‘என்னையும் என் வேலையையும் மதிப்பதே என் பதவி உயர்வுக்குக் காரணம்’

2 mins read
99bcb718-1009-44c7-8f0a-dacc09523f3b
துணை உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ள திருவாட்டி செந்தாமரை வைத்தியலிங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியின் துணைத் தலைவராகச் செயலாற்றும் திருவாட்டி செந்தாமரை வைத்தியலிங்கம், 53, பதவி உயர்வு பெறும் முன்னரே மனதளவில் தம்மைத் தொடர்ந்து உயர்த்தி வருவதாகக் கூறினார்.

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் மே 24ஆம் தேதி நடைபெற்ற உள்துறை அமைச்சின் சீருடை சேவைகளுக்கான பதவி உயர்வு நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

சூப்ரின்டெண்டன்ட் நிலையிலிருந்து துணை உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ள திருவாட்டி செந்தாமரை, பதவி உயர்வு நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்திடமிருந்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

சோதனைச்சாவடி சுமுகமாக இயங்குவதை உறுதிசெய்யும் விதமாக பாதுகாப்பு அனுமதி வழிமுறைகள், சேவை மேம்பாடு தொடர்பான கொள்கை வகுப்பில் திருவாட்டி செந்தாமரை ஈடுபடுகிறார்.

இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி கியூஆர் குறியீடு அனுமதி முறையை அமைப்பதிலும் இவர் பங்காற்றினார். இப்புதிய முறையால், குடிநுழைவு அதிகாரிகளிடம் பயணிகள் கடப்பிதழ்களைக் காண்பிப்பதற்கான அவசியம் இல்லாததால், காத்திருப்பு நேரம் குறைகிறது.

சோதனைச்சாவடிகளில் பயணிகளுக்கு சேவை செய்யும் அதிகாரிக்குத் துணையாய் இருப்பதில் அர்த்தம் காண்பதாகத் திருவாட்டி செந்தாமரை கூறினார். “அதிகாரிகள் கவனத்துடன், நிதானத்துடன் வேலை செய்வதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறேன். முதலில், என்னுடன் பணியாற்றுவோர் என்னை எளிதில் அணுகும் விதமாக நடந்துகொள்வேன்,” என்று அவர் கூறினார்.

பணியால் விரிந்த ஆற்றல்

உள்துறை அமைச்சின் சீருடை சேவைகளுக்கான பதவி உயர்வு நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்திடமிருந்து சான்றிதழ் பெறும் திருவாட்டி செந்தாமரை வைத்தியலிங்கம்.
உள்துறை அமைச்சின் சீருடை சேவைகளுக்கான பதவி உயர்வு நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்திடமிருந்து சான்றிதழ் பெறும் திருவாட்டி செந்தாமரை வைத்தியலிங்கம். - படம்: த. கவி

1993ல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளநிலைப் பட்டக்கல்வியை முடித்த பிறகு குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையத்தில் சேர்ந்த திருவாட்டி செந்தாமரை, “இது என் முதல் வேலை,” என்று கூறினார்.

தொடக்கத்தில் தமக்குத் தெரியாதவருடன் சுமுகமாகப் பேசும் தன்மை இல்லை என்றாலும், அதனைப் படிப்படியாகக் கற்றுக்கொண்டதாக இவர் சொன்னார்.

“நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் என் பங்கு முக்கியமானது. என்னையும் நான் செய்யும் வேலையையும் தொடர்ந்து மதிப்பதே எனது உயர்வுக்குக் காரணம்,” என்றார் இவர்.

தற்போது அலுவலக வேலை நேரத்தில் பணியாற்றி வரும் திருவாட்டி செந்தாமரைக்கு, முன்னர் சுழற்சி முறையில் வேலை செய்தது சவாலாக இருந்தது.

“இத்தகைய முறையில் ஓய்வு நேரம் குறைவு. கவனத்துடனும் வேலை செய்யவேண்டும். ஆனால் வேலையில் ஆர்வம் உள்ளவர்கள் இதனைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டு உற்சாகத்துடன் வேலைக்கு வருவார்கள்,” என்று இவர் கூறினார்.

திருமணமான திருவாட்டி செந்தாமரைக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகள் துர்கா, 23, தம் தாயாரின் பதவி உயர்வு குறித்து பெருமையடைவதாகக் கூறினார்.

“என் அம்மா, வீட்டிலும் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துகிறார். நான் அவரிடம் ஆளுமைப் பண்புகளைக் கற்றுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்