‘நம் மரபு: ஒரு பார்வை’யில் ராஜஸ்தானின் கல்பேலியா நடனம்

‘நம் மரபு: ஒரு பார்வை’யில் ராஜஸ்தானின் கல்பேலியா நடனம்

படம்: த.கவி

06 Jun 2026 - 8:00 am

2 mins read

ராஜஸ்தானின் பொன்னிற மணல்வெளிகளில் தோன்றி, உலகெங்கும் மனங்களைக் கொள்ளைகொண்ட கல்பேலியா நடனம், சிங்கப்பூர் மேடைகளிலும் தடம் பதித்துள்ளது.

பாம்பின் அசைவுகளை நினைவூட்டும் வளைந்து நெளியும் உடலசைவுகளையும், கருநிற ஆடையில் சுழன்று ஆடும் நேர்த்தியையும் கொண்ட இந்த நடனத்தின் சுவாரசியமான பின்னணியைத் தமிழ் முரசும் ஆட்டம் அமைப்பும் இணைந்து வழங்கும் ‘நம் மரபு: ஒரு பார்வை’ எனும் காணொளித் தொடர் விவரிக்கிறது.

கல்பேலியா நடனத்தை அரங்கேற்றி நடனக் கலைஞர்.
கல்பேலியா நடனத்தை அரங்கேற்றி நடனக் கலைஞர். - படம்: த.கவி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பிளனேடில் நடைபெற்ற ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியின்போது, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் கல்பேலியா நடனத்தை அரங்கேற்றினர் ஓம்கார் ஆர்ட்ஸ் நடனப்பள்ளியின் நிறுவனரும் இயக்குநருமான திருவாட்டி ஸ்ரீதேவியின் மாணவிகள்.

‘பாம்பாட்டிகளின் நடனம்’ என்று பரவலாக அறியப்படும் கல்பேலியா, ராஜஸ்தானின் தனித்துவமான நாட்டுப்புறக் கலையாகும். புங்கி, பீன் உள்ளிட்ட தனித்துவமான குழல் வாத்தியங்களோடு, டோலக்கின் வேகமான தாளத்திற்கேற்ப நடனமணிகள் சுழன்றாடும் இந்தக் கலை, ஒரு நாடோடிச் சமூகத்தின் வாழ்வியலைக் கண்முன் காட்டும் கண்ணாடியாகும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பிளனேடில் நடைபெற்ற ‘ஆனந்த கொண்டாட்டம்’ நிகழ்ச்சியின்போது காண்போரை மெய்சிலிர்க்க வைத்த கல்பேலியா நடனம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பிளனேடில் நடைபெற்ற ‘ஆனந்த கொண்டாட்டம்’ நிகழ்ச்சியின்போது காண்போரை மெய்சிலிர்க்க வைத்த கல்பேலியா நடனம். - படம்: த. கவி

இக்கலை குறித்து அறிந்த ஆட்டம் அமைப்பு, ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் நகரில் பல ஆண்டுகளாய் ராஜஸ்தானின் மரபுக்கலைகளைப் பாதுகாத்து வரும் ‘குன்சார்’ நாட்டுப்புற இசை நிறுவனத்துடன் கைகோத்தது.

இதன் வாயிலாக, திருவாட்டி ஸ்ரீதேவி, 54, ஜெய்சால்மருக்கே பயணம் மேற்கொண்டு, அங்குள்ள பாரம்பரிய கல்பேலியா கலைஞரிடம் நேரடியாகப் பயில்வதற்கு ஏற்பாடானது. பதினைந்து தலைமுறைகளாக இக்கலையைப் பேணி வரும் கலைஞரிடமிருந்து இந்நடனத்தின் நுணுக்கங்களையும், பாரம்பரியப் பெருமையையும் அவர் ஆழமாக உள்வாங்கிக்கொண்டார்.

யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் தொட்டுணரமுடியாத கலாசார மரபுடைமைப் பிரதிநிதித்துவப் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் கல்பேலியா இடம்பிடித்தது.

உள்ளூர்க் கலைஞர்களுடனான மொழி இடைவெளி, முறையான பாடத்திட்டம் இல்லாத பாரம்பரியக் கற்பித்தல் முறை ஆகியவற்றைக் கடந்து இக்கலையைக் கற்றுக்கொண்ட அனுபவத்தைத் திருவாட்டி ஸ்ரீதேவி பகிர்ந்துகொண்டார்.

இன்று, உள்ளூர்ப் பள்ளிகளின் இந்திய நடன இணைப்பாட நடவடிக்கைக் குழுக்களும் கல்பேலியா நடனத்தைக் கற்று மேடையேற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளன.

பல்வேறு இந்திய மரபுக்கலை வடிவங்களைப் பயின்று மேடையேற்றிய கலைஞர்களின் நேரடி அனுபவப் பகிர்வாக இக்காணொளித் தொடர் அமைகிறது.

குறிப்புச் சொற்கள்