உயரமான கட்டடங்கள், மக்கள் நடமாட்டம், பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தாண்டிச் சிங்கப்பூரிலுள்ள இயற்கை எழில், பலர் இன்னும் முழுமையாக அறிந்திராதது.
இரவுநேரக் கும்மிருட்டில் நமது மழைக்காடுகளுக்குள் செல்லும் திகில் விரும்பிகளுக்கு அரியவகைப் பாம்புகள், தவளைகள் எனத் தனி உலகமே தென்படுகிறது.
இப்படி அடிக்கடி காடுகளில் துய்க்கும் தங்கள் அனுபவங்களை மூன்று இளைஞர்கள் ஆர்வத்துடன் ஆவணப்படுத்தி மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுகின்றனர்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) முனைவர் பட்டப் படிப்பு படித்து வரும் 31 வயதான சங்கர் அனந்தநாராயணன் அவர்களில் ஒருவர்.
காடுகளின் இடுக்குகளுக்குள் ஒளிந்து வாழும் பல விலங்குகளைத் தேடும் பயணத்தை இவர் மேற்கொண்டு வருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பொழுதுபோக்கைத் தொடங்கிய சங்கர், நாளடைவில் தமக்குத் தென்பட்ட மாற்றங்களையும் விளக்கினார்.
“பல ஆண்டுகளுக்கு முந்தைய காடுகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய காடுகளின் தரம் குறைந்துள்ளது என்றே கூற வேண்டும். இருந்தபோதும் இந்த விலங்குகள் தொடர்ந்து பெருகுவதைக் காண்பது நல்ல அறிகுறியாகத் தோன்றுகிறது,” என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
விலங்குகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், தங்களது அறிவை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில்தான் ‘சிங்கப்பூர் ஹெர்பெட்டோலஜிக்கல் சங்கம்’ (Herpetological Society of Singapore) என்ற அமைப்பை உருவாக்கியதாக அவர் பெருமையுடன் பகிர்கிறார்.
‘ஹெர்பெட்டோலஜி’ என்பது, பாம்பு, பல்லி, முதலை போன்ற ஊர்வனங்களுடன் தவளை, தேரை போன்ற நீர்நில வாழ்வன ஆகியவற்றின் உடலியல், சுற்றுச்சூழல், இனப்பெருக்கம், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் விலங்கியலின் ஒரு பிரிவாகும்.
தொடர்புடைய செய்திகள்
முனைவர் பட்டக்கல்வி மாணவரான 32 வயது ஷிவராம் ராசு போன்ற வேறு சிலருக்குத் தொடக்கத்தில் இத்தகைய உயிரினங்கள் மீதான ஆர்வம் இல்லை என்றாலும் போகப் போக அந்த ஆர்வம் வளர்ந்தது. தவளை வகைகளை ஆராய்வது இவரது தற்போதைய பொழுதுபோக்காக உள்ளது.
“2016-க்கு முன்புவரை நான் இயற்கைப் பூங்காக்களுக்கெல்லாம் போனதில்லை. ஆனால், தொலைக்காட்சியில் தவளைகளைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எனக்குள் ஒரு பெரிய ஆர்வத்தைத் தூண்டியது,” என்று அவர் விவரிக்கிறார்.
சிங்கப்பூர்க் காடுகள் மிகவும் வெப்பமாகவும் புழுக்கமாகவும் இருக்கும் என்பதால், பாதுகாப்பான காலணிகள், மின்விளக்குகள் பொருத்தப்பட்ட தலைக்கவசம், கொசுக்கடியிலிருந்து தப்பிக்க முழுமையான உடைகள் போன்றவை கட்டாயம் தேவைப்படுவதாக ஷிவராம் கூறினார்.
தங்கள் ஆய்வின்வழி திரட்டப்பட்ட தகவல்களையும் அனுபவ உணர்வுகளையும் பிறரிடம் சொல்வதில் 35 வயது ரா. கமலக்கண்ணன் இன்பம் காண்கிறார்.
தேசியப் பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர், கொவிட்-19 ஊரடங்கு காலகட்டத்தில்தான் இயற்கையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கினார்.
பாம்புகள் என்றாலே பலருக்கும் பயம் இருப்பதை உணர்ந்த இவர், அதை மாற்றும் முயற்சியில் இறங்கினார். “சிங்கப்பூரில் உள்ள 67 வகையான பாம்புகளில் ஏழு வகையான பாம்புகள் மட்டுமே அதிக நச்சுத்தன்மை கொண்டவை,” என்றார் திரு கமலக்கண்ணன்.
ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுற்றுலா நடத்துவது, சமூக ஊடங்களில் விழிப்புணர்வு தரும் பதிவுகளை வெளியிடுவது, பயிலரங்குகளை நடத்துவது போன்றவற்றையும் இவர் செய்து வருகிறார்.
“எளிமையான விளக்கங்களைத் தர நான் முற்படுவேன். கடினமான அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், ஒரு கதையாகவோ அல்லது ஓர் அனுபவமாகவோ சொல்லும்போது மக்கள் அதனை எளிதில் புரிந்துகொள்வார்கள்,” என்று திரு கமலக்கண்ணன் கூறினார்.
திறன்பேசித் திரைகளிலேயே உலகத்தைப் பார்க்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் பழக்கங்களைக் காட்டிலும், இந்த மூவரின் இயற்கை சார்ந்த பயணம் சற்றே மாறுபட்டுள்ளது.
ஆனாலும், மற்றவர்களும் சிங்கப்பூரின் காடுகளுக்குள் சென்று பார்த்தால் போகப் போக இயற்கையைப் பற்றிய அறிவுடன் அதன் மீதான நேசமும் பெருகும் என்கின்றனர் இந்த ஆர்வலர்கள்.

