பரதநாட்டியம், களரிப்பயிற்று, கர்நாடக சங்கீதம் ஆகிய பாரம்பரியக் கலைகள் குறித்து பல்வேறு வயதினருக்கும் அறிமுகப்படுத்தியது ‘ராதே ஜக்கியுடன் ஓர் உரையாடல்’ நிகழ்ச்சி.
பிரபல நடனக் கலைஞரும் கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் மகளுமான ராதே ஜக்கி, அவரது குழுவுடன் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகமும் (‘சிஃபாஸ்’) ‘ப்ரொஜெக்ட் சமஸ்க்ரிதி’ அமைப்பும் இணைந்து, மே 2, 3ஆம் தேதிகளில் மேடையேறிய ‘அனுமார்கா’ நடன நாடகத்திற்காக அவர் சிங்கப்பூர் வந்துள்ளார்.
புதன்கிழமை (ஏப்ரல் 29) தேசிய கல்விக்கழகத்தில் நடந்த அந்நிகழ்ச்சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் பலர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர்.
“ப்ரொஜெக்ட் சமஸ்க்ரிதி’, கலை என்பது அனைவருக்குமானது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆகையால், பலதரப்பட்ட வயதினருக்கு ஏற்றவாறு கலைகளை அறிமுகப்படுத்த எண்ணினோம்,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் 29 வயது ப்ரியதர்ஷ்னி வித்யபிரகாஷ்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கலைப் பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் கண்டு பெருமிதம் கொண்டதாகவும் அவர் கூறினார்.
‘ப்ரொஜெக்ட் சமஸ்க்ரிதி’, அனைவரது வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு வகையில் கலைகளை அறிமுகப்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டதாக ராதே ஜக்கி கூறினார்.
“அனைவரையும் முழு நேரக் கலைஞர்களாக மாற்றுவது எங்கள் குறிக்கோள் அல்ல. அனைவரும் தங்களால் முடிந்தவரை வீட்டில் ஒரு பாட்டாவது பாடுவது, நடனம் ஆடுவது, உடலை வலுவாக வைத்திருப்பது ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“அக்குறிக்கோளை எட்டும் ஒரு படியாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குச் சில கலைப் பயிற்சிகளை அறிமுகப்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி,” என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 வயது நெக்சா ஷிபு, தனக்கு இந்த அனுபவம் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்ததாய்ச் சொன்னார்.
“நான் மின்னியல், மின்னணுப் பொறியியல் துறையில் பட்டக்கல்வி பயில்வதால் பொதுவாக நெடுநேரம் மேசையில் அமர்ந்துதான் வேலை பார்ப்பேன். இந்நிகழ்ச்சியில் களரிப்பயிற்று, பாடல் பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபட்டது எனக்குப் புதிய அனுபவமாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.
மற்றொரு பங்கேற்பாளரான 51 வயது நிதி நிறுவன இயக்குனர், சிந்து கிருஷ்ணா, தனது கலை ஆர்வத்திற்கு இந்நிகழ்ச்சி தீனி போட்டதாகச் சொன்னார்.
இசை, நடனம் ஆகிய கலைகளில் கணிதம், வடிவியல் ஆகியவை எத்தகைய அங்கம் வகிக்கின்றன என்பதைக் கற்றது ஆச்சரியம் அளித்ததாகவும் அவர் கூறினார்.

