை ஆற்றிய திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் சண்முக. செல்வகணபதி, நூலிலுள்ள சிறப்புகளை எடுத்துரைத்ததுடன் சிங்கப்பூரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

நூலை ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் முனைவர் க.அன்பழகன், ‘வாமனத் தீவு’ நூலைப் படித்த பிறகுதான் சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பியும் முதல் பிரதமருமான திரு லீ குவான் யூ எப்படிப்பட்ட தலைவர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது என்றார்.

சிங்கப்பூரின் ‘மக்கள் மனம்’ ஆசிரியரும் கவிமாலையின் நிறுவனருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, நூலாசிரியரை அறிமுகம் செய்தார்.

வெற்றித் தமிழர் பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இரா.செழியன், கலை பண்பாட்டுத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன், ஏடகம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான முனைவர் மணிமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய திரு ஆண்டியப்பன், வெற்றி விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அரசு இலக்கிய முற்றத்தின் தலைவர் கவிஞர் திருநாவுக்கரசுக்கும் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இரண்டு முனைவர் பட்ட ஆய்வுக்குரிய தகவல்கள் அடங்கிய ‘வாமனத் தீவு’ நூல்

இந்நூல், இரண்டு முனைவர் பட்ட ஆய்வுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது என்று திருச்சியின் பிஷப் ஹூபர் கல்லூரியின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மணலி சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற ‘வாமனத் தீவு’ நூலின் அறிமுக விழாவில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சில முக்கியத் தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்பதை அடிக்குறிப்பாக திரு ஆண்டியப்பன் குறிப்பிட்டிருப்பது, அவர் சிறந்த ஆய்வாளர் என்பதைக் காட்டுவதாகக் கூறிய பேராசிரியர் சோமசுந்தரம், வரலாற்று நூல்கள் இவ்வாறுதான் படைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கமும் திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கும் இணைந்து அந்த அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

இதில், இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் இயக்குநர் தமிழ்ச்செம்மல் இராச.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார்.

தலைமையுரை ஆற்றிய திருச்சி பெரியார் அரசுக் கல்லுரியின் தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் தமிழ் மாமணி, முனைவர் ப.சுப்பிரமணியன் நூலை வாசித்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

திருச்சி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தமிழவேள் பெ.உதயகுமார், தமிழ் இயக்கத்தின் செயலர் மு.சிதம்பரபாரதி, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, தமிழ் ஆர்வலர் எம்.ஆர்.எஸ்.கேசவன், சமூக ஆர்வலர் இரா.பூங்குழலி ஆகியோர் நூலின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்