தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘நமது தீபாவளி 2026’ (Our Deepavali 2026) கொண்டாட்டத்தில், மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்டச் சுவரோவியம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.
தேசிய வளர்ச்சி அமைச்சரும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
சாதனை படைத்த சுவரோவியம்
‘நல்லிணக்கக் கொண்டாட்டம் – ஒரே சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில், சிங்கப்பூரின் அடையாளச் சின்னங்களுடன் இந்திய, சீன, மலாய்ப் பண்டிகைச் சின்னங்களை இணைத்து, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் அகலமும் கொண்ட சுவரோவியம் உருவாக்கப்பட்டது.
‘மறுசுழற்சி செய்யப்பட்ட துணித் துண்டுகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சுவரோவியம்’ என்ற பிரிவில் இது சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொண்டூழியர்கள் இணைந்து ஏறத்தாழ நான்கு வாரங்களில் இதனை வடிவமைத்தனர். வீணாகக் கழிக்கப்படும் துணிகள், பழைய புடவைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இரண்டு உள்ளூர் ஆலயங்களும் பழைய புடவைகளை வழங்கி ஆதரவளித்தன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஏறத்தாழ 30 விழுக்காட்டினர் இந்தியரல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், கரகம், கோலாட்டம், நேரடி இசை, மருதாணிக் கலை, புதிர்ப்போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கல் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.
12 வெள்ளி நுழைவுச்சீட்டில் சைவ, அசைவ விருந்துடன், ஆதரவாளர்களின் உதவியோடு இரண்டு அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
இச்சாதனை குறித்துப் பேசிய தோ பாயோ வெஸ்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் வி.ஜி.பாலச்சந்தர், பல்வேறு பண்பாட்டினரும் ஒரே சமூகமாக ஒன்றிணைவதற்கு இந்நிகழ்ச்சி தளம் அமைத்ததாகக் குறிப்பிட்டார்.
“2012ல் அகல்விளக்குச் சாதனை, 2023ல் மறுசுழற்சிப் பால் அட்டைப் பெட்டிகளால் மிகப் பெரிய பொங்கல் பானை, 2025ல் மாபெரும் நாற்காலி யோகா சாதனை ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தச் சாதனையும் குடியிருப்பாளர்களுக்கு அர்த்தமுள்ள மைல்கல்லாக அமைந்துள்ளது. இதற்கு உதவிய தொண்டூழியர்கள், ஆதரவாளர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,” என அவர் தெரிவித்தார்.
