குடியிருப்பு வட்டாரங்களின் தனித்துவமான வரலாறுகள், இயற்கை வளங்கள், சமூகக் கதைகள் ஆகியவற்றை எழில்மிகு கலை வடிவில் செதுக்க குடியிருப்பாளர்கள் திரளாக ஒன்றிணைந்துள்ளனர்.
இவ்வாண்டின் ‘பேஷன்ஆர்ட்ஸ் திருவிழா 2026’ நிகழ்வின் அங்கமாக, தெம்பனிஸ் வெஸ்ட், தெலுக் பிளாங்கா ஆகிய இரு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புப் பேட்டையின் பெருமையைக் கலைப் படைப்புகளாக உருவாக்கியுள்ளனர்.
‘நமது அக்கம்பக்க வட்டாரத்தின் ரத்தினங்கள்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற அவ்விழா, கலைப்படைப்புகளுடன், அண்டைவீட்டார் ஒன்றுகூடி உரையாடவும் சமூகப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஒரு பாலமாக அமைந்தது.
தெலுக் பிளாங்காவில் பிரம்மாண்ட பாத்தேக் ஓவியம்
தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6.5 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட பாத்தேக் ஓவியத்துக்கு பொதுமக்கள் வண்ணம் தீட்டினர்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்ற 3 மணி நேரச் சிறப்புப் பயிலரங்கில், கலைஞர்களுடன் குடியிருப்பாளர்களும் இணைந்து மெழுகையும் சாயங்களையும் பயன்படுத்தி தங்கள் குடியிருப்புப் பேட்டையின் கதையைத் வண்ணங்களால் உயிர்ப்பித்தனர்.
“வரலாற்றுப் புராணங்களின்படி ‘சங் நீல உத்தமன்’ கரையேறிய இடமாக தெலுக் பிளாங்கா பகுதி கருதப்படுகிறது. அதனால், அவர் ‘ஜோங்’ (Djong) கப்பலில் வந்திறங்கியதை எங்கள் படைப்பில் சித்திரித்துள்ளோம். மெளண்ட் பேஃபர், ஹோர்ட்பார்க் முதல் லேப்ரடார் பூங்காவரை இயற்கையால் சூழப்பட்ட பகுதி இது.
“இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகள், தேசிய மலரான ஆர்க்கிட், ஹெண்டர்சன் வேவ்ஸ் பாலம், குடியிருப்பு கழக வீடுகள் என தெலுக் பிளாங்காவின் பாரம்பரியத்தையும் இயற்கை எழிலையும் நவீன வாழ்க்கையையும் ஒன்றிணைத்து இக்கலைப்படைப்பை உருவாக்கியுள்ளோம்,” என்றார் தெலுக் பிளாங்காவின் ‘இன் தி பிகினிங்’ என்ற பாத்தேக் கலைப் படைப்பை வழிநடத்திய முன்னணி கலைஞர் திருவாட்டி அம்ருதா.
தெம்பனிஸ் வெஸ்ட்டில் மறுசுழற்சி சிற்பம்: சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்
தெம்பனிஸ் வெஸ்ட் தேசிய தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற பேஷன் ஆர்ட்ஸ் விழாவில், ‘விங்ஸ் ஆஃப் ரினியூவல்’ என்ற 2 மீட்டர் உயரச் சிற்பம் திறக்கப்பட்டது.
90 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்தச் சிற்பம், கையால் வண்ணம் தீட்டப்பட்ட மிகப்பெரிய நெகிழிச் சிற்பம் என்ற பிரிவில் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
110க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்று கூடி, பிளாஸ்டிக் போத்தல்கள், துணி தொங்கவிடும் ஹேங்கர்கள், நாற்காலி கால்கள், மூடிகளைக் கொண்டு சூரியப்பறவை, வண்ணத்துப்பூச்சி, தட்டான் பூச்சிகள் போன்ற இயற்கை எழிலைக் கலைப்படைப்பாக மாற்றினர்.
“எங்கள் பகுதியில் சூரியப்பறவைகள் நடமாட்டம் அதிகம். அவை ஆரோக்கியமான இயற்கைச் சூழலின் அடையாளம். இந்தச் சிற்பம் தெம்பனிசுக்கு மட்டுமல்ல, பசுமையான சிங்கப்பூரின் ஆரோக்கியமான சூழலுக்கும் அடையாளம்,” என்றார் தெம்பனிஸ் வெஸ்ட் சமூகக் கலை கலாசாரக் கழகத்தின் தலைவர் திரு ஏவரி ஹூ.


