மானபங்கக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்த இருவருக்கு அங்கீகாரம்

மானபங்கக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்த இருவருக்கு அங்கீகாரம்

3 mins read
de0a711a-0b1d-427a-848c-57ba8e71b08c
பெண்களுக்கு எதிரான இரண்டு குற்றங்களுக்குக் குரல் கொடுத்ததால் திருவாட்டி விக்னேஸ்வரி கிருஷ்ணன், திரு ஓவ் சியாவ் யாம், ஆகிய இருவரும் காவல்துறையிடமிருந்து சேஃபர்எஸ்ஜி பொது உணர்வு விருதைப் பெற்றனர். - படம்: பே.கார்த்திகேயன்
Google News Preferred Icon

பெண்களைத் தகாத முறையில் தொட்ட இரண்டு நபர்களைப் பிடிக்க உதவிய இருவருக்குக் காவல்துறை விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

திருவாட்டி விக்னேஸ்வரி கிருஷ்ணன், திரு ஓவ் சியாவ் யாம் இருவரும் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தைரியமாக குரல் எழுப்பியதால் அவர்களுக்கு சேஃபர்எஸ்ஜி பொது உணர்வு விருது வழங்கப்பட்டது.

திருவாட்டி விக்னேஸ்வரிக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதியும் திரு ஓவ்விற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதியும் விருதுகள் வழங்கப்பட்டன.

தேக்கா பிளேஸ் வளாகத்தில் நடந்த சம்பவத்தை நேர்த்தியாகக் கையாண்ட திருவாட்டி விக்னேஸ்வரி கிருஷ்ணன்.
தேக்கா பிளேஸ் வளாகத்தில் நடந்த சம்பவத்தை நேர்த்தியாகக் கையாண்ட திருவாட்டி விக்னேஸ்வரி கிருஷ்ணன். - படம்: பே.கார்த்திகேயன்

தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் ‘அபெக்ஸ் செக்யூரிட்டி’ நிறுவனத்தின்கீழ் பாதுகாவல் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் திருவாட்டி விக்னேஸ்வரி, 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி அங்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் நேர்த்தியாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவினார்.

தேக்கா பிளேசின் இரண்டாம் மாடிக் கழிவறைகளுக்கு வெளியே அன்று மாலை 4.30 மணியளவில் கூட்டம் கூடியதையும் சலசலப்பு ஏற்பட்டதையும் அவர் கவனித்தார்.

சீனப் பெண் ஒருவரும் அவரின் கணவரும் இந்திய ஆடவர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கவனித்த அவர், பிரச்சினையைக் கேட்டறிந்தார்.

முதல் மாடியிலிருந்து இரண்டாம் மாடிக்கு மின்படிக்கட்டுகளில் அப்பெண் தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஆடவர் தம்மை நெருங்கி, தமது காலைத் தொட்டதாகவும் தாம் கூச்சலிட்டு ஆடவரிடம் கேள்வியெழுப்பியபோது அவர் அங்கிருந்து ஓடி இரண்டாம் மாடிக் கழிவறையில் ஒளிந்துகொண்டதாகவும் அப்பெண் திருவாட்டி விக்னேஸ்வரியிடம் கூறினார்.

சம்பவத்தின்போது அப்பெண்ணின் கணவர் கழிவறையில் இருந்தார்.

ஆடவர் கழிவறையிலிருந்து வெளியேறிடவுடன் அப்பெண்ணும் அவரின் கணவரும் ஆடவரை எதிர்கொண்டனர்.

திருவாட்டி விக்னேஸ்வரி அந்த ஆடவரிடம் தமிழில் விசாரித்தபோது, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறி செயலை மறுத்துவிட்டார்.

காவல்துறையிடம் புகாரளிக்குமாறு அப்பெண்ணிடம் திருவாட்டி விக்னேஸ்வரி கூறியபோது அப்பெண் அதற்குத் தயங்கினார்.

சந்தேக நபர், அப்பெண் என இருவரின் விவரங்களைத் திருவாட்டி விக்னேஸ்வரி பெற்றுக்கொண்டார்.

கண்காணிப்புப் படக்கருவிக் காட்சிகளை ஆராய்ந்தபோது திருவாட்டி விக்னேஸ்வரிக்கு சம்பவம் குறித்து தெளிவு கிடைத்தது. மதுபோதையில் இருந்த அந்த ஆடவர், கடைத்தொகுதியின் கீழ்த்தளத்திலிருந்தே அப்பெண்ணைப் பின்தொடர்ந்தார். மின்படிக்கட்டில் அந்த ஆடவர் அப்பெண் அருகே சென்று அவரைத் தொட்டது தெரிந்தது.

அப்பெண்ணைத் தொடர்புகொண்டு காவல்துறையிடம் புகாரளிக்க ஊக்குவித்த திருவாட்டி விக்னேஸ்வரி, காவல்துறை விசாரணைக்கும் உதவினார். அவர் சேகரித்த ஆதாரங்கள், ஆடவரைக் கைது செய்ய உதவியதாகக் காவல்துறை தெரிவித்தது.

“பொதுமக்களும் இதுபோன்ற சம்பவங்களின்போது குரலெழுப்புவது முக்கியம். சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவரது பொறுப்பாகும்,” என்று திருவாட்டி விக்னேஸ்வரி கூறினார்.

மற்றொரு சம்பவத்தில் திரு ஓவ், இவ்வாண்டு ஜூன் 27ஆம் தேதி பேருந்துச் சேவை எண் 196ல் பயணம் செய்தபோது பெண் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்தார்.

புவன விஸ்தா ரயில் நிலையம் அருகே தம் குடும்பத்தாருடன் பேருந்தில் ஏறிய திரு ஓவ், பல இருக்கைகள் காலியாக இருந்தும் அப்பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு முதியவர் அமர்வதைக் கவனித்தார்.

அந்த ஆடவர் அப்பெண்ணின் தொடையைத் தொடுவதைக் கண்ட திரு ஒவ், அப்பெண் சங்கடமாக உணர்ந்ததையும் கவனித்தார்.

அப்பெண்ணை அணுகி, தமது கைப்பேசியை அவரிடம் காட்டிய அந்த முதியவர், “இந்த ஆடவரை உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டு வழி கேட்பதுபோல் நடித்தார்.

அந்த முதியவர் தம்மீது கை வைப்பதைக் கவனித்த அப்பெண், கையை எடுக்குமாறு கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

தாம் தவறு செய்யவில்லை எனக் கூறி, பேருந்திலிருந்து இறங்க முயன்ற முதியவரைத் தடுத்துநிறுத்திய திரு ஓவ், பேருந்து ஓட்டுநருக்குத் தெரியப்படுத்தியதோடு, காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு மற்றொரு பயணியிடம் உதவி கோரினார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடவரைக் கைதுசெய்தனர்.

திருவாட்டி விக்னேஸ்வரி, திரு ஒவ் இருவரது சமூகப் பொறுப்பையும் காவல்துறை பாராட்டியது.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைவிருதுகுற்றம்பெண்கள்