மறைந்த நண்பனுக்காக 40 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடிய ராஃபிள்ஸ் ஹாக்கி நாயகர்கள்

காலத்தை வென்ற ‘ராஃபிள்ஸ்’ ஹாக்கி காவியம்

மறைந்த நண்பனுக்காக 40 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடிய ராஃபிள்ஸ் ஹாக்கி நாயகர்கள்

5 mins read
98d5e418-9eb1-4603-87dc-02c314ddd5e9
ஃபேரர் பார்க் விளையாட்டு மையத்தில் 1986ஆம் ஆண்டு வெற்றிக் கிண்ணங்களுடன் ராஃபிள்ஸ் ‘ஏ’ பிரிவு அணியினர். - படம்: ராஃபிள்ஸ் 1986 ஹாக்கி அணி
multi-img1 of 4
Google News Preferred Icon
வரலாற்றுச் சுவடுகளாய் மாறிப்போன 1986 ராஃபிள்ஸ் ஹாக்கி அணியின் நினைவுக் குறிப்புகளை பள்ளி முதல்வரிடம் வழங்கிய (இடமிருந்து) முன்னாள் மாணவர்கள் இளங்கோ தனபாலன், செல்வம் சத்தனம், சுதர்ஷன் சுந்தரம்.
வரலாற்றுச் சுவடுகளாய் மாறிப்போன 1986 ராஃபிள்ஸ் ஹாக்கி அணியின் நினைவுக் குறிப்புகளை பள்ளி முதல்வரிடம் வழங்கிய (இடமிருந்து) முன்னாள் மாணவர்கள் இளங்கோ தனபாலன், செல்வம் சத்தனம், சுதர்ஷன் சுந்தரம். - படம்: ராஃபிள்ஸ் 1986 ஹாக்கி அணி
1986ஆம் ஆண்டு  வெற்றிக் கிண்ணத்துடன் ராஃபிள்ஸ் ‘ஏ’ பிரிவு பெண்கள் அணி.
1986ஆம் ஆண்டு வெற்றிக் கிண்ணத்துடன் ராஃபிள்ஸ் ‘ஏ’ பிரிவு பெண்கள் அணி. - படம்: ராஃபிள்ஸ் 1986 ஹாக்கி அணி

காலம் மனிதர்களைப் பல திசைகளில் நகர்த்திச் சென்றாலும், பள்ளி நாள்களில் விளையாட்டுத் திடலில் உருவான நட்பும் பிணைப்பும் என்றும் மறைவதில்லை.

1922ஆம் ஆண்டுமுதல் ஹாக்கி விளையாடிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் 1986ஆம் ஆண்டு என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் ஆண்டு. 

சிங்கப்பூர் பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கித் தொடரில் மாபெரும் சாதனையைப் படைத்த அந்த 1986ஆம் ஆண்டின் நாயகர்கள், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் மீண்டும் ஒன்றுகூடி களத்தில் இறங்கினர். 

அது, வெறும் வெற்றியைக் கொண்டாடுவதற்கு மட்டுமன்று; தங்களை வெற்றியாளர்களாக வழிநடத்தி, கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தனது 49வது வயதில் உயிரிழந்த தங்கள் அன்பு நண்பனும் ‘பி’ பிரிவு (17 வயதுக்குட்பட்டவர்களுக்கானது) அணித்தலைவருமான மொஹாஜீர் செல்வராஜ் சத்தனத்தின் நினைவைப் போற்றுவதற்காகவும் அந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ந்தது. 

அதிகாலை வியர்வையும் வகுப்பறை நினைவுகளும்

ஏறத்தாழ 40 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்த ராஃபிள்ஸ் முன்னாள் பள்ளி மாணவர்கள் அன்றைய இறுதிப்போட்டியை நினைவுகூர்ந்தனர்.

இறுதிப்போட்டியில் களம் கண்ட எதிரணிகள், வெற்றிகளைப் பழகிய வலிமைமிக்க அணிகளாகத் திகழ, மறுபுறம் ராஃபிள்ஸ் அணியின் பெரும்பாலான வீரர்கள் காயங்களால் கட்டுப்போட்டிருந்ததாகக் கூறிச் சிரித்தனர் அவர்கள். 

காயத்தைப் போக்க இயன்மருத்துவருமில்லை; வழிகாட்டுவதற்கெனத் தனிப்பட்ட பயிற்றுநருமில்லை. எந்தவொரு காயம் என்றாலும் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மருந்து ‘டைகர் பாம்’  மட்டுமே. சோர்வை விரட்டித் தெம்பூட்டக் கிடைத்த ஒரே பானம் தண்ணீர் கலந்த ஐசோடானிக்.  

சூரியன் உதிக்கும் வேளையிலேயே திடலுக்கு ஓடிவந்து, பள்ளி மணி அடிப்பதற்குள் ஒரு ஹாக்கி ஆட்டத்தை முடித்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க வகுப்பறைக்குள் ஓடிச்சென்று அமர்ந்த அந்தப் பள்ளிப் பருவத்தின் சோர்வறியா நாள்களை இன்று நினைத்து நெகிழ்ந்தனர் அந்த முன்னாள் மாணவர்கள்.

1986ஆம் ஆண்டில், ராஃபிள்ஸ் அணியினர் 5 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். 

ராஃபிள்ஸ் ஜூனியர் கல்லூரி ‘ஏ’ பிரிவு (20 வயதுக்குட்பட்டவர்கள்) மாணவ, மாணவியர் அணிகள் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒட்டுமொத்தமாக அள்ளியது அதுவே முதலும் கடைசியும் ஆகும். 

‘பி’ பிரிவு (17 வயதுகுட்பட்டவர்கள்) ஆண்கள் அணி, வரலாற்றிலேயே முதன்முறையாக 11பேர் கொண்ட ஹாக்கித் தொடரின் வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.  

இதில் சுவாரசியமான செய்தி என்னவென்றால், அன்றைய காலகட்டத்தில் ‘ஏ’ பிரிவு அணிக்கு அண்ணன் செல்வம் சத்தனமும், ‘பி’ பிரிவு அணிக்குத் தம்பி மொஹாஜீரும் தலைவர்களாக இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர் என்பதுதான்! 

தடைகளை உடைத்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும்

பயிற்றுநர் இல்லாத சூழலில், அணியின் நாயகனாகவும் வழிகாட்டியாகவும் நின்று வழிநடத்தியவர் ‘பி’ பிரிவு அணித்தலைவர் மொஹாஜீர். 

போட்டி தொடங்குவதற்குமுன் அந்த 30 நிமிடங்கள் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, “அது எப்படி இருக்கும் தெரியுமா?’’ என்ற கேள்வியுடனே பேசத் தொடங்கினார் அதே ‘பி‘ பிரிவில் அன்று இடம்பெற்றிருந்த திரு சுதர்ஷன் சுந்தரம், 56.

“எங்கள் அணியின் அர்ப்பணிப்பும், தலைவரின் ஈடுபாடும்தான் அனைத்துத் தடைகளையும் கடக்க வைத்தது...” என்று ‘பி’ பிரிவு வீரரான திரு சுந்தரம் கூறும்போது, இன்று உயிருடன் இல்லாத தன் அன்பு நண்பன் மொஹாஜீரின் நினைவால் வார்த்தைகள் வராமல் தொண்டை அடைக்க, கண்கள் கலங்கிச் சில நொடிகள் மௌனமானார்.

காலத்தால் அழியாத ‘கோல்’

“ஒருவேளை உங்கள் கையில் கால இயந்திரம் கிடைத்தால் எந்தத் தருணத்தை மீண்டும் பார்க்க விரும்புவீர்கள்?” என்ற கேள்விக்குத் திரு சுந்தரம் அளித்த பதில் நண்பர்கள் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

“எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று, இன்று எங்களுடன் இல்லாத எங்கள் தலைவர் மொஹாஜீர், திடலில் கீழே விழுந்து வீரியத்தோடு கோல் அடித்த அந்தக் காட்சியை மீண்டும் பார்க்கவே நான் ஏங்குகிறேன்,’’ என்றார் அவர்.

மாறிய தொழில்நுட்பம்! மாறாத நினைவுகள்!

அன்று ஹாக்கி ஆட்டம் ‘ஆஸ்ட்ரோ டர்ஃப்’ எனும் செயற்கைத் தரையில் ஆடப்படவில்லை.

அது பந்து எளிதாக வழுக்கிக்கொண்டு போகாத இயற்கையான புல்திடல். ஹாக்கி மட்டையின் எடையும் அதிகம், பந்தும் வேறு வகை. இன்று ஆட்டத்திடல், மட்டையின் எடை, நவீன வசதிகள் என எல்லாமே மாறிவிட்டன. 

ஆனால், 1986ஆம் ஆண்டில் ஆண்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ பிரிவுகள் மற்றும் மாணவிகள் அணி என அனைத்துப் பிரிவுகளும் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி, பெருவெற்றியைப் பதிவுசெய்த அந்த ஒரே ஒரு பொன்னான ஆண்டின் நினைவுகள் மட்டும் 40 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன!

டேரல் டேவிட் (நாடாளுமன்ற உறுப்பினர், அன்றைய ‘பி’ பிரிவு கோல்கீப்பர்):

1986ஆம் ஆண்டு  வெற்றிக் கிண்ணத்துடன் ராஃபிள்ஸ் ‘பி’ பிரிவு அணியினர். பின்வரிசையில் வலமிருந்து 2வதாக நீல நிறச் சட்டையில் டேரல் டேவிட். முன்வரிசையில் வலமிருந்து 3வது காலஞ்சென்ற மொஹாஜீர் சத்தனம் .
1986ஆம் ஆண்டு வெற்றிக் கிண்ணத்துடன் ராஃபிள்ஸ் ‘பி’ பிரிவு அணியினர். பின்வரிசையில் வலமிருந்து 2வதாக நீல நிறச் சட்டையில் டேரல் டேவிட். முன்வரிசையில் வலமிருந்து 3வது காலஞ்சென்ற மொஹாஜீர் சத்தனம் . - படம்: ராஃபிள்ஸ் 1986 ஹாக்கி அணி

“நாங்கள் வெற்றிபெறுவோம் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘மங்ஸ் ஹில்’ பள்ளி வலிமைமிக்க அணி. 

“ஆனால் எங்களிடம் இருந்த அசைக்க முடியாத நட்புணர்வும் குழு மனப்பான்மையும்தான் எங்களை வெற்றிபெற வைத்தது. எங்கள் நினைவில் இருக்கும் அந்தக் காட்சிகளிலிருந்து எவற்றை காலப் பெட்டகத்தில் மீண்டும் வைக்க விரும்புவேன் என்றால், அன்றைய மர ஹாக்கி மட்டையையும் நாங்கள் விளையாடிய இயற்கைப் புல்வெளியின் ஒரு துண்டையும் வைப்பேன்,” என்றார் திரு டேரல்.

செல்வம் சத்தனம் (’ஏ’ பிரிவு தலைவர்):

பெண்கள் அணியும், தன் தம்பி தலைமையில் விளையாடிய ‘பி‘ பிரிவும் ஏற்கெனவே வாகை சூடிவிட்டதால், நிச்சயம் வெற்றிக் கிண்ணத்தை எதிரணியிடமிருந்து தட்டிப்பறித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்ததாகக் கூறிச் சிரித்தார் திரு செல்வம்.

“எங்கள் ‘ஏ’ பிரிவு அணியில் பலர் காயத்துடன்தான் இறுதிப் போட்டியில் விளையாடினோம். ஆனால் பள்ளிக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்ற உணர்வு மட்டுமே இருந்தது. ‘ஒன்றிணைந்து செயலாற்றுவோம்’ (One for all, All for one) என்ற ராஃபிள்ஸ் உணர்வுதான் எங்கள் வெற்றியின் ரகசியம்,’’ என்றார் அவர்.

1986ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அப்போதைய நடப்பு வெற்றியாளர் விக்டோரியா தொடக்கக் கல்லூரியைக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகொண்டது ராஃபிள்ஸ் அணி.

அமர்ஜித் சிங் & இளங்கோ தனபாலன், ‘ஏ’, ‘பி’ பிரிவு வீரர்கள்:

“கடந்த காலத்தில் நாங்கள் அடைந்த தோல்வியே எங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்தது. பள்ளிக்கு எந்த அவமானமும் வரக்கூடாது, பெருமை சேர்க்க வேண்டும் என்ற மனவுறுதியுடன் ஆடினோம்,’’ என்று இருவரும் கூறினர்.

சிரித்த முகத்துடன், எந்தவோர் உறுதுணையும் இன்றி ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையே வெற்றிக் கிண்ணத்தை தங்கள் வசமாக்கியதாக நினைவுகூர்கையில் கண்கலங்கினார் திரு இளங்கோ.

பள்ளியால் எட்டிய மேன்மை

அன்று வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி விளையாடிய அந்தப் பள்ளி மாணவர்கள், இன்று சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் மிளிர்கின்றனர்:

வழக்கறிஞர், மருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு உயர்பதவிகளை வகிக்கும் இவர்கள், தங்களுடைய இந்த வெற்றிக்கு ராஃபிள்ஸ் பள்ளி கற்றுக்கொடுத்த ஒழுக்கமும் நற்பண்புகளுமே காரணம் எனக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.

வெற்றிக்கனியைப் பறிக்க உதவிய ‘ராஃபிள்ஸ் ஸ்பிரிட்’

மீண்டும் மட்டையைப் பிடித்து கோல் அடித்த ஹாக்கித் திடலில் இன்று பல ஆண்டுகள் கழித்து ராஃபிள்ஸ் திரு செல்வமும் திரு இளங்கோவும் மாறாத புன்னகையுடனும் கலங்கிய கண்களுடனும் மீண்டும் நின்றபோது, என்றும் இளமையான விளையாட்டு ஆசையும் அவர்களிடம் இன்னும் இருப்பதை அறிய முடிந்தது.

‘‘விளையாடினால் கல்வி பாதிக்கப்படும் என்று பலர் கருதுவதை இன்று பரவலாகக் கேட்க முடிகிறது. ஆனால், கடப்பாடும் திட்டமிடலும் ஒற்றுமையுணர்வும் இருந்தால் விளையாட்டினால் கிடைக்கும் நட்பும், வலிமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், எளிதில் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடும் மனப்பாங்கும் வானத்தையும் வசப்படுத்தும்; வாழ்விலும் நம்மை மேம்படுத்தும். அதற்கு நாங்களே சான்று,’’ என்று சிரித்தவாறு ஹாக்கித் திடலில் நடைபோட்டனர் ராஃபிள்ஸ் நாயகர்கள்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ராஃபிள்ஸ்ஹாக்கி