குவீன்ஸ்டவுன் சமூகத்தினரை இணைத்த நோன்பு துறப்பு

குவீன்ஸ்டவுன் சமூகத்தினரை இணைத்த நோன்பு துறப்பு

2 mins read
b56a82a1-b1ce-4055-9dec-51c991138b56
செட்டியார்கள் கோயில் குழுமம் ஏற்பாடு செய்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் இணைந்த குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்கள். - படம்: அனுஷா செல்வமணி

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் வசித்து வரும் திருவாட்டி மைதீன் ஃபாத்திமா, 38, தம் பிள்ளைகளுடன் அண்மையில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இரு பிள்ளைகளுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருவாட்டி மைதீன் ஃபாத்திமா.
இரு பிள்ளைகளுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருவாட்டி மைதீன் ஃபாத்திமா. - படம்: அனுஷா செல்வமணி

குவீன்ஸ்டவுன் சமூக நிலையத்தில் இடம்பெற்ற அந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 150 பேர் கலந்துகொண்டனர். குவீன்ஸ்டவுன் வட்டாரத்தைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து புனித ரமலான் மாதத்தில் இன்புற நிகழ்ச்சி வழியமைத்தது.

செட்டியார்கள் கோயில் குழும ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரின் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களிடையே நட்பு, கருணை, நல்லிணக்கத்தைப் போற்றும் அர்த்தமுள்ள ஒரு பாரம்பரியத்தைத் தொடர்ந்தது.

முன்னர் குவீன்ஸ்டவுன் இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் உறுப்பினராக இருந்த திருவாட்டி மைதீன் ஃபாத்திமா, இத்தகைய நிகழ்ச்சிகள் சமூக ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக சொன்னார்.

இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடும்பங்களுக்கு பண்டிகைக்கால அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

“கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி நமது சமூகத்தினர் ஒன்றிணைவதற்கும், பல்வேறு பண்பாடுகள், சமயங்களுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பாக அமைந்து வருகிறது. வெறும் உணவைப் பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் குடும்பங்களுக்குப் பண்டிகைக்கால அன்பளிப்புத் தொகுப்புகளை வழங்குவது, முக்கியமான தருணங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதன் அவசியத்தையும் சமூகத்திற்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது,” என்று செட்டியார்கள் கோயில் குழுமத்தின் தலைவர் மாணிக்கம் நாச்சியப்பன், 62, கூறினார்.

குறிப்புச் சொற்கள்