புகைமூட்டக் காலத்தில் முறையான உடற்பயிற்சியும் உணவும் முக்கியம் என்று தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பின் குடும்பநல மருத்துவ நிபுணரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு வலியுறுத்தியிருக்கிறார்.
இத்தகைய சூழலில், உடலில் நீர்ச்சத்து அதிகம் குறையக்கூடும் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம் என்றார் அவர்.
புகைமூட்டம் பற்றியும் சிங்கப்பூரில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் எஸ்பிஎச் அரங்கில் தமிழ் முரசு அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் டாக்டர் ஹரேஷ் அந்தக் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் அங்கமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
புகைமூட்டத்தின்போது உடல்நிலையை நன்றாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் டாக்டர் ஹரேஷ் விவரித்தார்.
புகைமூட்டக் காலத்தில் வெளிப்புறத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யமுடியாமல் போகலாம். அத்தகைய நேரங்களில், வீட்டிற்குள்ளேயே எளிய உடற்பயிற்சிகளைச் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார் யோகாசனப் பயிற்றுவிப்பாளர் பிரியா சுவாமிநாதன். மூச்சுப் பயிற்சிகளும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு புகைமூட்டம் மீண்டும் சென்ற மாதம் தலைதூக்கியது. சில நாள்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100க்குமேல் பதிவானது. குறியீடு, 101 முதல் 200 வரை இருக்கும்போது காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், புகைமூட்டம் மோசமாவதற்கு இரண்டு காரணங்களைச் சுட்டினார் சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மைத் துறை வல்லுநர் கவிக்குமார் முருகநாதன். ஒன்று மனிதர்களால் ஏற்படக்கூடியது. அறுவடைக்குப் பிறகு, வயல்களில் எஞ்சியுள்ள தேவையற்ற பயிர்க்கழிவுகளை எரிப்பதால் புகைமூட்டம் உண்டாகிறது. மற்றொன்று இயற்கையால் உருவாவது. எல்-நினோ பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு குறைவதால் வெப்பம் அதிகரிக்கிறது. அது புகைமூட்டத்தை மோசமாக்குகிறது என்றார் திரு கவிக்குமார்.
இவற்றைப் பற்றியும் புகைமூட்டம் குறித்த மேலும் பல அம்சங்கள் குறித்தும் பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
