வானில் பறக்கும் விமானங்களை நம் கண் முன்னும் விமானப்படை வீரர்களின் சாகசங்களை நம் கைக்குள்ளும் கொண்டு வருகிறது புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகம்.
சிங்கப்பூர் ஆகாயப்படையின் வரலாற்றைப் பறைசாற்றும் வண்ணம் மாறுபட்ட புதிய அம்சங்களுடன் அதன் அரும்பொருளகம் ஜூன் 16ஆம் தேதி திறக்கப்பட்டது.
திறப்பு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகத் தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது கலந்துகொண்டார்.
“சிங்கப்பூர் ஆகாயப்படை இல்லையெனில், பிற நாடுகளுடன் நம்பிக்கையுடன் உறவாட சிங்கப்பூருக்குப் போதுமான முன்பாதுகாப்பு இருக்காது,” என்று அவர் கூறினார்.
“நாம் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க, ஆகாயப்படை வீரர்கள் அயராது உழைக்கின்றனர். நொடிப்பொழுதில் களத்தில் இறங்கத் தயாராக உள்ளனர். அதோடு, பல வீரர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெகுதொலைவில் சேவையாற்றி வருகின்றனர். இந்த அரும்பொருளகம் அவர்களது சேவையை அங்கீகரிக்க முனைகிறது,” என்றார் அவர்.
நாட்டின் பாதுகாப்பில் ஆகாயப்படையின் முக்கிய பங்கைச் சித்தரிக்கும் ஆறு நிமிடக் குறும்படம், சி-130 (C-130) விமான வகையின் வடிவம் கொண்ட விளையாட்டுத் திடல், சிறார் முதல் முதியோர் வரை விளையாடி மகிழ வேடிக்கை நடவடிக்கைகள் எனப் பல்வேறு அம்சங்கள் அரும்பொருளகத்தில் இடம்பெறுகின்றன.
அவற்றுள் முக்கியமாக, ஆகாயப்படை வீரர்களின் பணிகளையும் பொறுப்புகளையும் வெளிக்கொணரும் வகையில் ஐந்து நிமிடக் காணொளி அங்கமொன்று இடம்பெறுகிறது.
வளைந்த திரை, இருக்கைகளில் அதிர்வுகள் எனத் தொழில்நுட்பம்வழி ஆகாயப்படை வீரர்களின் வேலை அனுபவத்துளியை வருகையாளர்களுக்குத் தருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆகாயப்படையைப் பற்றிச் சிங்கப்பூரர்கள் மேலும் தெரிந்துக்கொள்ள இந்தப் புதிய அம்சங்கள் நிச்சயம் உதவுமென நம்புவதாக ஆகாயப்படைத் திறன் உருவாக்கத் தளபத்தியத்தின் (Air Power Generation Command) தலைவர் ‘எம்இ5’ சரவணன் ரதிமான் தெரிவித்தார்.
“எங்கள் பொறுப்புகளைக் குறித்தும் வேலைகளைக் குறித்தும் மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவே. ஆனால், இந்தப் புதிய அம்சங்கள்வழி மக்களால் ஆகாயப்படை குறித்த ஆழமான புரிதலைப் பெற இயலும்,” என்று அவர் கூறினார்.
“நம் நாட்டின் வான்வெளியைக் காக்கும் ஆகாயப்படையைப் பற்றி மக்கள் தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆகையால், முடிந்தவரை அனைவரையும் இந்த அரும்பொருளகத்திற்கு வர ஊக்குவிக்கிறேன்,” என்றார் அவர்.
ஜூன் விடுமுறைக்கென்று சிறார்களுக்காகப் பற்பல சிறப்பு நடவடிக்கைகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் அரும்பொருளகத்திற்குச் செல்லலாம். சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.

