ரவி சிங்காரம்
பதினாறு வயதிற்குட்பட்டோர்க்கான சிங்கப்பூர் கிரிக்கெட் அணியிலும் 19 வயதிற்குட்பட்டோர்க்கான அணியிலும் விளையாடியுள்ள அத்வைத் சுவாமிநாதன், 18, சமூக நலத்திலும் அக்கறை செலுத்துபவர்.
தம் தந்தைமூலம் சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டிற்கு அறிமுகம் கண்ட அத்வைத், அடிக்கடி பெங்களூர் சென்றும் கிரிக்கெட் விளையாடுவார். அங்குத் திறமையான பல விளையாட்டாளர்கள் தரமான கிரிக்கெட் மட்டைகள் இல்லாமலிருப்பதை உணர்ந்து கவலைப்பட்டார்.
“ஆனால், சிங்கப்பூரிலோ நல்ல நிலையிலுள்ள கிரிக்கெட் மட்டைகள் பலவும் வீசி எறியப்படுவதை கண்டேன். அதனால், அவற்றைச் சேகரித்து, இந்தியாவில் புதுப்பித்து, வசதிகுறைந்த விளையாட்டாளர்களுக்கு வழங்கினோம்,” என்றார் அத்வைத். இம்முயற்சி, ‘பேட்ஸ் ஃபார் தி பெட்டர்’ எனும் பெயரில் 2023ல் தொடக்கம் கண்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று எஸ்பி ஜெய்ன் அனைத்துலக நிர்வாகப் பள்ளியில் நடந்த ‘இளஞ்சாதனையாளர் விருது’ விழாவில் விருதுபெற்ற ஒன்பது இளையர்களில் அவரும் ஒருவர். இவ்விழா தத்வா புரொடக்ஷன்ஸ், பண்டிஷ் பீட்ஸ் புரொடக்ஷன்ஸ், தொழில்முனைவர் பத்மஜா யராம்செட்டி ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்றது.
கைகோத்த கலை, சமூக நோக்கு
கலாசாரம், மேடைக் கலைகளுக்கான விருதைப் பெற்றார் கதக், இந்துஸ்தானி வாய்ப்பாட்டை 11 ஆண்டுகளாகக் கற்றுவந்துள்ள காஷிஷ் சிங்கல், 17.
அவர் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் ‘நாட்டிய விஷாரத்’ எனும் உயரிய பட்டம் மட்டுமன்றி, புதுடெல்லியிலும் வாய்ப்பாட்டுக்கான விருதை வென்றுள்ளார். இளம்பெண்களிடையே உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ‘GYNGIR’ எனும் இயக்கத்தையும் அவர் தொடங்கியுள்ளார்; தேசிய சிறுநீரக அறக்கட்டளையிலும் தொண்டூழியம் புரிகிறார். ‘பண்டிஷ் பீட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரான அவர், திறன்மிக்க இளங்கலைஞர்களுக்கு மேடையமைத்துத் தருகிறார்.
சிறப்புத் தேவை உடையவர்கள், புற்றுநோயாளிகள் போன்றோர் வடிவமைத்த உடைகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் ‘சிங்கப்பூர் ஃபேஷன் ரன்வே’யைச் சார்ந்த இருவருக்கும் விருதுகள் கிடைத்தன. தொழில்நுட்பம், வடிவமைப்பு, அனிமேஷன் ஆகியவற்றை நிர்வகிக்கும் திரு டேவிட் நோவன் போன்ஸ், மரினா சவுத் பியர் பகுதியில் உள்ள கடையின் மேலாளர் லோ விட்டோன் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டனர். நிறுவனர் திருவாட்டி ஈலீன் யாப், மகளிர் பிரிவில் விருது வென்றார்.
சுற்றுச்சூழல் பார்வை
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளம் பெற்ற சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவி சாதனா ரமேஷ், 22, ஆராய்ச்சிக்கான விருதை வென்றார்.
“சுற்றுப்புற மாற்றங்கள், கொள்கைகளால் பெண்மணிகள், குழந்தைகள், வசதிகுறைந்தோர் ஆகியோரே அதிகம் பாதிப்படைகின்றனர். எடுத்துக்காட்டாக, பருவநிலை மாற்றத்தால் விவசாயிகளும் வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வசிப்போரும் பாதிப்படைகின்றனர். இந்நிலையை மாற்ற, லாப நோக்கற்ற அமைப்புகளில் பணியாற்றவும் கொள்கை உருவாக்கத்தில் பங்காற்றவும் விரும்புகிறேன்,” என்றார் சாதனா.
மாணவர்களின் வளர்ச்சி
இவ்வாண்டு வைஸ் ஓக்ஸ் அனைத்துலகப் பள்ளியின் தலைமை மாணவரான ஆல்வின் சொர்ண சாமுவேல், 15, “பள்ளி தந்த வாய்ப்புகளால் ஒரே துறையில் கவனம் செலுத்தாமல் பலரிடமும் நட்பு ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது,” என்றார்.
கணிதத்தில் அளவற்ற ஆர்வம் கொண்ட வேல்முருகன் பவின், 15, ‘இந்தியா திறன் தேடல்’ போட்டியில் கணிதத்தில் முதல் நிலையில் வந்தவர். “எதிர்காலத்தில் அறிவியல் வல்லுநராகி, நன்மையளிக்கும் பலவற்றையும் கண்டுபிடிப்பேன்,” என்றார்.
“பத்து ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் வந்ததிலிருந்து நான் வெகுவாக முன்னேறியுள்ளேன். வெற்றிபெறாவிட்டாலும் அனைத்திலும் பங்கேற்க விரும்பினேன். விளையாட்டு வடிவமைப்பில் தொடங்கி பலவற்றையும் கற்றேன்,” என்றார் 2024ல் தலைமை மாணவராக இருந்த சிவா ஹரிஸ், 16.
“ஓட்டப்பந்தயம், மேசைப்பந்து, சதுரங்கம் போன்றவற்றால் என் தலைமைத்துவத் திறன்கள் வளர்ந்தன. எதிர்காலத்தில் கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறக்க விரும்புகிறேன்,” என்றார் நெலகுடித்தி ஹிமான்ஷு, 15.
விழாவின் நிறைவில், இளையர்களின் வெற்றிப் பயணங்கள் குறித்த கலந்துரையாடலை குளோபல் இந்திய அனைத்துலகப் பள்ளி மாணவர்கள் ஜான்வி பட்டும் ரிஷியும் வழிநடத்தினர். “இன்றைய இளையர்கள் தலைமைத்துவத்தை அதிகாரமாகப் பார்க்கக்கூடாது,” என்றார் ஜான்வி.


