இந்த மாத ஆரம்பத்தில், தேசிய பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அமைப்பு, ‘சங்கே முழங்கு’ என்ற அருமையான நிகழ்வில் பல்கலைக்கழக வளாகத்தில், மெய்நிகர் உலகில் ‘உலா’ வந்தனர்.
அதில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவரின் ஈடுபாடும் மெய்சிலிர்க்க வைத்தது. இயக்கம், கதை, வசனம், அதில் காதல், சோகம், ஏக்கம், நகைச்சுவை, ஆட்டம், பாட்டமென கல்யாண விருந்தே வைத்தனர். நடைமுறை வாழ்வில் நாம் தொலைத்த மகிழ்ச்சியை மெய்நிகர் உலகில் கொடுத்தனர். அதைக் கெடுக்க, அங்கேயும் ஒரு வில்லன். ஒரு தமிழனின் மகிழ்வை கெடுக்கும் இன்னொரு தமிழன், மெய்நிகர் உலகையும் விடவில்லை.
இந்த உலகிற்கு எப்போது செல்லலாம் என்று பார்வையாளர்களை ஏங்க வைத்தனர். இது கற்பனையாக இருக்கலாம், ஆனால் சாத்தியமற்றது என்று சொல்ல முடியாது. மெய்நிகர் உலகென்பது, அவரவரிடமே இருக்கிறது.
ஒவ்வொரு நடிகரும் அந்தப் பாத்திரமாகவே மாறினார். மாணவர்கள் என்பதையே நம்ப முடியவில்லை. அவர்களின் தமிழ் பற்றே காரணம் என்பது என் கருத்து. வாழ்த்துகள். நம் பிள்ளைகளை நாம் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவார்கள்.
சில பார்வையாளர்களின் கருத்துகளையும் சேர்த்து நமது அறிவுரை. நிகழ்ச்சியின் அவகாசம் கிட்டத்தட்ட 3 மணி நேரம். குறைத்தால் நல்லது. நிகழ்வு கிட்டத்தட்ட இரவு 11 மணிக்கு முடிந்தது. அதற்குப் பிறகு வீட்டிற்குச் செல்லும் பயணம் சிறிது சிரமமானது. 9 மணிக்குள் முடிந்தால் நல்லது. அனைத்துத் தமிழ் மாணவர்களும் ஒரே மேடையில் ஏறியது மாதிரி தோன்றியது. மாணவர்களைப் பிரித்து மற்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மீண்டும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் என்றும் மாணவர்களை வாழ்த்தட்டும்.