சிங்கப்பூரில் மேளதாளம் முழங்கும் திருவிழாக்களையும் இசைக்கலைஞர்களின் நேரடிக் கச்சேரிகளையும் ரசிக்கும் வழக்கம் பரவலாக உள்ளது.
அவை மனத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் வேளையில் செவி ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் செவிநல வல்லுநர் ஹிரியா கருணாகரன்.
“சாதாரண உரையாடல் சுமார் 60 ‘டெசிபெல்’ அளவில் இருக்கும். பொதுவாக 80 ‘டெசிபெல்’ அளவுக்கும் குறைவான சத்தமே செவிகளுக்குப் பாதுகாப்பானது,” என்றார் அவர்.
“ஆனால், பெரிய இசை நிகழ்ச்சிகளில் ஒலி அளவு 120 ‘டெசிபெல்’ வரை போகலாம். எஃப் 1 பந்தயத்தில் அது 130 முதல் 140 வரை அதிகரிக்கலாம்,” என்று ஹிரியா சொன்னார்.
80 ‘டெசிபெல்’லுக்குமேல் உள்ள சூழலில் அதிகபட்சமாக 8 மணி நேரம் இருக்கலாம். 100 ‘டெசிபெல்’லுக்கு மேல் உள்ள சூழலில் 5 நிமிடங்களுக்குமேல் இருப்பது செவித்திறனைப் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.
ஆனால் இரண்டு முதல் மூன்று மணிநேரம் நீடிக்கும் 120 ‘டெசிபெல்’ ஒலி அளவுள்ள நிகழ்ச்சிக்கு முன்னெச்சரிக்கையின்றிச் செல்வது காலப்போக்கில் செவித்திறனைப் பாதிக்கக்கூடும். எனவே, அவற்றில் பங்கேற்கும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
செவித்திறன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
ஒலி அளவு அதிகமுள்ள சூழலுக்குச் செல்லும்போது தரமான செவிக்கருவிகளைப் பயன்படுத்துவது அவசியம். அவை இசையின் தரத்தைக் குறைக்காமல் ஒலியின் தீவிரத்தை மட்டும் குறைக்கும்.
நிகழ்ச்சி தொடங்குமுன்பே அதனை அணிந்துகொள்ள வேண்டும். ‘சத்தம் அதிகமாகும்போது அணிவோம்’ என்ற மனநிலை தவறானது. மிதமிஞ்சிய ஒலி சில நிமிடம் நீடித்தாலும் அது செவித்திறனுக்குச் சேதம் விளைவிக்கக்கூடும். இடையிடையே அதனைக் கழற்றி மீண்டும் அணிவதும் பாதுகாப்பைக் குறைக்கும் என்றார் ஹிரியா.
சமய விழாக்களின்போது அதிக ஒலி எழுப்பப்படும் பகுதிகளுக்கு அருகில் செல்வதைப் பல நேரங்களில் தவிர்க்க இயலாது. அத்தகைய நேரங்களில் அடிக்கடி இடைவேளை எடுத்துக்கொள்வது முக்கியம். இரைச்சல் அதிகமுள்ள இடத்தில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது சற்று அமைதியான இடத்திற்குச் சென்று செவிக்கு ஓய்வு அளிப்பது, காதின் அழுத்தத்தைக் குறைத்து, அது பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் என்றும் அவர் சொன்னார்.
நிகழ்ச்சிக்கு முன்னர் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். காதில் ரீங்காரமிடுவதைப் போன்ற ஓசை, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது.
திறன்பேசிகளில் உள்ள ஒலிக் கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்திச் சுற்றியுள்ள சத்தத்தின் அளவை அறிந்து கொள்ளலாம். பாதுகாப்பான வரம்பு மீறப்படும்போது அதனைப் புரிந்துகொள்ள அது உதவும்.
“இளம் வயது என்பதால் பாதிப்பு இல்லை என்ற எண்ணம் மிகப் பெரிய தவறு,” என்றும் எச்சரிக்கிறார் ஹிரியா.
“செவித்திறன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது. காலப்போக்கில் மெதுவாக வெளிப்படும். எனவே, தொடர்ந்து பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதிர்கால நலனைத் தீர்மானிக்கும்,” என்றார் அவர்.

