நாடாளுமன்ற நியமன உறுப்பினரும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை நிபுணருமான இணைப்பேராசிரியர் ரஸ்வானா பேகம் அப்துல் ரஹீம், சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் புதிய நிர்வாக அவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அமைப்பின் நிர்வாக அவையில் சேவையாற்றிய இணைப்பேராசிரியர் ரஸ்வானா, 2022ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை துணைத்தலைவராக அங்கம் வகித்தார்.
சமூகச் சேவை ஆலோசனைக் குழுத் தலைவராக இருந்த இணைப்பேராசிரியர் ரஸ்வானா, சமூக நலத் திட்டங்களை ஆதரிக்கும் மன்ற முயற்சிகளை வழிநடத்தியுள்ளார்.
சட்டம், சமூக ஊழியம், குற்றவியல் ஆகிய துறைகள் உள்ளிட்ட பன்முகத்தன்மைமிக்க பின்புலனைக் கொண்டுள்ள இணைப்பேராசிரியர் ரஸ்வானா, தமது நிபுணத்துவத்தை இந்தப் புதிய பொறுப்புக்குக் கொண்டு வரும் நம்பிக்கையில் உள்ளார்.
2020லிருந்து அவைத்தலைவராகச் செயல்பட்டுவந்த திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம்மிற்கு அடுத்து இணைப்பேராசிரியர் ரஸ்வானா பதவி ஏற்கிறார். ‘ரைஸ் அபவ்’ (Rise Above) என்ற பெண்களுக்கான புனர்வாழ்வு இல்லம், ‘ரெட் ஸ்பேஸ்’ (RED Space) என்ற பெண்கள் ஆதரவு மையம் ஆகியவற்றை நிறுவியதில் திருவாட்டி ஹஸ்லினா முதன்மை பங்காற்றியுள்ளார்.
சிறந்த நிர்வாகம், தலைமைத்துவ மாற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருவாட்டி ஹஸ்லினா, மன்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றல் இணைப்பேராசிரியர் ரஸ்வானாவுக்கு இருப்பதாக உறுதிபட தெரிவித்தார்.
புதிய பொறுப்பை ஏற்பது குறித்து ஆவலாக இருப்பதாகக் கூறிய இணைப்பேராசிரியர் ரஸ்வானா, “நாம் செய்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. புதுப்பிக்கப்பட்ட நம் மேலவையுடனும் புதிய தலைமை நிர்வாகியான அயிதாரொயானி ஆதாம் முதலியவர்களுடனும் அணுக்கமாகப் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என்று தமது லிங்க்இன் தளத்தில் கடந்த வாரம் பதிவிட்டார்.

