தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலைத்து நிற்கும் வர்த்தகங்களுக்குப் பெருமை சேர்க்கும் அங்கீகாரம்

4 mins read
4c8d22c1-c263-4dac-9a5e-f56cda69632e
தமது தொழில் பங்காளி கீர்த்தி ராஜேந்திரனுடன் (இடது) காந்தி உணவக உரிமையாளர் கார்த்திகேயன் வெங்கடேசன். - படம்: கார்த்திகேயன் வெங்கடேசன்

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு காலத்தால் அழியாத சான்று நம் மரபுடைமை வர்த்தகங்கள்.

இந்த வர்த்தகங்கள் சிங்கப்பூரின் பண்பாட்டை மட்டுமன்றி, பல தலைமுறைகளாகப் பேணிக்காக்கப்பட்ட கலை சிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகள் ஒரு வர்த்தகமாக நிலைத்திருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

அத்தகைய வர்த்தகங்கள் காலத்தின் வேகத்தில் மறைந்துவிடாதிருக்க வாடிக்கையாளர்களின் ஆதரவு ஒருபுறம் தேவைப்பட்டாலும் அரசாங்கமும் அவர்களை அடையாளம் கண்டு அந்த வர்த்தகம் அழியாமல் காக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் சிங்கப்பூர் மரபுடைமை வர்த்தகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய முன்னோடித் திட்டம் மரபார்ந்த வர்த்தகங்கள் குறித்த விழிப்புணர்வை உயர்த்தி அவற்றின் பங்களிப்பைப் பாராட்டி, மாறிவரும் சூழலிலும் அவை தொடர்ந்து பொருத்தமானதாகவும் மீள்திறன் கொண்டதாகவும் இருக்க, அவற்றின் முயற்சிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாகப் பேணப்படும் உணவு வகைகளை வழங்கும் கடைகள்முதல், புத்தகக் கடைகள், பாரம்பரிய உடைகளை உருவாக்கும் கலைஞர்கள்வரை மொத்தம் 42 மரபுடைமை வர்த்தகங்களுக்கு அண்மையில் மரபுடைமை வர்த்தகத் திட்ட அங்கீகாரம் கிடைத்தது.

பழமையின் மணம்

உள்ளே நுழையும்போது இது வெறும் கடையன்று, இது ஒரு குடும்பத்தின் கதை என்பதை உணர்த்துகிறது விஎஸ்எஸ் வருசை முகம்மது அண்ட் சன்ஸ் வாசனைத் திரவக் கடை.

நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள அக்கடை மரபும் வரலாறும் நிறைந்தது.

1924ல் தொடங்கப்பட்ட இத்தொழில் 102 ஆண்டுகளாக நீடித்து நிலைத்திருக்கிறது.

மூன்றாவது தலைமுறையாக அக்கடையை தற்போது அதன் நிறுவனரின் பேத்தி பெளசியா ராணி, 35, வழிநடத்துகிறார்.

இளவயதிலிருந்தே வர்த்தகத்தில் ஈடுபடுவது அவரது கடமை என்று சொல்லி வளர்க்கப்பட்ட பெளசியா, தம் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்.

முஸ்லிம்கள் தொழுகைகளுக்கும், புனித ஹஜ் யாத்திரைகளுக்கும் பயன்படுத்தப்படும் ‘அத்தர்’ நறுமணம் இக்கடையில் அதிக அளவில் விற்கப்படுகிறது.

மரபுடைமை வர்த்தகத் திட்டத்தில் தனது குடும்ப வர்த்தகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை நினைத்துப் பெருமிதம் கொண்டாலும், இத்திட்டம் முன்னரே இருந்திருந்தால் நலிந்துபோன வர்த்தகங்கள் இன்றும் நிலைத்திருக்க முடியும் என்கிறார் பெளசியா.

“என் தாத்தா கடையைத் தொடங்கிய நேரத்தில் எங்களுடன் பல வர்த்தகங்கள் இருந்தன. ஆனால், அவை இப்போது இல்லை,” என்றார் அவர்.

தொன்மையான வர்த்தகமாக இருந்தாலும் தன்னைப் போன்ற இளையரின் தாக்கம் தொழிலுக்கு மெருகூட்டுவதாக அவர் சொன்னார்.

தம் மூத்த சகோதரரையும் சகோதரியையும் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ள பெளசியா, தொழில் இவ்வளவு ஆண்டுகள் நிலைத்திருக்க வாடிக்கையாளர்களின் ஆதரவும் குடும்பத்தினரின் புரிந்துணர்வுமே காரணம் என்கிறார்.

தமக்குப் பிறகு தம் பிள்ளைகள் இத்தொழிலில் இறங்குவது சந்தேகம் என்றாலும் குடும்ப மரபு அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார் பெளசியா.

இந்த அங்கீகாரம் விஎஸ்எஸ் வர்த்தகம் இன்னும் பல காலம் நிலைத்திருக்க ஊக்கமாக இருப்பதாகத் தெரிவித்த பெளசியா, வருங்காலத்தில் கடைப் பக்கத்தில் ஒரு சிறிய ‘கஃபே’ அமைத்து அதில் தமது வாடிக்கையாளர்கள் காப்பி, தேநீர் அருந்த வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.

தம் தந்தையுடன் இளவயதிலிருந்தே வாசனை திரவ வர்த்தகத்தில்  ஈடுபட்டுவரும் பெளசியா.
தம் தந்தையுடன் இளவயதிலிருந்தே வாசனை திரவ வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பெளசியா. - படம்: விஎஸ்எஸ் வருசை முகம்மது அண்ட் சன்ஸ்

பல தலைமுறை கண்ட சுவை

லிட்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் காந்தி உணவகத்தை அறிந்திராதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

அதன் தற்போதைய உரிமையாளர் கார்த்திகேயன் வெங்கடேசன், 40, தொழிலுக்கு ஏற்றம் தரும் அங்கீகாரத்தைப் பலகாலமாகத் தேடி வந்துள்ளார்.

“உணவகமாக இருந்தாலும் ஒரு கடைவீட்டில் இருக்கும் உணவங்காடித் தொழில் என்றுதான் எங்கள் உணவகத்தைச் சொல்ல வேண்டும். அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், நன்கு அறிமுகமான முகங்கள் என இந்த உணவகத்தில் மரபு பின்னிப் பிணைந்துள்ளது,” என்றார் திரு கார்த்திகேயன்.

இத்தகைய மரபு வாய்ந்த தொழிலுக்குத் தேவையான அங்கீகாரம் இவ்வளவு நாள்கள் கிடைக்காத நிலையில், மரபுடைமை வர்த்தகத் திட்ட அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.

“எங்கள் தொழில் நீண்ட காலம் நிலைத்திருக்க இந்த அங்கீகாரம் தேவை. இளைய தலைமுறையினருக்கு மரபார்ந்த உணவங்காடிகளின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவும் இந்த அங்கீகாரம் வழியமைக்கும்,” என்றார் திரு கார்த்திகேயன்.

பல உணவங்காடி வர்த்தகங்களும் மூடுவிழா காணும் தற்போதைய நிலையில், தொடர்புடையதாக இருக்கவும் போட்டித்தன்மையுடன் செயல்படவும் இந்த அங்கீகாரம் உதவும் என அவர் நம்புகிறார்.

“ஊழியர் பற்றாக்குறை, பெருகிவரும் வெளிநாட்டு உணவகங்களின் எண்ணிக்கை எனப் பல சவால்கள் உள்ளன. இந்நிலையில், இத்திட்டம் மூலம் கிடைக்கவிருக்கும் சலுகைகள் எங்களுக்குக் கைகொடுக்கும்,” என்று அவர் கூறினார்.

சேலைப் பாரம்பரியம்

திருமணத்திற்குத் தேவைப்படும் சேலைகளிலிருந்து, கண்கவர் வண்ணங்களில் மிளிரும் சேலைகள்வரை லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள தாக்‌ஷாய்னி சில்க்ஸ் சேலை கடை சேலைகளைத் தாண்டி பாரம்பரியத்தின் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

தமது தொழில் பற்றிப் பேசிய மகாராணி ராஜகுமார், 69, தமது கடை மிக நுட்பமான சேலைகள், நேர்த்தியான குர்தாக்கள், குறையில்லாத் தையல் கொண்ட பஞ்சாபி உடைகளுக்காகப் பலரால் விரும்பப்படும் இடமாக மாறியுள்ளதாக சொன்னார்.

33 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் தாக்‌ஷாய்னி சில்க்ஸ் கடைக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களின் ஆதரவு மிகுந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஊக்குவித்ததால் மரபுடைமை வர்த்தகத் திட்டத்திற்கு விண்ணப்பித்தார் மகாராணி.

இந்த அங்கீகாரம் தனது தொழிலுக்கு அரசாங்க ஆதரவு இருப்பதை உறுதிசெய்வதாகக் கருதும் மகாராணி, தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இது ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகாலமாக ஒரே விநியோகிப்பாளரை நாடிவரும் மகராணி, தமது தொழிலுக்கு முதுகெலும்பாக இருப்பதும் அவர்தான் என்றார்.

“ஒரு வாடிக்கையாளருக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு கேட்டறிய வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் இன்பமானதொரு அனுபவத்துடன் கடையைவிட்டுச் செல்ல வேண்டும்,” என்கிறார் மகராணி.

மரபுடைமை வர்த்தகத் திட்ட அங்கீகாரம் மூலம் இந்தியர்களுக்கு அப்பாற்பட்டு இதர இனத்தவரும் சேலை கட்டும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இவரது விருப்பம்.

குடும்ப ஆதரவு தமக்குப் பெரிதும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்ட மகராணி, தமக்குப் பிறகு தம் பிள்ளைகள் இத்தொழிலை முன்னெடுத்துச் செல்வார்கள் என உறுதியாக நம்புகிறார்.

33 ஆண்டுகளாக தாக்‌ஷாய்னி சில்க்ஸ் சேலை கடையை நடத்தி வரும் மகராணி ராஜகுமார், 69.
33 ஆண்டுகளாக தாக்‌ஷாய்னி சில்க்ஸ் சேலை கடையை நடத்தி வரும் மகராணி ராஜகுமார், 69. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்