சிங்ஹெல்த் குழுமத்தின் 2026ஆம் ஆண்டிற்கான ‘நோயாளி, பராமரிப்பாளர் விருதுகள்’ (Patient and Caregiver Awards) வழங்கும் விழாவில் சன்லவ் இல்லம் மூன்று விருதுகளைத் தட்டிச் சென்றது.
சன்லவ் இல்லத்தின் ‘ஊக்கமளிக்கும் பராமரிப்பாளர்’ (Inspirational Caregiver) விருதை ஹெலன் லோ, மாஸ்னி மஸ்லான் ஆகியோர் பெற்றனர்.
முதுமை மறதி, பார்க்கின்சன் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ள 93 வயதுத் தாயாரைத் தாதிமை இல்லத்திற்கு அனுப்பாமல், வீட்டிலேயே பராமரித்து வருகிறார் திருவாட்டி லோ.
சன்லவ் இல்லத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் ஆகியோர் வீடு தேடி வந்து வழங்கும் மருத்துவச் சேவையும் ஆலோசனைகளும் தமக்குப் பெரிதும் உதவுவதாகத் திருவாட்டி லோ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தாயாருக்குத் தேவையான அன்றாடப் பராமரிப்புப் பணிகளைத் தமது இல்லப் பணிப்பெண்ணுடன் இணைந்து திருவாட்டி லோ மேற்கொள்கிறார். அந்தப் பணிப்பெண்ணுக்குத் தாதிமை தெரியாத நிலையில், பராமரிப்பு குறித்த அனைத்தையும் அவரே கற்றுக்கொண்டார்.
தாயாரின் முதியோர் கச்சையை மாற்றுவது, ரத்த அழுத்தம் போன்ற முக்கிய உடல்நலக் கூறுகளைச் சரிபார்ப்பது, படுக்கைப் புண் ஏற்படாமல் இருக்க அவரைத் தொடர்ந்து திருப்பிப் படுக்க வைப்பது போன்ற பணிகளை அவர் கவனித்துக்கொள்கிறார்.
சிரமம் பாராத பரிவு
தாயாரால் உணவை விழுங்க முடியாது என்பதால், மூக்கு வழியே செலுத்தப்பட்டுள்ள குழாய் மூலம் உணவும் மருந்துகளும் அவருக்கு வழங்கப்படுகின்றன. இந்தக் குழாயைச் சுத்தம் செய்வது, அதன் அடைப்புகளைச் சரிசெய்வது போன்றவற்றையும் திருவாட்டி லோ கற்றுக்கொண்டுள்ளார்.
தாயாரைப் பராமரிப்பதும் அவரது உடல்நலம் குறித்த முடிவுகளை எடுப்பதும் சில நேரங்களில் தமக்கு மிகுந்த சோர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக திருவாட்டி லோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தாயாரின் உடல்நிலை மோசமடைவதையும் அவர் தம்மை யார் என்றே அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதையும் பார்ப்பது மனவேதனை அளிப்பதாக அவர் கூறுகிறார்.
முதியோர் இல்லத்திற்கு அனுப்பவில்லை
தாயாரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்க முடிவு செய்ததற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
குடும்பத்தின் பசியைப் போக்குவதற்காகத் தமது தாயார் பல வேலைகளைச் செய்து தங்களை அர்ப்பணிப்புடன் வளர்த்ததை திருவாட்டி லோ நினைவுகூர்ந்தார். எனவே, அவருக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவரைப் பராமரிப்பது தங்களின் பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார். இது கடமை மட்டுமன்று; தம் தாயார் தம் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு அளித்த அன்பிற்கும் அரவணைப்பிற்கும் தாங்கள் செலுத்தும் மரியாதை என்றும் அவர் நெகிழ்கிறார்.
“பராமரிப்புப் பொறுப்புகள் முழுவதையும் ஒருவர் மட்டுமே தனித்துச் சுமக்கக்கூடாது. மற்றவர்களிடம் பேசி ஆதரவைத் தேடுவதுடன் அவ்வப்போது தாங்கள் ஓய்வு எடுத்துக்கொள்வதும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
அவரின் தன்னலமற்ற அன்பு, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவற்றைச் சன்லவ் இல்லத்தின் தலைவர் எம் கே ராஜமோகன் பாராட்டினார்.
“எங்கள் இல்லத்தின் ஆதரவு இவரைப் போன்ற பராமரிப்பாளர்களுக்கு உறுதுணையாய் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.

