தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளங்குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு ஆதரவு

2 mins read
e49960ff-6d79-4dd3-be14-a9822c5e5761
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சீர்திருத்தப் பயிற்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளும் காலம் ஒரு முடிவுக்கு வருவதை அனுசரிக்கவும் திருந்திய நபர்களாக சமுதாயத்தில் மீண்டும் தாங்கள் ஒருங்கிணைய வேண்டும் என்ற உறுதியைப் பயிற்சியாளர்கள் வெளிப்படுத்தவும் சிங்கப்பூர் சிறைச் சேவை கடந்த ஆண்டு சீர்திருத்தப் பயிற்சி நிலைய (ஆர்டிசி) நிறைவு விழாவை அறிமுகப்படுத்தியது.

தானா மேரா சிறைச்சாலைக் கட்டடத்தில் அமைந்துள்ள ஆர்டிசியில் ஒன்பதாவது முறையாக ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் 14 முதல் 21 வயதுடைய 14 சீர்திருத்தப் பயிற்சியாளர்கள் மறுவாழ்வுப் பயிற்சியை முடித்து, மேற்பார்வையுடன் கூடிய விடுவிப்புக்காகத் தயாராகினர்.

உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

நிகழ்வில் சீர்திருத்தப் பயிற்சியாளர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றைப் படைத்ததோடு அவர்களின்  சீர்திருத்தப் பயிற்சியின் ஓர் அங்கமாக ஈடுபட்டிருந்த அணிவகுப்புத் தொடர்பயிற்சிகளைச் செய்தும் காட்டினர்.

அத்தகைய பயிற்சிகளை அவர்கள் ஒன்றாகச் செய்யும்போது, தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துக் குழு உணர்வை வளர்க்கக் கற்றுக்கொள்வார்கள் என்றார் மூத்த சீர்திருத்தப் பிரிவு அதிகாரி எவன் தாய், 43.

“ஆர்டிசியில் நுழைபவர்களைக்‌ கல்வி ரீதியாகவோ வேலை ரீதியாகவோ மேம்படுத்துவதற்கான திட்டங்களை வழங்குவதன்வழி வாழ்க்கையில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உதவுவதே எங்களின் நோக்கமாகும்,” என்று அவர் விவரித்தார்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாகச் சீர்திருத்தப் பயிற்சியாளர்கள், வருகைதந்திருந்த தங்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடுவதற்கு நேரம் வழங்கப்பட்டது. டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் அனைவருடனும் அமர்ந்து பேசினார்.

சீர்திருத்தப் பயிற்சியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் இடையே உள்ள குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த இதுபோன்ற குடும்ப ஈடுபாட்டு அமர்வுகளை அடிக்கடி நடத்துவதாகச் சொன்னார் மூத்த சீர்திருத்த மறுவாழ்வு வல்லுநர் டேங் நோராஷிடா, 35.

“குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி ஆதரவாக இருக்க வேண்டும். மறுசீரமைப்பு வல்லுநர்களுடன் இணைந்து குடும்பத்தினரும் சீர்திருத்தப் பயிற்சியாளர்களும் அமர்வுகளில் மனம்விட்டு பேசும்போது அவர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சீர்திருத்தப் பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிய டாக்டர் ஃபைஷால், சீர்திருத்தப் பயிற்சியை முடித்தவர்கள் மீண்டும் குற்றம் புரியும் விகிதம் அண்மைய ஆண்டுகளில் குறைந்திருப்பதாகச் செய்தியாளர்களிடம் சொன்னார்.

“ஆர்டிசி ஊழியர்கள் பயனுள்ள சீர்திருத்தப் பயிற்சி முறையைக்‌ கையாண்டு சீர்திருத்தப் பயிற்சியாளர்களுக்கு வசதியான, ஆதரவான சூழலை உருவாக்கித் தருகிறார்கள். இன்றைய நிகழ்ச்சியில் சீர்திருத்தப் பயிற்சியாளர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருபபதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர்.

சமூகமும் இப்பிரிவனருக்கு ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஃபைஷால் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்