கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்கு அங்கீகாரம்

3 mins read
9981b9e5-8e76-4515-a0b0-6eea44a0bbf1
பாஸ்கரீயம் கலை நிகழ்ச்சியில் ‘நாட்டிய கலா நிபுணர்’ விருதுடன் உள்ளூர் பிரபல நாடகக் கலைஞர் வடிவழகன் கௌரவிக்கப்பட்டார். - படம்: செய்யது இப்ராகிம்

அண்மையில் நடைபெற்ற பாஸ்கரீயம் கலை நிகழ்ச்சியில் ‘நாட்டிய கலா நிபுணர்’ விருதுடன் உள்ளூர் பிரபல நாடகக் கலைஞர் வடிவழகன் (வடி பிவிஎஸ்எஸ்) கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நாடகம், வானொலி, தொலைக்காட்சி என பல தளங்களில் நடிப்பு, எழுத்து, இயக்கம், தயாரிப்பு எனப் பலவற்றிலும் முத்திரை பதித்துள்ள அவர், சிங்கப்பூர் தமிழ் கலைத்துறைக்கு ஒரு பரிச்சயமானவராகத் திகழ்ந்து வருகிறார்.

குறிப்பாக, சிங்கப்பூர் நாடகத்துறைக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளை முன்னிறுத்தி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட கலைஞர்களுக்கு மேடை வழங்கும் பாஸ்கரீயம்

ஆகஸ்ட் 29 முதல் 31 வரை நடைபெற்ற இவ்வாண்டின் பாஸ்கரீயம் கலை நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து கலைஞர்களில் திரு வடியும் ஒருவர்.

கலாஷேத்திராவில் பயிற்சிபெற்ற பரதநாட்டிய ஆசிரியரும் சிஃபாசின் நடன அமைப்பாளருமான ஸ்ரீ பி.என். விகாஸ் ‘நாட்டிய கலா ஆசார்யா’ விருதுபெற்றார். உலகளவில் புகழ்பெற்ற பல்துறை இசைப் பாடகரான டாக்டர் பாக்யா மூர்த்தி ‘சங்கீத கலா பூஷணா’ விருதுபெற்றார். சிங்கப்பூர் ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ அமைப்பின் மூத்த இசை ஆசிரியர் ராஜலட்சுமி சேகர் ‘சங்கீத கலா ஆசார்யா’ விருதுபெற்றார்.

மறைந்த புகழ்பெற்ற உள்ளூர் பரதநாட்டியக் கலைஞர் உஷாராணி மணியத்திற்கு ‘நாட்டிய கலா பூஷணா’ விருது வழங்கப்பட்டது.

பாஸ்கர் கலைக் கழகத்தின் நிறுவனர் ஸ்ரீ கே.பி. பாஸ்கரின் நினைவாக 2015ல் தொடங்கப்பட்ட பாஸ்கரீயம் நிகழ்ச்சி இன்று ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியக் கலைவிழாவாக உருவெடுத்துள்ளது.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, 2021ல் ஸ்ரீமதி சாந்தா பாஸ்கரை கௌரவிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘பிரசாந்தம்’ தொடர், இளம் கலைஞர்களை மேடைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மேடை நிகழ்ச்சிகளைப் படைத்த கலைஞர்களுடன் பாஸ்கர் கலைக் கழக ஆசிரியர்களும் திரு வடியும்.
மேடை நிகழ்ச்சிகளைப் படைத்த கலைஞர்களுடன் பாஸ்கர் கலைக் கழக ஆசிரியர்களும் திரு வடியும். - படம்: செய்யது இப்ராகிம்

இந்த ஆண்டும் ஒன்பது இளம் கலைஞர்கள், முன்னணி கலைஞர்களுடன் இணைந்து மேடையேறினர். பிரபல கர்நாடக இசைப் பாடகர் டாக்டர் வைகோம் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்.

“புதிய கலைஞர்களுக்குத் தகுந்த மேடையை வழங்கும் அதேசமயத்தில் மூத்த கலைஞர்களின் பங்களிப்புகளை அதே மேடையில் கௌரவிப்பதே பாஸ்கரீயத்தின் நோக்கமாகும்,” என்று பாஸ்கர் கலைக் கழகத்தின் இசை இயக்குநரும் புல்லாங்குழல் கலைஞருமான டாக்டர் கானவினோதன் ரத்தினம் விளக்கினார்.

கலைத்துறையில் தொடர்ந்து சாதிக்க ஊக்கமளிக்கும் விருது

பாஸ்கரீயத்தின் ‘நாட்டிய கலா நிபுணர்’ விருது, திரு வடிக்கு கடந்தகால பயணத்தை நினைவூட்டியதோடு மட்டுமல்லாமல், எதிர்கால முயற்சிகளுக்கான உந்துதலாகவும் உணர்வதாக அவர் கூறினார்.

திரு வடிக்கு வழங்கப்பட்ட ‘நாட்டிய கலா நிபுணர்’ விருது.
திரு வடிக்கு வழங்கப்பட்ட ‘நாட்டிய கலா நிபுணர்’ விருது. - படம்: செய்யது இப்ராகிம்

“நான் எழுதத் தொடங்கிய ஒரு நாடகத்தை என் அன்புத் தோழர் ஆனந்த கண்ணன் மறைந்த பிறகு என்னால் முடிக்க முடியாமல் போனது. அதன் பின்னர், சில சிறிய வேடங்களில் நடித்தாலும், முன்புபோல் என் முழு படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியாமல் இருந்தேன்,” என்றார் திரு வடி.

இந்த விருது தம்மை மீண்டும் கலைத்துறைக்குத் திரும்பி, இன்னும் அதிகம் செய்து, புதியவற்றை உருவாக்க தமக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருப்பதாக அவர் கூறினார்.

தமது ஆரம்பகால நாடகங்களைத் திரு கே.பி. பாஸ்கர் நேரில் வந்து கண்டதைத் திரு வடி நினைவுகூர்ந்தார்.

“ஒருமுறை, நாடக நிகழ்ச்சியை நடத் போவதாகவும் அதில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் என்னை அழைத்தார். அப்போதுதான் அவரையும் சாந்தா மாமியையும் நெருக்கமாக அறிந்துகொண்டேன்,” என்றார் திரு வடி.

பல ஆண்டுகளா தமது நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்ததாகக் கூறிய அவர், இளம் தலைமுறையினரை வளர்க்கும் இடங்களா கலைப் பள்ளிகள் அமைய வேண்டும் என்பதை அவர்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளதா கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் நடத்தும் நாடகக் குழுக்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, அது தமக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது என திரு வடி தெரிவித்தார்.

இளையர்களை மேலும் கலைத்துறைக்கு ஈர்க்க, கலைகளின் தனித்துவத்தை அவர்களுக்கு விளக்கிக் காட்ட வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

“நாடகம், சினிமா, தொலைக்காட்சி இவை அனைத்தும் ஒன்றல்ல. மேலும், புதுமையான பாணியில் நிகழ்ச்சிகளை நடத்தி, பயிற்சிகளை வழங்கினால்தான் இளையர்களை கவர முடியும்,” என்றார் அவர்.

‘நாட்டிய கலா நிபுணர்’ விருதுடன் திரு வடி.
‘நாட்டிய கலா நிபுணர்’ விருதுடன் திரு வடி. - படம்: செய்யது இப்ராகிம்

அதே நேரத்தில், இளம் கலைஞர்கள் கலைகளை முறையாகக் கற்றுக்கொள்வது மிக முக்கியம் எனவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்வரை நாடகக் கல்வி கற்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துமாறு இளையர்களை ஊக்குவித்தார்.

“அதன்பின், ஒருவர் மேடைக் கலைஞராகவோ, பின்னணித் தொழில்நுட்ப வல்லுநராகவோ, ஆசிரியராகவோ வளரும் வாய்ப்பு உண்டு. ஆனால், கலையை முதலில் முழுமையாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

“கலை வழியே ஒழுக்கமும் பலதரப்பட்ட திறன்களும் வளர்கின்றன. எனவே, ஒவ்வொரு இளையரும் கலையை அனுபவிக்க வேண்டும். கலை வாழ வேண்டும். கலை வாழ்ந்தால்தான் கலாசாரம் வாழும்,” என்று திரு வடி உறுதியுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்