சிங்கப்பூரர்கள் பலரின் அன்றாட வாழ்க்கையில் சிங்பாஸ் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
அரசாங்கச் சேவைகளை எளிதாகப் பயன்படுத்துவதற்கும் பல்வேறு மின்னிலக்கச் சேவைகளை அணுகும்போது நமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் சிங்பாஸ் பயன்படுகிறது.
இத்தகைய வசதிகளுடன், அவரவர் சிங்பாஸ் உள்நுழைவுத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.
சிங்பாசை ஒரு செயலியாகவோ கடவுச்சொல்லாகவோ மட்டும் கருதாமல், உங்கள் மின்னிலக்க அடையாளத்திற்கான முக்கியமான சாவியாகக் கருதுங்கள்.
எதிர்பாராத இணைய இணைப்புகளிடம் எச்சரிக்கை
மோசடிக்காரர்கள் நம்பகமான நிறுவனங்களைப்போல ஆள்மாறாட்டம் செய்து, குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது போலி இணையத்தளங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்யக்கூடும்.
எடுத்துக்காட்டாக, உங்களுக்கு இதுபோன்ற செய்திகள் வரலாம்:
“உங்கள் சிங்பாஸ் கணக்கை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும்.”
“உங்கள் கணக்கு முடக்கப்படும்.”
“உள்நுழைய இங்கே அழுத்துங்கள்.”
இத்தகைய செய்திகள் பார்ப்பதற்கு அதிகாரபூர்வமானவை போலத் தோன்றலாம். போலி இணையத்தளங்களில் நமக்குப் பழக்கமான சின்னங்கள், வண்ணங்கள், உள்நுழைவுத் திரைகள் போன்றவைகூட அப்படியே இடம்பெற்றிருக்கலாம்.
ஆனால், உண்மையானது போலத் தோன்றுவதால் மட்டும் ஒன்றை நம்பிவிடக் கூடாது.
எதிர்பாராத விதமாக வரும் செய்தியில் உள்ள இணைய இணைப்பு மூலம் சிங்பாசைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால், அவசரப்பட்டு அந்த இணைப்பைத் திறக்காதீர்கள்.
அதற்குப் பதிலாக, அதிகாரபூர்வ சிங்பாஸ் செயலி அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரபூர்வச் சேவை வழியாக நீங்களே நேரடியாகச் செல்லுங்கள்.
அதிகாரபூர்வ சிங்பாஸ் செயலியைப் பயன்படுத்துங்கள்
‘ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ அல்லது ‘கூகல் பிளே ஸ்டோர்’ வழியாக சிங்பாஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். அது அதிகாரபூர்வமான செயலிதான் என்பதை எப்போதும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.
செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு, உங்கள் திறன்பேசியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம்.
வலுவான தனிநபர் அடையாள எண் (PIN), கடவுச்சொல் அல்லது கைரேகை, முக அடையாளம் போன்ற உயிரியல் அடையாளப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துங்கள்.
சிங்பாஸ் மூலம் வரும் அடையாள உறுதிப்படுத்தல் கோரிக்கைகளிலும் கவனமாக இருங்கள்.
அத்தகைய கோரிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்பு உங்களையே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: “இந்த உள்நுழைவு முயற்சியை நான்தான் தொடங்கினேனா?”
நீங்கள் தொடங்காத உள்நுழைவு முயற்சிக்கான அறிவிப்பு உங்கள் தொலைபேசியில் வந்தால், அறிவிப்பு வந்துவிட்டது என்பதற்காக மட்டும் அதை அங்கீகரிக்காதீர்கள்.
அதேபோல், உங்கள் சிங்பாஸ் கடவுச்சொல், பிற அடையாள உறுதிப்படுத்தல் தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
அவசரப்படுத்தினால் கூடுதல் எச்சரிக்கை தேவை
மோசடிக்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று, நம்மை அவசரப்படுத்துவது.
அவசர உணர்வை ஏற்படுத்துவதன் மூலம், என்ன நடக்கிறது என்பதைச் சிந்தித்துச் சரிபார்ப்பதற்கான நேரத்தை அவர்கள் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.
“உடனடியாகச் செயல்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்,” என்று ஒரு செய்தி எச்சரித்தால், அது நீங்கள் இன்னும் வேகமாகச் செயல்படுவதற்கான காரணமன்று; மாறாக, நிதானமாகச் செயல்பட வேண்டியதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.
அதிகாரபூர்வச் செயலியைத் திறந்து பாருங்கள். சம்பந்தப்பட்ட சேவையின் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு நேரடியாகச் செல்லுங்கள்.
தேவைப்பட்டால், அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வத் தொடர்புவழி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை உண்மையானதா என்பதை உறுதிசெய்யுங்கள்.
கூடுதலாகச் செலவிடும் சில நொடிகள்கூட மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் பெருமாற்றத்தை ஏற்படுத்தலாம்.
நமது வாழ்க்கையின் பல அம்சங்கள் இணையத்திற்கு மாறிவரும் நிலையில், நமது அடையாள ஆவணங்களைப் பாதுகாப்பதைப் போலவே மின்னிலக்க அடையாளத்தையும் பாதுகாப்பது முக்கியமாகிறது.
இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு
நீங்கள் தொடங்காத எந்தவோர் உள்நுழைவு அல்லது அடையாள உறுதிப்படுத்தல் கோரிக்கையையும் அங்கீகரிக்காதீர்கள்.
உங்கள் சிங்பாஸ் உங்கள் அடையாளம். அதைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.
