அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியோர்க்கு அங்கீகாரம்

அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியோர்க்கு அங்கீகாரம்

படம்: சிங்கப்பூர்க் குடிமக்கள் சங்கம்

27 Sep 2026 - 6:30 am

5 mins read

பெரும்பாலான நேரங்களில், ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஏதோ ஓர் அசாதாரணமான செயலன்று.

“உண்மையில், அது ஒரு சாதாரணமான, மிக மிக இயல்பான, எளிமையான, ஆனால் தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயல்தான் - விசாரித்துக்கொண்டே இருக்கும் அண்டை வீட்டுக்காரர் அல்லது மீண்டும் மீண்டும் வரும் தொண்டூழியரைப்போல,” என்று சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு எட்வின் டோங் கூறினார்.

செப்டம்பர் 19ஆம் தேதி ‘ஷங்ரிலா சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெற்ற 13வது ‘சிங்கப்பூர் அறியப்படாத நாயகர்’ விருது வழங்கும் விழாவில் அவர் பேசினார். சிங்கப்பூர்க் குடிமக்கள் சங்கம் அந்த விருது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

“இந்தக் குணங்கள்தாம் மக்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் ஆறுதலையும் அளிக்கின்றன,” என்றார் திரு டோங்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் மிகச் சிறந்த பெரியவர்களுக்கான ‘எஸ்எஸ்எச் 2026’ விருதுப் பிரிவின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றவருமான டாக்டர் ரித்து ஜெயின், ‘எபிடெர்மோலிசிஸ் புல்லோசா’ அல்லது சுருக்கமாக ‘ஈபி’ நோயாளிகளுக்காகக் குரல் கொடுப்பதன்மூலம் அந்த குணங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் திகழ்கிறார்.

‘ஈபி’ என்பது ஓர் அரிதான பரம்பரைத் தோல் நோய். தோலின் பல அடுக்குகளை ஒன்றாகப் பிணைத்து வைக்கும் புரத உற்பத்தியைத் தடுக்கும் மரபணுப் பிறழ்வு காரணமாக, தோலை லேசாகத் தொட்டால்கூடக் கொப்புளம் உண்டாகிக் கிழியக்கூடும்.

“இது நாம் கேள்விப்படாத மிகக் கொடூரமான வலி நிறைந்த நோய். இதனை மூன்றாம் நிலைத் தீக்காயங்களுடன் ஒப்பிடலாம்,” என்று டாக்டர் ரித்து விளக்கினார்.

மிகவும் கடுமையான ‘டிஸ்ட்ரோஃபிக் ஈபி’ பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள், பிரசவத்தின்போது ஏற்படும் உராய்வு காரணமாகத் தோலின் பெரும்பகுதிகள் இல்லாமலேயே பிறக்கிறார்கள்; தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு ‘மார்ஃபின்’ (ஆற்றல்மிகு வலிநீக்கி) வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, ‘ஈபி’ நோயாளிகளின் குடும்பத்தினரும் பராமரிப்பாளர்களும் அளப்பரிய மன, நிதி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனை டாக்டர் ரித்து நேரடியாகவே அனுபவித்துள்ளார்.

அவரின் இளைய மகள் 26 வயது ஐரா ஜெயினுக்கு, இந்த நோயின் தீவிரமற்ற வகையான ‘ஈபி சிம்ப்ளக்ஸ்’ பாதிப்பு இருந்தது. இதனால் அவரது உள்ளங்கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு, குறைந்த தூரம் நடப்பதுகூட கடினமாக இருந்தது; சிங்கப்பூரின் வெப்பமும் ஈரப்பதமும் அதனை மேலும் மோசமாக்கின.

“பள்ளியில் அவள் எவ்வளவு சிரமப்படுவாள் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை,” என்று டாக்டர் ரித்து கூறினார்.

ஐரா உடற்பயிற்சி வகுப்புகளிலிருந்து விலக்கு பெறவேண்டியிருந்தது; மாடிப் படிகளில் ஏற முடியாததால், பள்ளியின் மின்தூக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. மேலும் வேறுபட்ட காலணிகளை அணிய வேண்டியிருந்ததால், அவரது நிலைமை குறித்துச் சுற்றியுள்ளவர்களின் தவறான பார்வையும் அதிகரித்தது.

‘ஈபி’ நோயாளிகள் தங்களின் வலியையும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் ஃபோம் டிரெஸ்ஸிங், பூச்சு மருந்து ஆகியவற்றுக்கு உள்ளூர் மானியம் வழங்கப்படுவதில்லை என்பதும் நிலைமையை மேலும் கடினமாக்குகிறது. அவை பெரும்பாலும் சில்லறை மருந்தகங்கள் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக டாக்டர் ரித்து மேலும் கூறினார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொள்கை மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவும் 50க்கும் மேற்பட்ட தேசியக் கிளைகளை மேற்பார்வையிடும் ‘டிஸ்ட்ரோஃபிக் எபிடெர்மோலிசிஸ் புல்லோசா ரிசர்ச் அசோசியேஷன்’ எனும் அனைத்துலக ஆய்வுச் சங்கத்தின் தலைவராக 2021ஆம் ஆண்டு முதல் 2026 வரை டாக்டர் ரித்து பணியாற்றினார்.

அந்த நோய் என்னவென்றோ அதை எவ்வாறு பராமரிப்பது என்றோ தெரியாத பெற்றோர், பராமரிப்பாளர்களுக்காக இந்தியா, பாகிஸ்தான், உக்ரேன், இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கித் தகவல் பரிமாற்றத்திற்கான வழிகளை அவர் ஏற்படுத்தினார்.

“குளிக்கும் தண்ணீரில் கல் உப்பைப் போடுவது குழந்தைகளின் வலியைக் குறைக்கும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க எனக்குப் பல இணையவழிக் கருத்தரங்குகள் தேவைப்பட்டன,” என்று டாக்டர் ரித்து கூறினார்.

மருத்துவர்களுக்கும் மருத்துவத்துறையில் உள்ளோருக்கும் ‘ஈபி’ பாதிப்புகள் குறித்தும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிறப்பாகச் சிகிச்சையளிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிப்பதற்காக, நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு அவர் அழைத்துச் சென்றார்.

“சிறிய பங்களிப்புகள்கூட எவ்வாறு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கண்டவுடன், ஆதரவாளராகச் செயல்படுவதை உங்களால் ஒருபோதும் நிறுத்த முடியாது,” என்று டாக்டர் ரித்து மேலும் கூறினார்.

மற்றொரு ‘எஸ்எஸ்எச் 2026’ விருதுப் பிரிவின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றவர் திரு சித்தார்த்தன் ராஜசேகரன், 32. வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான உறைவிட வளாகமான ‘ஈக்வல் டிரீம்ஸ்’ எனும் அமைப்பில் இவர் பணித்திட்ட நிர்வாகியாக உள்ளார்.

2019 முதல் 2024 வரை ‘சிண்டா’வில் பணியாற்றியபோது, இவர் வழிநடத்திய பல்வேறு தலைமைத்துவத் திட்டங்கள்மூலம் 17 முதல் 35 வயதுடைய இளையர்க்கு வழிகாட்டியாய் இருந்ததற்காக, நண்பர் ஒருவர் இவரை ‘ஊக்கமளிக்கும் இளையர் விருது’க்குப் பரிந்துரைத்தார்.

“சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க விரும்பிய ஊக்கமளிக்கும் இளையர் பலரை நான் சந்தித்தேன்,” என்று திரு சித்தார்த்தன் நினைவுகூர்ந்தார்.

“அவர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்; அந்த அமைப்பைவிட்டு வெளியேறிய பிறகும் நான் தொடர்ந்து செய்ய விரும்பும் ஒன்றாக அது மாறியது,” என்றார் இவர்.

அதற்கு எடுத்துக்காட்டாக, 2021ல் தாம் சந்தித்த ஓர் அமைப்பின் உறுப்பினரைக் குறிப்பிட்டார். அப்போது ‘நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி’ மாணவியாக இருந்த அவர், தொண்டூழியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

“எங்களின் முதல் சில தலைமைத்துவத் திட்டங்களில் அவர் பங்கேற்பாளராக இருந்தார். பின்னர் பல ஆண்டுகளில் படிப்படியாக முன்னேறினார்,” என்று திரு சித்தார்த்தன் கூறினார்.

அந்த மாணவி ஒருசில திட்டங்களை மற்றவர்கள் முன்னிலையில் விளக்கிக் கூறினார். மேலும் 2024ல் ‘சிண்டா இளையர் தலைவர்கள் கருத்தரங்கில்’ இணைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்குமுன் பலருக்கு வழிகாட்டியாகவும் அவர் இருந்தார்.

“எப்படிப் பங்களிப்பது என்று தெரியாமல் பங்கேற்பாளராக வந்த அவர், இப்போது இருக்கும் இடத்தைப் பார்ப்பது மிகவும் பெருமையான இருக்கிறது,” என்று திரு சித்தார்த்தன் மேலும் சொன்னார்.

அவர் தம் நண்பர்கள் சிலருடன் இணைந்து ‘இல்லுமினேட் லைவ்ஸ்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். அது புலம்பெயர்ந்த ஊழியர்களுடன் இணைந்து செயல்படுகிறது; ரமலான் புனித மாதத்தில் விளிம்புநிலை மக்களுக்குப் பண்டிகைக்காலப் பரிசுப் பெட்டிகளை வழங்குகிறது.

“அது எப்போதுமே பெரிய திட்டமாக இருக்கவேண்டிய அவசியமில்லை,” என்று திரு சித்தார்த்தன் விளக்கினார்.

“ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யக்கூடிய சிலரை ஒன்றிணைக்க முடிந்தால், அதுவே போதுமானது. அர்த்தமுள்ள ஒன்றைத் தொடங்குவதற்கு உங்களிடம் பதவியோ அதிக வளங்களோ இருக்கவேண்டிய அவசியமில்லை,” என்றார் திரு சித்தார்த்தன்.

செய்தி: சக்தி சிங்காரவேலு
குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விருதுமருத்துவர்தோல்