இந்தியாவில் ரக்பி உருமாற்றத்தை வழிநடத்தும் ராகுல் போஸ்

இந்தியாவில் ரக்பி உருமாற்றத்தை வழிநடத்தும் ராகுல் போஸ்

2 mins read
b5b8b8f4-4756-4906-886a-9892cf789c37
அண்மையில் சிங்கப்பூருக்கு வருகை தந்த ‘விஸ்வரூபம்’ படத்தின் வில்லனும் தற்போதைய ரக்பி இந்தியா தலைவருமான ராகுல் போஸ். - படம்: தப்லா!

கிரிக்கெட்டில் ஊறிப்போன இந்தியாவில் ரக்பி விளையாட்டுக்கென ஒரு கலாசாரத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார் நடிகரும் ரக்பி இந்தியா சம்மேளனத் தலைவருமான ராகுல் போஸ்.

அண்மையில் ‘எச்எஸ்பிசி சிங்கப்பூர் ரக்பி செவன்ஸ்’ எனப்படும் ஒரு குழுவில் எழுவர் இடம்பெறும் ரக்பி போட்டிகள் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டன. அப்போது, விமானப் பயணத்தின் நடுவே சிங்கப்பூருக்கு வந்தபோது ராகுல் போசைச் சந்தித்துப் பேசியது தப்லா! ஊடகம்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து திரு போஸ், ரக்பி இந்தியாவின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

“எனக்கு 14 வயதாக இருந்தபோது இந்த விளையாட்டின் எதிர்மறையான அம்சங்கள்தான் என்னைக் கவர்ந்தன,” என்றார் திரு போஸ். “இந்த விளையாட்டில் ஈடுபடும்போது ‘வன்முறை’யில் இறங்கலாம். மிகுந்த வீறியத்துடன் ‘களத்தில் இறங்கலாம்’, அது கொண்டாடவும்படும்,” என்றார் அவர்.

எனினும், இளம் வயதில் திரு போசுக்கு இருந்த அந்தத் துடிப்பு காலப்போக்கில் வேறு வடிவம் எடுக்கத் தொடங்கியது.

“இந்த விளையாட்டில் ஒருவகை அழகும் சீரான போக்கும் இருப்பதை உணர்ந்தேன்; அதை மிகவும் நேசிக்கத் தொடங்கினேன்,” என்றும் அவர் சொன்னார்.

“இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விளையாட்டாளர்கள் இந்த விளையாட்டை மிகுந்த துடிப்புடனும் உற்சாகத்துடனும் விளையாடுவது எனக்குச் சொல்ல முடியாத அளவில் மகிழ்ச்சி தருகிறது. பொருளியல் ரீதியாகச் சிரமப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விளையாட்டின் மூலம் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன்,” என்று திரு போஸ் பெருமைப்பட்டுக்கொண்டார்.

ரக்பி விளையாட்டு ஆரம்பக் காலத்தில் இந்தியாவில் கால் பதித்தபோது அதில் ஈடுபட்டவர் போஸ். 1998ஆம் ஆண்டு இந்திய ரக்பி அணியில் அவர் விளையாடினார். அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா முதன்முறையாக அனைத்துலக ரக்பி போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியது.

இப்போது போசுக்கு வயது 58.

ரக்பி இந்தியா தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரக்பி இன்னமும் இந்தியாவில் வளர்ந்துவரும் நிலையில்தான் உள்ளது. நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் பெரும்பாலும் வசதி குறைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரக்பி விளையாடி வருகின்றனர். ரக்பிக்கென சரியான உள்கட்டமைப்பும் நிதி ஆதரவும் அந்நாட்டில் இல்லை.

அதேவேளை, முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் இருக்கவே செய்கின்றன. ஆசிய தேசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்தியப் பெண்கள் அணி முன்னேறியுள்ளது. அணி, ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெறும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

முன்னதாக, வாய்ப்புகள் அறவே இல்லாததை திரு போஸ் சுட்டினார்.

“நீங்கள் வெற்றிபெறும்போது ஆதரவாளர்கள் முன்வருவர். வெற்றிபெறும்போது ரசிகர்கள் அதிகரிப்பர்,” என்றும் திரு போஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தப்லா! ஊடகத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

குறிப்புச் சொற்கள்