மேற்பார்வை, கண்காணிப்புப் பணிகளில் சிறைத் துறை அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சிங்கப்பூர்ச் சிறைத் துறையின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, ‘புரோடெக்ட்’ எனப்படும் சிறைச்சாலைகளில் மோதல்கள், அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கான இயந்திர மனிதன் (ரோபோ).
‘எச்டிஎக்ஸ்’ எனும் உள்துறை அமைச்சு குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர்ச் சிறைத் துறை அந்த தானியக்க எந்திரனியல் சாதனத்தை உருவாக்கியுள்ளது. ‘புரோடெக்ட்’, சிங்கப்பூர்ச் சிறைத் துறையின் விரிவான தொழில்நுட்ப உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
“புரோடெக்ட் உருவாக்கும்போது, சிறைச்சாலை செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரோபோவில் மனிதர்களை அடையாளம் காணக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது,” என்று ‘எச்டிஎக்ஸ்’ தலைமை பொறியாளர் பெங் சொங்டியேன் சொன்னர்.
அதிகாரிகள், கைதிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, சம்பவங்களைக் கண்டறிந்து, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தீர்வுகளைக் காண்பதே அதன் நோக்கம்.
அந்த இயந்திரச் சாதனம் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பாதைகளில் தன்னிச்சையாகச் சுற்றுக்காவல் மேற்கொள்ளும் திறன்கொண்டது. அதன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திசைகாட்டும் ஆற்றல்கள், தடைகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துச் செல்ல வகைசெய்கின்றன. அதோடு, தலையீடு அல்லது சேதம் ஏதும் இருந்தால், அதனைப் பற்றி அதிகாரிகளிடம் அது எடுத்துக்காட்டும்.
சுற்றுக்காவலின்போது, ‘புரோடெக்ட்’ சாதனம் நேரலையாகக் காணொளிகளையும் ஒலிப்பதிவுகளையும் பகல்நேர அறை அதிகாரிகளுக்கு அனுப்பும். அதனால், சிசிடிவி கருவிகள் பொருத்தப்பட்ட பகுதிகளையும் தாண்டி கண்காணிப்பு விரிவாக்கப்படுகிறது.
சிறைக் கைதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டால், நேரடிக் காணொளிகளையும் ஒலிப்பதிவுகளையும் பெற, பகல்நேர அறை அதிகாரி, சம்பவம் நடக்கும் இடத்திற்கு அந்த இயந்திரச் சாதனத்தை அனுப்பலாம்.
அதிகாரிகளின் சட்டபூர்வமான அறிவுறுத்தல்களுக்குச் சிறை கைதிகள் இணங்க மறுத்தால், தொலைதூர ஒலிக் கருவி, ஒளி திசைதிருப்புக் கருவி, எரிச்சலூட்டும் நுரை தெளிப்பான் போன்ற ‘புரோடெக்ட்’ சாதனத்தின் அம்சங்களை அதிகாரிகள் தொலைவிலிருந்தே இயக்கலாம்.
அதிகாரிகளின் சீர்திருத்தப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், பாதுகாப்பை வலுப்படுத்த புதிய முறைகள் முழுமையாகச் சோதிக்கப்பட்டு செயல்பாடுகளில் ஒருங்கிணைக்கப்படும்.
“தொழில்நுட்பம் சிங்கப்பூர் சிறைத்துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ‘புரோடெக்ட்’, சிறைத்துறையின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல தொழில்நுட்பக் கருவிகளை அதன் செயல்பாடுகளில் இணைத்துக்கொள்ளவும் வழிவகுக்கிறது,” என்று சிறைச்சாலை மூத்த கண்காணிப்பாளர் ரிட்லீ லிம் கூறினார்.


