புனிதப் பொருள்களை அகற்ற உதவிய ‘உத்வாசனம்’ இயக்கம்

புனிதப் பொருள்களை அகற்ற உதவிய ‘உத்வாசனம்’ இயக்கம்

1 of 2
படம்: யோகிதா அன்புச்செழியன்
படம்: யோகிதா அன்புச்செழியன்

04 Oct 2026 - 6:00 am

3 mins read

பயன்பாட்டில் இல்லாத தெய்வப் படங்கள், சிலைகளை முறையாக அகற்றுவதற்கான ‘உத்வாசனம்’ எனும் புதிய சமூக இயக்கம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) முதன்முறையாக நடைபெற்றது.

இந்து ஆலோசனை வாரியத்தின் முன்னெடுப்பில், சிங்கப்பூர் இந்து சபையின் பங்காளித்துவத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட இச்சேகரிப்பு நடவடிக்கை, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பிஜிபி மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

கனமழையையும் பொருட்படுத்தாது பிஜிபி மண்டபத்திற்கு வந்து புனிதப் பொருள்களை ஒப்படைத்த பக்தர்கள்.
கனமழையையும் பொருட்படுத்தாது பிஜிபி மண்டபத்திற்கு வந்து புனிதப் பொருள்களை ஒப்படைத்த பக்தர்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

வீடுகளில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படாத புனிதப் பொருள்களைக் குப்பைத் தொட்டிகளில் வீசுவதையோ, மரங்களின் கீழ் வைப்பதையோ, நீர்நிலைகளில் போடுவதையோ தவிர்ப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அவற்றை முறையாக அகற்றுவதன்மூலம் சமய நெறிமுறைகளைப் பேணுவதோடு, சுற்றுப்புறத் தூய்மையையும் பாதுகாக்க இத்திட்டம் வழிவகுக்கிறது.

காலை 9.30 மணிக்கு நிகழ்வு தொடங்கவிருந்த நிலையில், காலை 8.45 மணி முதலே பக்தர்கள் திரளத் தொடங்கியதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். பெருமழை பெய்தபோதிலும், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது புனிதப் பொருள்களைப் பயணப்பெட்டிகள், பைகளில் பாதுகாப்பாக எடுத்து வந்து ஒப்படைத்தனர்.

இச்சேகரிப்பு இயக்கத்தின்போது 60 சென்டிமீட்டர் (2 அடி) உயரத்திற்கு உட்பட்ட பிளாஸ்டர், மரம், உலோகம் போன்ற பொருள்களாலான தெய்வச் சிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதே வேளையில், பூசை விளக்குகள், தட்டுகள், வழிபாட்டுப் பாத்திரங்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சாஸ்திர முறைப்படி அகற்றுவதற்காகப் பிஜிபி மண்டபத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தெய்வச் சிலைகளும் படங்களும்.
சாஸ்திர முறைப்படி அகற்றுவதற்காகப் பிஜிபி மண்டபத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தெய்வச் சிலைகளும் படங்களும். - படம்: யோகிதா அன்புச்செழியன்

வீடுகளில் உள்ள பழைய தெய்வப் படங்கள், சிலைகளை எவ்வாறு அகற்றுவது என்பது பலருக்கும் தெரியாமல் இருப்பதாக இந்து ஆலோசனை வாரியத்தின் துணைத் தலைவர் கண்ணா கண்ணப்பன் கூறினார்.

“அதற்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சமய நெறிமுறைக்கும் உகந்த வகையில் ஒரு நல்ல தீர்வைக் காணவே இத்திட்டத்தைத் தொடங்கினோம்,” என்றார் அவர்.

சேகரிக்கப்படும் தெய்வப் படங்களுக்கும் சிலைகளுக்கும் முதற்கட்டமாக சிறப்புப் பூசை செய்யப்படுவதாக திரு கண்ணா கண்ணப்பன் கூறினார். அதன்மூலம் அவற்றில் ஆவாஹனம் செய்யப்பட்டுள்ள தெய்வ சக்தி முறைப்படி திரும்பப் பெறப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, படங்களின் சட்டங்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. சிலைகள் பொடியாக்கப்படுவதோடு, உலோகம், ஐம்பொன் சிலைகள் உருக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதி கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தை முறைப்படி உருவாக்குவதற்கு சமய ஆச்சாரியர்களிடம் ஆலோசனை பெற வேண்டியிருந்ததால் அதற்குச் சிறிது காலம் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“உத்வாசனப் பூசை செய்யப்படுவதால், குரு படங்களையோ மற்ற சமயப் பொருள்களையோ நாங்கள் ஏற்பதில்லை,” என்றார் திரு கண்ணா கண்ணப்பன். பூசைப் பாத்திரங்கள், விளக்குகள் தொடர்பாகப் பல கேள்விகள் வந்தபோதிலும், தற்போதைக்கு தெய்வப் படங்களும் சிலைகளும் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பக்தர்கள் கொண்டுவந்த தெய்வப் படங்களைப் பிரித்து வகைப்படுத்தும் தொண்டூழியர்கள்.
பக்தர்கள் கொண்டுவந்த தெய்வப் படங்களைப் பிரித்து வகைப்படுத்தும் தொண்டூழியர்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

பொதுமக்கள் அளித்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இச்சேவையைத் தொடர்ந்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களில் ஒருவரான திரு வினோத் குமார், வீடுகளை மாற்றும்போதோ புதிய தெய்வப் படங்களை வைக்கும்போதோ பழைய படங்களை என்ன செய்வது என்பது பலருக்கும் குழப்பமாக இருப்பதாகக் கூறினார்.

“கோயில் நிர்வாகமே பொறுப்பேற்று, சமய முறைப்படி அகற்றும் இந்தச் சேகரிப்பு இயக்கம் மிகவும் பாதுகாப்பான, நிலையான, முறைப்படுத்தப்பட்ட வழியாகும்,” என்றார்.

ரயில் நிலையம், பேருந்துப் பாதைகளுக்கு பிஜிபி மண்டபம் அருகில் அமைந்திருப்பதால், பொதுமக்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய மையப் பகுதியாக இருப்பதும் கலந்துகொள்ள வசதியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு பக்தரான ராதா தேவிப்பிரியா, தெய்வப் படங்களை நீண்ட காலம் வைத்திருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும்போது, அவற்றின் புனிதத்தன்மைக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

“இப்பொருள்களை முறையாக ஒப்படைத்து உரிய முறையில் அகற்ற முடிவது நல்ல முயற்சி. இதுபோன்ற சேவை தொடர்ந்து நடைபெறுவது பல குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்