ஃபோர்ட் கேனிங் பூங்காவில் நோன்பு துறப்பு

ஃபோர்ட் கேனிங் பூங்காவில் நோன்பு துறப்பு

3 mins read
910e9e49-f999-4d23-baac-13c7be8d4c1e
கெராமட் சுல்தான் இஸ்கந்தர் ஷா நல்லடக்கத் தலத்தில் வழிபடும் மக்கள். - படம்: காமினி ஹஷ்வின்

ஃபோர்ட் கேனிங் பூங்காவில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்வு பல ஆண்டுகளாக ரமலான் 19ஆம் தேதியன்று , கெராமட் சுல்தான் இஸ்கந்தர் ஷா நல்லடக்கத் தலத்தில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி, இவ்வாண்டு மார்ச் 11ஆம் தேதி நடந்த நோன்பு துறப்பில் கிட்டத்தட்ட 200 பேர் வரை கலந்துகொண்டனர். 

வார இறுதி எனில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சிலர் கூறினர்.

நோன்பு துறப்பில் கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொண்டனர்.
நோன்பு துறப்பில் கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொண்டனர். - படம்: காமினி ஹஷ்வின்

சிங்கப்பூரின் கடைசி மன்னரும் மலாக்கா சுல்தானியத்தின் முதல் சுல்தானுமான சுல்தான் இஸ்கந்தர் ஷாவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதத் தலமாக இது கருதப்படுகிறது.

சிங்கப்பூரின் வரலாற்றுப் பழைமைக்கும் பண்பாட்டுப் பெருமைக்கும் ஒரு முக்கிய அடையாளமாக இது  திகழ்கிறது. 

கொவிட்-19 தொற்றுக் காலத்திலும் இந்த நிகழ்வு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்தியச் சமூகத்தினரும் சுற்றுப்பயணிகளும் இந்த நோன்பு துறப்பில் பங்கேற்றனர். 

ஒரு வெள்ளி நாணயங்களை அனைவர்க்கும் பகிர்ந்து, அவற்றைக் காணிக்கையாகச் செலுத்துவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் சிரமம் பாராமல் மலைமீது ஏறி நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள்.

நோன்பு துறப்பில் கலந்துகொள்பவர்கள் எந்த உணவை, எவ்வளவு கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிடுவதில்லை.

பேரீச்சம்பழம், உணவுப் பொட்டலங்கள், குடிநீர், பழச்சாறு எனப் பலரும் தங்களால் இயன்றதைக் கொண்டுவந்து அனைவருடனும் பகிர்ந்துண்டனர்.

அனைவரும் தங்களால் முடிந்த உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து பகிர்ந்து உண்டனர்.
அனைவரும் தங்களால் முடிந்த உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து பகிர்ந்து உண்டனர். - படம்: காமினி ஹஷ்வின்

மீதமாகும் உணவை வீணாக்காமல் மறுநாள் காலையில் சஹர் உணவிற்கும் சிலர் உண்ணுவதாகக் கூறினர்.

இந்த நிகழ்வு எந்த ஒரு விளம்பரமும் இன்றி கம்பத்துக் காலத்திலிருந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

திருவாட்டி பத்ருன்னிசா பேகம், 66 கடந்த 58 ஆண்டுகளாக இந்த இடத்திற்கு வந்து வழிபாடு செய்கிறார்.

“இங்கு அடக்கமாயிருப்பவர் பேராற்றல் படைத்தவர். அதனால்தான் எங்கள் மகனுக்கு அவருடைய பெயரை வைத்துள்ளோம். நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை எங்களை இங்கு கூட்டி வருவார். அப்போது எங்களுக்கு ஓர் உணவுக்கடையிலிருந்து சுமார் 100 பேருக்கு தேவையான சாப்பாடு, பரோட்டா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவற்றை சமைத்து எடுத்து வருவோம்,” என்று அவர் கூறினார்.

தாம்பூலத் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்கள்.
தாம்பூலத் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்கள். - படம்: காமினி ஹஷ்வின்

தொடக்கத்தில் திருவாட்டி பத்ருன்னிசாவின் தந்தை அவரை இங்கு அழைத்து வந்தபோது அதற்கான காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆயினும், தம் தந்தையார் மறைந்த பிறகும் அவர் இங்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

“இங்கு வந்து நாம் எதைக் கேட்டாலும் அது கைகூடும் என்பது ஒரு நம்பிக்கை. பலருக்கு இந்த நம்பிக்கை பலித்திருப்பதால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வருகிறார்கள்,” என்றார் திருவாட்டி பத்ருன்னிசா.

“நாங்கள் பாய், தண்ணீர் மற்றும் உணவுகளை எடுத்து வருவோம். அனைவரும் ஒன்று கூடி உணவைப் பரிமாறுவதை நீங்கள் பார்க்கலாம்,” என்றார் திருவாட்டி பத்ருன்னிசா. 

“திருமணத்திற்குப் பிறகு என் மனைவியுடன் இங்கு வரத் தொடங்கினேன். இதை முன்னின்று நடத்திய பெரியவர்கள் அவர்களின் கடைசிக் காலத்தில், எங்களால் முடிந்தால் இதைத் தொடர்ந்து நடத்துமாறு எங்களிடம் கூறினர். அதனால், எங்களால் முடிந்தவரை இதைத் தொடர்ந்து செய்கிறோம்,” என்றார் திருவாட்டி பத்ருன்னிசாவின் கணவர் இஸ்மதினூன் முகமது கனி, 69. 

“பாய் விரிப்பது, பெரிய தாம்புல தட்டுகளில் உணவுகளைத் தயார் செய்வது போன்ற வேலைகளுக்காக நான் மாலை 5:30 மணிக்கே என் குடும்பத்துடன் இங்கு வந்துவிடுவேன்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த  60 ஆண்டுகளாக தம் தந்தையுடன் இங்கு வந்துசெல்லும் திரு யூசுப் அஜீஸ், தற்போது இளையர்களும் பொறுப்புடன் நிகழ்ச்சியை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“பாரம்பரியத்தை மீட்டெடுப்பதும், உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பதும், அடுத்த தலைமுறைக்கு இந்தப் பண்பாட்டைக் கொண்டுசேர்ப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும்,” என்றார் அவர். 

நீண்ட காலமாக இந்த இடத்திற்கு வர வேண்டும் என விரும்பிய திரு எர்வின், 56, முதன்முறையாக இவ்வாண்டு நோன்பு துறப்பில் கலந்துகொண்டார். 

நோன்பு துறக்கத் தயாராகும் மக்கள்.
நோன்பு துறக்கத் தயாராகும் மக்கள். - படம்: காமினி ஹஷ்வின்

இங்கிருக்கும் அமைதியான மற்றும் ஆன்மிகச் சூழல் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் கூறினார்.

“நான் முஸ்லிம் இல்லையென்றாலும், இங்கு நிலவும் அன்பும் அமைதியும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன,” என்றார் திரு எர்வின்.

“இங்கு பெரும்பாலும் மலாய் முஸ்லிம்கள் வருவார்கள். அதே சமயம், தமிழ் முஸ்லிம்களும் இங்கு வந்து பயனடைந்தவர்களும் வருகிறார்கள்,” என்றும் அவர் கூறினார். 

குறிப்புச் சொற்கள்