புனித ரமலான்: முஸ்லிம் முதியோர் 80 பேருக்கு உணவு விநியோகம்

புனித ரமலான்: முஸ்லிம் முதியோர் 80 பேருக்கு உணவு விநியோகம்

2 mins read
dc6916c2-a64e-4c23-a123-1a4a4fd989bf
விநியோகத்திற்காகத் தயார் செய்யப்பட்ட உணவு. - படம்: அப்துல் ஜலீல்
Google News Preferred Icon

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, எளிய முஸ்லிம் முதியோர் ஏறத்தாழ 80 பேருக்காக உணவு, பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. 

தொண்டர்கள் 10 பேரின் உதவியுடன் பீச் ரோட்டின் புளோக் 4ல் உள்ள பன்னோக்குக் கூடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

‘அஃபுலுவென்ட் நெட்வொர்க்’ நிறுவனர் அப்துல் ஜலீல், எஃப்.ஈ.ஜி மீடியா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கே. தயாளன் ஆகியோர் முக்கிய நிதியுதவியாளர்களாக ஆதரவு தந்தனர். 

2018ஆம் ஆண்டு  முதல் சமூகச் சேவையில் ஈடுபட்டுவரும் திருமதி சுஹைபா, 38, அவரது கணவர், தை ஹுவா குவான் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்துடன் இணைந்து இதனை ஒருங்கிணைத்தனர்.

இப்பகுதியில் அதிகமானோர் வாடகை வீடுகளில் வசிப்பதால், முதியவர்களுக்கு நேரடியாக உணவு வழங்குவது பேருதவியாக அமைந்துள்ளது. இத்தகைய நற்பணிகள் மூலம் சமுதாயத்தில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

தொண்டூழியர்களுடன் திரு அப்துல் ஜலீல், திருமதி சுஹைபா.
தொண்டூழியர்களுடன் திரு அப்துல் ஜலீல், திருமதி சுஹைபா. - படம்: அப்துல் ஜலீல்

“சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பது என்பது பயனாளிகளுடனான கலந்துரையாடலையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்றும், அவர்கள் தனிமையில் இல்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றார் திரு அப்துல் ஜலில், 41.

“பல்வேறு பகுதிகளில் உள்ள பின்தங்கிய நிலையில் இருப்பவர்களைக் கண்டறிவதும், பண உதவியோடு நிறுத்திக்கொள்ளாமல், நாங்கள் அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பொருள்களை விநியோகிப்பதையும் விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

“அர்த்தமுள்ள சேவை என்பது ஒருவருடைய பின்னணிக்கு அப்பாற்பட்டது என்றும், தேவையுள்ள எவருக்கும் பாரபட்சமின்றி அது வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்,” என்றார் திரு கே. தயாளன், 32.

“நோன்பு துறக்கும் வேளையில் வழங்கப்படும் ஒரு வேளை உணவு என்பது வெறும் பசியைப் போக்குவது மட்டுமன்று; அது ஓர் அன்பான செயல். தயாள குணத்தையும் நாம் அனைவரும் ஒரே சமூகமாக இணைந்துள்ளோம் என்பதையும் நினைவுபடுத்தும் ஒரு தருணம்,” என்றும் அவர் கூறினார்.

“தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு இது இன்னும் கடினமானது. இளையர்கள் சமூக ஊடகங்கள் போன்ற சரியான கருவிகளைப் பயன்படுத்தி இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் கூடுதலான தன்னார்வலர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் கருதுகிறேன்,” என்று தொண்டூழியராகப் பங்காற்றிய  திரு தயாளனின் தாயாரான திருவாட்டி தேன்மொழி, 64, கூறினார்.

 “அன்பு என்பது ஒரு குடும்பச் சொத்து. என் பெற்றோர் முதியவர்களாகும் வரை சமூகத்திற்குச் சேவை செய்ததை நான் பார்த்து வளர்ந்தேன். இப்போது எனது கடந்தகாலச் சிரமங்களை மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாலமாக மாற்றி, அந்தத் தொண்டை நான் தொடர்கிறேன்,” என்றார் திருமதி சுஹைபா. 

“உணவு வழங்குவதற்கும் அப்பால், தனிமையின் மௌனத்தை உடைப்பதே எனது நோக்கம். எந்த ஒரு முதியவரும் கவனிக்கப்படாமல் வாழவோ உயிரிழக்கவோ கூடாது. மாறாக, அவர்கள் சமூகத்தின் அரவணைப்பை உணர வேண்டும்,” என்றார் அவர். 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்