‘இளமையில் கல்’ என்ற ஆத்திசூடிக்கேற்ப, தமிழ்மொழியை வலுப்படுத்தும் நோக்கில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் பயிலரங்கு ஒன்று தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்பட்டது.
தேசிய நூலகக் கட்டடத்தில் இந்தியன்.எஸ்ஜி அமைப்பின் ஏற்பாட்டில் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) தமிழ்க் கட்டுரைப் பயிலரங்கு சனிக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்றது.
தொடக்கநிலை 5, 6ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுத்தாற்றலையும் பேச்சுத்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலவசமாக நடத்தப்பட்ட இப்பயிலரங்கில் கட்டுரை எழுதுவதற்கான அடிப்படை உத்திகள், எண்ணங்களைச் சீராக ஒருங்கிணைக்க உதவும் ‘கருத்து வரைபடம்’, குழு விவாதங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் சிந்தனைகளை எவ்வாறு தெளிவாகவும் ஆக்கபூர்வமாகவும் வெளிப்படுத்துவது என்பதை அறிந்துகொண்டனர்.
“இந்தப் பயிலரங்கிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ‘பெற்றோர்’ என்பதற்குப் பதிலாக ‘ஈன்றோர்’ போன்ற பல புதிய சொற்களையும் அறிந்துகொண்டேன். முக்கியமாக, ஒரு கதையை எவ்வாறு சுவாரசியமாக எழுதுவது என்பது பற்றியும் கற்றுக்கொண்டேன். இவை அனைத்தையும் எனது தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் நிச்சயம் பயன்படுத்துவேன்,” என்றார் சங்காட் தொடக்கப்பள்ளி மாணவி தனிஷ்கா பாலாஜி, 12.
“நான் தமிழில் மேலோட்டமாக எழுதுவதாக என் ஆசிரியர் கூறுவார். ஆனால், இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட பிறகு, கட்டுரை எழுதுவது பற்றியும் இனிய தொடர்களைப் பயன்படுத்தி என் எழுத்தாற்றலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் தெரிந்துகொண்டேன்,” என்றார் புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி மாணவர் செல்வகுமார் தன்வந்த்ராஜ், 12.
இந்தியன்.எஸ்ஜி அமைப்பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கல்யாண்குமார், “மாணவர்களின் தமிழ்மொழி வளத்தை அதிகரித்து, தமிழ்மீது அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதே எங்களது குறிக்கோள்.
“பாடம் நடத்தப்படும் முறையைப் பற்றி பெற்றோரும் அறிந்து, தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவுவது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்தப் பயிலரங்கிற்கு அவர்களை அழைத்திருந்தோம்,” என்றார்.


