மீண்டெழுந்த மங்கை: ஒரு தாயின் வெற்றிப் பயணம்

மீண்டெழுந்த மங்கை: ஒரு தாயின் வெற்றிப் பயணம்

3 mins read
சவால்களை எதிர்கொண்டு, ஒற்றைப் பெற்றோராக மூன்று பிள்ளைகளை வளர்த்துவரும் லிடியா இந்திராணி
823ca06d-62fc-4741-90e8-9eeaafbb7a93
திருவாட்டி லிடியாவும் அவரது மூன்று பிள்ளைகளும். - படம்: காமினி ஹஷ்வின்

திருமண உறவு முறிந்துபோனதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தமது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பேரச்சத்தில் இருந்தார் 40 வயது லிடியா இந்திராணி.

ஒரு கட்டத்தில் படுக்கையைவிட்டு எழக்கூட முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்ட லிடியா, கிட்டத்தட்ட ஈராண்டுகள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் முடங்கிக் கிடந்தார்.

ஆனாலும், தம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மீண்டும் எழுந்துநின்று வாழ்க்கையோடு போராடிய அவர், சமூகத்தில் பலருக்கும் ஒரு பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இன்று தமது மூன்று பிள்ளைகளை வளர்க்கும் ஓர் ஒற்றைத் தாயாக அவர் சமுதாயத்தில் நிமிர்ந்து நிற்கிறார்.

சவால்மிக்க தமது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திருவாட்டி லிடியா, “அந்தப் பாதையே ஒரு வெகுமதிதான்! முழுப் பயணமும் சவாலாக இருந்தது, ஆனால், அதிலிருந்து மீண்டு வெளியே வந்ததுதான் எனக்குப் பெருமை,” என்று கூறினார்.

தன்னுடைய மணவிலக்கின்போது, அவர் தமது வீட்டை விட்டுக்கொடுக்காமல் போராடிப் பெற்றார். ஏனெனில், அதுவே தம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான புகலிடம் என்று அவர் உறுதியாக நம்பினார்.

“அந்தச் சூழலிலிருந்து நான் மீண்டுவர என் மனவுறுதிதான் உதவியது. சோர்வாக இருந்த நேரங்களிலும் எனக்குள்ளிருந்து வந்த நம்பிக்கையே என்னைக் காப்பாற்றியது,” என்றார் அவர்.

திருவாட்டி லிடியாவின் மூன்று பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் தங்கள் கல்வியில் உதவிக்கொள்கின்றனர்.
திருவாட்டி லிடியாவின் மூன்று பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் தங்கள் கல்வியில் உதவிக்கொள்கின்றனர். - படம்: காமினி ஹஷ்வின்

தம் அம்மா ஒருபோதும் மனஉளைச்சலால் ஏற்படும் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை எனக் குறிப்பிட்ட திருவாட்டி லிடியாவின் மகள் லியோனா கிரேஸ் சைலஸ், 18, குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

தம் தாயின் வழிகாட்டுதலால் வருங்காலத்தில் ஒரு சிறந்த தாதியாகப் பணிபுரிய விரும்புவதாகத் தெரிவித்தார் லியோனா.

திருவாட்டி லிடியாவின் மூத்த மகனான 17 வயது  ரயான் செக்கரியா சைலஸ், தன் அம்மாவிற்குத் துணையாக வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதாகவும், தம்பிக்குக் கணக்குப் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதாகவும் கூறினார்.

மேலும், தம் தாயாரின் சேமிப்பு தனது பள்ளித் தேவைகளுக்குப் பெரிதும் உதவியதாக ரயான் நன்றியுடன் பகிர்ந்துகொண்டார்.

கடைசி மகன் 15 வயது ஜெடன் செக்கரியா சைலஸ், தங்களின் தாயார் தங்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்வதாகவும், அவரைப் போலவே மற்றவர்கள்மீது அக்கறை கொண்ட மனிதனாக வளர விரும்புவதாகவும் கூறுகிறார்.

ஆதரவுகளைத் தேடிக் கண்டறிகிறார்

அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவைத் தாமாகவே தேடிப் பெற்று, அதைத் தம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகச் சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார் இந்தத் தாயார்.

இன்று ஒரு நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ள திருவாட்டி லிடியா, தமது பொருளியல் நிலையைச் சீரமைத்து, தமது குடும்பத்தை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளார்.

இதன்மூலம், தம்மைப்போலவே போராடும் பிற ஒற்றைப் பெற்றோருக்கு, எதிர்மறை எண்ணங்களில் மூழ்கிவிடாமல் முன்னோக்கிச் செல்வதே வாழ்வின்வழி என்ற செய்தியை அவர் வழங்குகிறார்.

என்டியுசி-யு கேர் (NTUC-U Care) நிதியுதவியும் கல்விப் பற்றுச்சீட்டுகளும் கடந்த பத்து ஆண்டுகளாகத் திரு லிடியாவின் நிதிச்சுமையைக் குறைக்க உதவியுள்ளன.

தொடக்கத்தில் தம் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்காக ‘பள்ளிக்குத் திரும்புதல்’ (Back to School) பற்றுச்சீட்டுகளை விண்ணப்பிக்கத் தொடங்கிய அவர், காலப்போக்கில் பராமரிப்பாளர் ஆதரவு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் எனப் பல்வேறு உதவிகளை இதன்மூலம் பெற்றுள்ளார்.

உதவி தம்மைத் தேடி வரும்வரை காத்திருக்காமல் இணையத்தளங்களில் குறைந்த வருமானம் கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் திட்டங்களை திருவாட்டி லிடியாவே தேடிக் கண்டறிகிறார்.

இந்த நிதி உதவியை தம் குடும்பத்திற்கு மிகவும் அவசியமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்துவதற்காகப் பத்திரமாகச் சேமித்து வைக்கும் வழக்கத்தை அவர் கொண்டுள்ளார்.

தம் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகளையும் அவர்களின் எதிர்காலத் தேவைகளுக்காகத் தனியே எடுத்து வைப்பதாக அவர் சொன்னார்.

இந்தத் தொடர்ச்சியான ஆதரவு, கடினமான காலங்களில் தம் குடும்பத்திற்கு உதவியது மட்டுமல்லாமல், தனக்குத் துணையாக ஓர் அமைப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையையும் திருவாட்டி லிடியாவிற்கு வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்