காலம் கடந்த இசைகளைக் கொண்ட விருந்து

காலம் கடந்த இசைகளைக் கொண்ட விருந்து

2 mins read
f305a754-bce9-4df4-bf13-63c6b91a8cae
‘ரீஇன்கார்னேஷன் திருவிழாவில்’ பாடி அசத்திய சுட்டிக் குரல், அக்‌ஷரா கௌஷிக். - படம்: த. கவி

மறைந்த கலைஞரான கண்ணதாசனின் ‘கண்ணே கலைமானே’ போன்ற 1970களில் வெளியான பாடல்கள் முதல், இந்தக் காலத்துப் பிரபல இசைக் கலைஞரான சாய் அபயங்கரின் ‘ஊரும் ப்ளட்’  பாடல் வரை, காலம் கடந்த பாடல்களை ஒரே மேடையில் படைத்துப் பார்வையாளர்களை ஓர் இசைப் பயணத்தில் அழைத்துச் சென்றது அக்‌ஷரா கிரியேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்த ‘ரீஇன்கார்னேஷன் திருவிழா’.

புல்லாங்குழலின் இசை பார்வையாளர்களின் காதுகளில் தேன்போல் பாய, டிரம்சின் எதிரொலி அரங்கையே அதிரச்செய்ய, பார்வையாளர்களுக்கு ஓர் இசை விருந்தாக அமைந்தது அந்த நிகழ்ச்சி.

அந்த இசை நிகழ்ச்சி ஒரு சராசரி இசை நிகழ்ச்சி அல்ல. அதில், ‘மேஷ் அப்’ என்ற அடிப்படையில், பல பாடல்களிலிருந்து சில வரிகள் மட்டும் தொகுத்துப் பாடப்பட்டன.

“சமூக ஊடகங்களில் சிறிய காணொளித் தொகுப்புகளைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை வழங்கியது இந்த இசை நிகழ்ச்சி,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான கௌஷிக் சுரேஷ்.

தமிழ்மொழி விழாவை ஒட்டி, ஏப்ரல் 18ஆம் தேதி நடந்தேறிய ‘ரீஇன்கார்னேஷன் திருவிழாவில்’ சிறப்பு விருந்தினராகக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துகொண்டார். பார்வையாளர்கள் சேர்ந்து பாடும் அங்கத்தில் அவர், இளையராஜாவின் ‘இளைய நிலா’ என்ற பாடலை மக்களுடன் பாடி நிகழ்ச்சிக்கு மேலும் சுவையூட்டினார்.

அவருடைய துணைவியார் டாக்டர் ராதிகா தினேஷ் பிரபலப் பாடல்களுக்குப் பார்வையாளர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

இவ்விழாவில், மறைந்த இசைக் கலைஞர்களின் நினைவாக ஒரு ராகம் அமைக்கப்பட்டு, அவர்களின் என்றும் புகழ் ஓயாத பாடல்களிலிருந்து சில வரிகள் எடுக்கப்பட்டு, அவை படைக்கப்பட்டு மக்கள் அக்காலத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.

“இன்றைய காலகட்டத்தில், 10 நிமிடப் பாடலைக் கேட்பதற்கான பொறுமையோ நேரமோ மக்களிடம் இல்லை. 70க்கும் மேற்பட்ட பாடல்களை இரண்டு மணி நேரத்திற்குள், இளைஞர்களைக் கவரும் வகையில் தொகுத்து வழங்க நாங்கள் விரும்பினோம்,” என்றார் கௌஷிக் சுரேஷ்.

“தமிழ்மொழியின் அழகை வெளிப்படுத்த இசையே சிறப்பான வடிவம். சிங்கப்பூர் மக்கள் தமிழ் மீதும் இசை மீதும் கொண்டுள்ள பற்று வியக்கத்தக்கது,” என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் பாடகராகப் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராமன்.

வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவரான ஜோதி மாணிக்கவாசகமும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

“இது வெறும் மேடைப் பாட்டோடு நின்றுவிடாமல், பார்வையாளர்களையும் ஒன்றிணைத்து ஆடவும் பாடவும் வைத்த ஓர் ஈடுபாடு மிகுந்த நிகழ்ச்சி,” என்றார் திரு மாணிக்கம்.

மேலும் அவர், “இலக்கியத்தைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், இசை வாயிலாகத் தமிழின் அழகை இளைஞர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும். இந்நிகழ்ச்சி அதனைத் திறம்படச் செய்தது,” என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்