தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உற்ற நேரத்தில் உதவுவது உயிரைக் காப்பாற்றும்

3 mins read
3350b5df-e111-4721-9ad7-c8f980621f47
காவல்துறை அதிகாரிகளுடன் பொது உணர்வு விருது பெற்ற கோமதி ஜெயகுமார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஒன்றிணைந்து வாழும் சமூகத்தின் சிறப்பான வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது, ஒருவருக்கொருவர் பகிரும் அன்பும் கவனிப்புமே என்பதை நிரூபித்துள்ளது அண்மையில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடந்த ஒரு சம்பவம்.

வாரயிறுதியில் மாலைப் பொழுதைக் கழிக்க தம் குடும்பத்தினருடன் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்குச் சென்றிருந்தார் கோமதி ஜெயகுமார். ஒரு நிழற்குடையில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது 20 வயது மதிக்கத்தக்க இளையர் ஒருவர் அங்கு வந்து அமர்ந்தார்.

தம் பையிலிருந்து அடுத்தடுத்து மூன்று பானங்களை எடுத்து பதற்றத்துடன் அவர் அருந்துவதை கோமதி குடும்பத்தினர் கவனித்தனர். அந்த இளையர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததையும் ஏதோ முணுமுணுத்ததையும் அவர்கள் கவனித்தனர்.

ஒருவேளை மனப்பிறழ்ச்சி கொண்ட இளையராக இருக்கக் கூடும். அவரிடம் பேசினால் பிரச்சினை எழுமோ என அஞ்சி அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

எனினும், உளவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள கோமதி, அந்த இளையர் மன அழுத்தத்தில் இருக்கலாம் எனச் சந்தேகித்தார். அவர் முணுமுணுப்பது என்ன என்பதை அவர் கூர்ந்து கவனித்தார்.

சீன இளையரான அவர் ஆங்கிலத்தில் தனக்குள் “இதுதான் சரியான நேரம். காத்திருந்தது போதும். இரவு 12 மணிக்குள் செய்தாக வேண்டும்” என்று கூறியபடி கடல் அலைகளை உற்றுநோக்கத் தொடங்கினார்.

அவருக்கு கவனிப்பு தேவை என உணர்ந்த கோமதி, உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் வரும்வரை அந்த இளையரிடம் பேச்சு கொடுத்து, அதிகாரிகள் வந்த பின்னரே வீடு திரும்பினார் கோமதி.

அந்த இளையர் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இருந்ததாகவும் சரியான நேரத்தில் கவனித்ததால் அதிகாரிகள் அவரைக் காப்பாற்றியதாகவும் சில வாரங்களுக்குப் பின்னர் கோமதிக்கு காவல்துறை மூலம் தெரிய வந்தது.

அந்த இளையருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் கூறினர். கோமதியின் விழிப்புணர்வையும் செயல்பாட்டையும் பாராட்டி, அவருக்குப் பொது உணர்வு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறிய செயல் பெரும் விளைவை ஏற்படுத்தலாம்

“அன்றாடம் பல பொது இடங்களுக்குச் செல்கிறோம். நம் கண்களுக்கு ஏதேனும் வேறுபட்டுத் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்,” என்று சொன்னார் அரசாங்க ஊழியரான கோமதி.

“பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் என எதுவாயினும் தயங்காமல் தெரியப்படுத்த வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஒருவர் நடந்துகொள்ளும் விதத்தைக் கவனித்து செயல்படுவது சில நேரங்களில் அவர்கள் தவறான முடிவை எடுக்காமல் காக்கும் என்றார் அவர்.

பொதுமக்கள் செலவு செய்யும் சில நிமிடங்கள் ஒரு உயிரைக் காக்கும் என்றால் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டுமென வலியுறுத்தினார் அவர்.

“காவல்துறை எந்தத் தகவலையும் புறக்கணிப்பதில்லை. நாம் கவனிப்பது அப்படியொன்றும் பெரிய பாதிப்புள்ள செயல் இல்லையோ எனும் கவலை வேண்டாம். எதுவும் செய்யாமல் இருப்பதை விட இயன்றதைச் செய்வது சிறந்தது. பயமின்றி, கவலையின்றி அனைவரும் சமூகத்தில் பொறுப்புடன் பங்காற்றுவது நல்லது,” என்றும் கோமதி சொன்னார்.

உதவி தேவைப்படுவோர் கீழ்க்காணும் எண்களைத் தொடர்புகொள்ளலாம்:

மனநலக் கழகத்தின் மனநல உதவி எண்: 6389 2222 (24 மணி நேரம்)

சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம்: 1800 221 4444 (24 மணி நேரம்) / 1 767

சிங்கப்பூர் மனநலச் சங்கம்: 1800 283 7019

‘சில்வர் ரிப்பன்’ சிங்கப்பூர்: 6386 1928

டிங்கிள் ஃப்ரண்ட்: 1800 274 4788

சமூக சுகாதார மதிப்பீட்டுக் குழு 6493 6500 / 1

ஆலோசனைச் சேவை டச்லைன் (ஆலோசனை): 1800 377 2252

டச்லைன் (மூத்தோர், பராமரிப்பாளர்களுக்கு): 6804 6555

கேர் கார்னர் ஆலோசனை நிலையம்: 1800 353 5800

குறிப்புச் சொற்கள்