தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மீள்திறன்மிக்க நாடாவதை ஆராய்ந்த கருத்தரங்கு

‘அறிவும் தியாகமும் பணத்திற்கு அப்பாற்பட்டவை’

3 mins read
31a28dd2-3a8e-4b9e-b7c5-962c44b93668
(இடமிருந்து) யூ யான் சாங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் யூ, டிபிஎஸ் குழுமத் தலைர் பியூஷ் குப்தா, கருத்தரங்கு நெறியாளர் மற்றும் சிம் பல்கலைக்கழக நிர்வாக அவை உறுப்பினர் ஊய் ஹுவே திங். - படம்: பிசினஸ் டைம்ஸ்

தொடர்ந்து மாறிவரும் உலகில் சமூகத்தின் ஒட்டுமொத்த வெற்றியை உறுதிசெய்யவேண்டும். எந்தப் பொருளாதார நிலையிலும் உள்ளவர்களின் ஆற்றல் மேம்பட வேண்டும். பின்தங்கியவர்களாகக் கருதப்படுவோரையும் நாம் சமூகத்திலுள்ள மற்றவர்களுடன் ஒன்றிணைக்கவேண்டும்.

டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா, யூ யான் சாங் இன்டர்னேஷல் நிறுவனத்தின் தலைவர் ரிச்சரட் யூ ஆகிய இருவரும் பங்குபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

‘இடைவெளிகளுக்கு இடையே பாலம் அமைத்தல்: மீள்திறன்மிக்க சிங்கப்பூர் உருவாக சமூக முன்னேற்றத்திற்கான ஆற்றலை வழங்குதல்’ என்பது பற்றி சிம் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.

குறைந்த வருமானக் குடியிருப்பில் தாம் வளர்ந்ததாகக் குறிப்பிட்ட திரு பியூஷ், வேறொரு குடியிருப்புக்கு இடம் மாற தம் தந்தை முடிவெடுத்ததால் தம் எண்ணப்போக்கும் வாழ்க்கையும் மாறியதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு நேர்மாறான சூழலில் திரு யூ, பிரிட்டனில் தங்கிப் படிக்கும் வசதிகொண்ட பள்ளியில் கழித்த இன்பமான நாள்களை நினைவுகூர்ந்தார்.

“சுட்டித்தனமாக இருந்த மற்ற சிறுவர்களும் நானும் விளையாட்டுத்தனமாகப் பல்வேறு குறும்புச் செயல்களில் ஈடுபட்டோம். இந்த அனுபவங்கள் பிற்காலத்தில், எல்லா விதிமுறைகளையும் கேள்வியின்றி ஏற்காமல் சிறந்த மாற்றங்களுக்காகப் போராடும் துணிச்சலை எனக்குள் விதைத்தன,” என்று அவர் கூறினார்.

நற்குணங்களைப் போற்றுதல்

சமுதாய வெற்றிக்கான அளவுகோள்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். பணம் சம்பாதிக்கும் ஆற்றலைத் தாண்டிய பங்களிப்புக்கும் திறமைகளுக்கும் சமூகம் கூடுதல் மதிப்பு தரவேண்டும் என்பதைக் கூறிய திரு பியூஷ், பண்டைய இந்திய வைதீகச் சமூகக் கட்டமைப்பை மேற்கோள் காட்டினார்.

அந்தச் சமூகத்தில் ஓதல், ஓதுவித்தல் போன்ற கல்விசார்ந்த தொழிலில் ஈடுபட்டோருக்கும் போர்வீரர்களுக்கும் அடுத்த நிலையில்தான் வர்த்தகர்கள் கருதப்பட்டனர்.

“தனிமனித விழிப்புணர்வை மேம்படுத்தும் கல்வியும் நாட்டுக்கான உயிர்த் தியாகமும் பணத்தால் அளவிட முடியாத மதிப்பைக் கொண்டிருப்பதை அன்றைய சமூகம் அங்கீகரித்தது. ஆனால், இன்றைய உலகிலோ வர்த்தகத்திற்கு முதன்மை கொடுக்கப்படுகிறது. இந்நிலையை நாம் படிப்படியாக மாற்றவேண்டும்,” என்று அவர் கூறினர்.

இதனை ஆமோதித்த திரு யூ, உணர்வுகளைத் துணிச்சலுடன் அனைவரும் வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். வாழ்க்கைத் தொழிலைப் பொறுத்தவரை வழக்கமான, பாதுகாப்பான துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாகத் தங்களுக்குப் பொருத்தமான துறைகளைத் தேர்ந்தெடுக்கும்படியும் அவர் இளையர்களுக்கு அறிவுறுத்தினார்.

கலைத்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் இளையர்கள் பதித்துள்ள சாதனைகளை மற்றவர்கள் மேலும் கொண்டாடி மகிழலாம் என்றனர் இவர்கள். “சிறந்த தொண்டூழியத்திற்காக இளையர்களை அங்கீகரிக்கும் போக்கு தொடரவேண்டும்,” என்று அவர் கூறினார்.

சமூக முன்னேற்றமும் கூடுதல் ஒருங்கிணைப்பும் மேம்பட, சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையாற்றல் மேம்படவேண்டும். நலிவுற்றவர்களுக்குக் கைகொடுக்கும் கொள்கைகளும் நடப்பில் இருக்கவேண்டும் என்றனர் இரு தலைவர்களும்.

மாணவர்கள் சிந்தனையாற்றலை வளர்க்கவேண்டும்

கல்விமுறையில் நுணுக்கமாகச் சிந்திக்கும் ஆற்றலை மாணவர்கள் கற்கவேண்டும் என்றார் திரு குப்தா.

“உங்களைவிட அதிக தகவல்களைச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் தெரிந்து வைத்திருக்கும். இனி, சிந்தனையாற்றலும் படைப்பூக்கத் திறனுமே வருங்காலம்,” என்று அவர் கூறினார். வேலைச் சந்தையின் தேவைகள் அதிவிரைவாக வாழ்நாள் கல்வியை நிச்சயமாக மேற்கொள்ளவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

“நம் வாழ்க்கையின் தொடக்கப்பகுதியில் கற்ற கல்வியை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக்கூடிய நீர்த்தேக்கமாக நாம் கருதிவிடக்கூடாது. தொடர்ந்து கற்கவேண்டும், நமக்குத் தெரிந்தவற்றைத் தொடர்ந்து புதுப்பிக்கவேண்டும்,” என்றார் திரு யூ.

குறிப்புச் சொற்கள்