முன்கூட்டியே வழங்கப்பட்ட சிடிசி பற்றுச்சீட்டுகளால் குடும்பங்கள் மகிழ்ச்சி

முன்கூட்டியே வழங்கப்பட்ட சிடிசி பற்றுச்சீட்டுகளால் குடும்பங்கள் மகிழ்ச்சி

2 mins read
3d37e352-1d23-4e53-9618-821f777197c2
சிடிசி பற்றுச்சீட்டுகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்கவும் உலகளாவிய பொருளியல் நெருக்கடிகளுக்கு இடையில் கூடுதல் உதவி அளிக்கவும் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு சிடிசி பற்றுச்சீட்டுகள் இம்மாதம் 11ஆம் தேதி வழங்கப்பட்டன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொடுக்கப்படவேண்டிய இந்தப் பற்றுச்சீட்டுகள், மத்திய கிழக்குப் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு காரணமாக முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளன.

அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க இந்தப் பற்றுச்சீட்டுகள் தற்காலிக நிவாரணமாக அமையும் என்று தமிழ் முரசிடம் பேசிய குடும்பத்தினர் சிலர் தெரிவித்தனர்.

எனினும், இந்த உதவித்தொகை பெரிய குடும்பங்களுக்கு நிதிச்சுமைகளைக் குறைக்கப் போதுமானதா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுந்துள்ளது.

குடும்பத்தின் அளவைப் பொறுத்து பற்றுச்சீட்டுகளை விநியோகிக்க கோரிக்கை

ஹவ்காங் வட்டாரத்தில் வசிக்கும் 37 வயது நூர் ஜரீனா அப்துல் ஹமீதுக்கு நூர் அசீஸா, 11, முஹம்மது ஆஃபிக், 7, முஹம்மது ஆஷிக், 7, நூர் ஷசானா, 4, என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

நூர் அசீஸாவுக்கு முதலாம் வகை நீரிழிவு நோய் இருப்பதால் இந்தக் குடும்பத்தின் மருத்துவச் செலவுகளும் தேவைகளும் அதிகம். அதனால், முன்கூட்டியே வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகள், நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக அவர் கூறினார்.

“எங்களுடையது பெரிய குடும்பம் என்பதால் வீட்டிற்கு வாங்கும் பொருள்களுக்கான செலவு மிக முக்கியமானது. இந்த $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் நிச்சயம் பேருதவிதான். ஆனால் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கும் மருத்துவச் செலவுகளுக்கும் இவை பயன்படுத்தப்பட்டு, தொகை மிக விரைவில் முடிந்துவிடும்,” என்றார் அந்தத் தாயார்.

கணவர் பிள்ளைகளுடன் 37 வயது நூர் ஜரீனா.
கணவர் பிள்ளைகளுடன் 37 வயது நூர் ஜரீனா. - படம்: நூர் ஜரீனா

சில நேரங்களில் முதியவர்கள் அல்லது சிறிய குடும்பங்களில் உள்ளவர்கள் இந்த சிடிசி பற்றுச்சீட்டுகளை முழுமையாகப் பயன்படுத்தாமல்போக வாய்ப்புள்ளது. அதே வேளையில், பெரிய குடும்பங்களின் அத்தியாவசியச் செலவுகளை ஈடுகட்ட இந்த $500 தொகை போதுமானதாக இருப்பதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

அரசாங்கம் வீட்டு முகவரியின் அடிப்படையில் வழங்காமல் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிடிசி பற்றுச்சீட்டுகளின் தொகையை வழங்கினால் அது பேருதவியாக இருக்கும் என்று திருமதி நூர் ஜரீனா தெரிவித்தார்.

திறன் மேம்பாட்டுக்கு உதவி

தீரன், 7, மகிமை, 5, நன்மை, 4 என்ற மூன்று குழந்தைகளின் தாயார்  ஐஸ்வர்யா சுந்தர், 35. இவர் தமது குடும்பத்துடன் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் வட்டாரத்தில் வசிக்கிறார்.

 மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான ஐஸ்வர்யா சுந்தர், 35.
 மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான ஐஸ்வர்யா சுந்தர், 35. - படம்: ஐஸ்வர்யா சுந்தர்

“மூன்று குழந்தைகளின் நடன வகுப்புகள், திறன் மேம்பாட்டு வகுப்புகள் போன்ற கல்விச் செலவுகள்தாம் எங்களுக்கு மிக முக்கியமானவை. மளிகைக் கடைகளில் இந்த சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடிவதால், அவற்றை இரண்டு தடவை பயன்படுத்தினால் முடிந்துவிடும். பிள்ளைகளின் திறன் மேம்பாட்டு வகுப்புகளுக்கு சிடிசி பற்றுச்சீட்டுகளைக் கூடுதலாகப் பயன்படுத்த முடிந்தால் மிக உதவியாக இருக்கும்” என்று திருமதி ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.

அரசாங்கம் வழங்கியுள்ள இந்த சிடிசி பற்றுச்சீட்டுகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்னும் கூடுதலான வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் இந்த சிடிசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று திருமதி ஐஸ்வர்யா கேட்டுக்கொண்டார்.

சிடிசி பற்றுச்சீட்டுகளின் தொகையை மேலும் உயர்த்தி, அதனை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்பதே இத்தகைய குடும்பங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையத்தளத்திற்குச் சென்று, ‘சிங்பாஸ்’ வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்