இன நல்லிணக்க நிகழ்ச்சி: உள்ளூர் இளையர்களுடன் கைகோத்த வெளிநாட்டு ஊழியர்கள்

இன நல்லிணக்க நிகழ்ச்சி: உள்ளூர் இளையர்களுடன் கைகோத்த வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
0ec687ca-e7ed-4bae-a701-bf331eecb77e
இன நல்லிணக்க நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள். - படம் : ஆயிஷா ரோஸ்

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 21ஆம் தேதி, இன நல்லிணக்க தினமாக அனுசரிக்கப்படுவதைக் குறிப்பிட்ட மனிதவள அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், “இது, நமது அமைதியும் ஒருமைப்பாடும் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல என்பதை நினைவூட்டும் முக்கிய அங்கமாகும். அவை மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட பல்லினப் பண்பாட்டுச் சமூகத்தில் இணக்கமாக வாழ்வதற்கான பொதுவான அர்ப்பணிப்பு மூலம் கட்டியெழுப்பப்பட்டன,” என்று கூறியுள்ளார்.

இம்மாதம் ஜூலை19ஆம் தேதி, சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இன நல்லிணக்க தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திரு ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மனிதவள அமைச்சின் ‘அஷ்யூரன்ஸ், கேர் அண்ட் என்கேஜ்மென்ட்’ (ACE) குழுவின் ஆதரவுடன், ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ் (HIA), 24 ஏ‌ஷியா ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் என 600 பேருடன் உள்ளூர்த் தொண்டூழியர்கள் 200 பேரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய ஆடைகளில் இல்லப் பணிப்பெண்கள் சுபினா, 47 (இடது), கெமெசெடின் கால்டெரான், 42.
பாரம்பரிய ஆடைகளில் இல்லப் பணிப்பெண்கள் சுபினா, 47 (இடது), கெமெசெடின் கால்டெரான், 42. - படம் : ஆயிஷா ரோஸ்

“இங்கு நான் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எனது நண்பர்களைச் சந்தித்தேன். அவர்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுகள் நடத்தப்பட்டதுடன் பல உணவு வகைகளைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அவை அனைத்தையும் கண்டு ரசித்தேன்”, என்றார் 31 வயதான வெளிநாட்டு ஊழியர் பிரவீன் பாஸ்கரன் ராஜதங்கம்.

இந்தோனீயா, பங்ளாதேஷ், பிலிப்பீன்ஸ் என மூன்று நாடுகளின் கூடங்களிலும் அவர்களின் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் உணவு முறைகளும் அவர்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன என்று பிரவீன் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரியும் இல்லப் பணிப்பெண் சுபினா, 47, இந்தோனீசியாவைச் சேர்ந்தவர். “எங்கள் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், நானே நெய்த ‘பாஜு கெபாயா’ உடையை இந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்துள்ளேன். உணவு, உடை, மொழி உள்ளிட்ட பிற சமூகங்களின் பாரம்பரியங்களைப் பற்றி இங்கு அறிந்துகொண்டேன். எதிர்காலத்தில் இது போன்ற மேலும் பல இன நல்லிணக்கக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.
இன நல்லிணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
இன நல்லிணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோர். - படம் : ஆயிஷா ரோஸ்

இந்த நிகழ்ச்சியில் ‘ஹேஷ் பீஸ்’ போன்ற 19 சமூகப் பங்காளிகளும், சிண்டா இளையர் மன்றம் உள்ளிட்ட 12 இளையர் பங்காளிகளும் பங்கேற்றனர். சிண்டா இளையர் மன்றத் தலைவரான 30 வயது டேஷ் சண்முகம், கடந்த எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர் சமூகத்திற்குத் தொடர் ஆதரவை வழங்கி வருகிறார்.

“வெளிநாட்டு ஊழியர்களுடன் நீடித்த நல்லுறவை மேம்படுத்துவதற்கு உள்ளூர்த் தொண்டுழியர்கள் ஒரு பாலமாகத் திகழ்கின்றனர். இதுபோன்ற இன நல்லிணக்க நிகழ்ச்சிகள் பேசி, பழகி, புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்குள் ஓர் இணக்கமான சூழல் உருவாவதற்கும் நல்வாய்ப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக, அடுத்த தலைமுறை இளைய தொண்டூழியர்களுக்குச் சமூகத்தில் ஆக்ககரமான தாக்கத்தை உருவாக்கக் கற்றுத் தருகின்றன,”என்றார் குமாரி டேஷ்.

பாங்க்ரா நடனமணிகள்.
பாங்க்ரா நடனமணிகள். - படம்: ஆயிஷா ரோஸ்

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பாங்க்ரா நடனமும் இல்லப் பணிப்பெண்களும் தேசியக் கல்விக்கழகம், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களும் இணைந்து வழங்கிய கூட்டுப் பாரம்பரியக் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்