இளையரிடையே அதிகரிக்கும் பக்கவாதம்: வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்

இளையரிடையே அதிகரிக்கும் பக்கவாதம்: வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 6:00 am

2 mins read

மெல்பர்னில் படித்துக்கொண்டிருந்த வெனெசா ஓங்கிற்கு 2008ஆம் ஆண்டில் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது 17.

பக்கவாதத்தால் அவரால் பேசவோ, உடலின் வலப்பக்கத்தை அசைக்கவோ முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற அவர் சிங்கப்பூர் திரும்பினார்.

ஓராண்டுக்கும் மேலான தீவிர மறுவாழ்வுச் சிகிச்சைக்குப் பிறகே அவரால் தானாக நடக்க முடிந்தது. பிறப்பிலேயே ரத்த நாளங்களில் ஏற்படும் அரிய குறைபாட்டால் அவருக்குப் பக்கவாதம் உண்டானது.

தற்போது 35 வயதாகும் வெனேசாவை 75 வயதாகும் அவரது தாயார் பராமரித்து வருகிறார். வெனேசா சமூக நிறுவனம் ஒன்றில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிகிறார்.

சிங்கப்பூரில் இளையர்களிடையே பக்கவாதம் அதிகரித்து வருவதாக தேசிய நோய்கள் பதிவக அலுவலகத்தின் அண்மைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2013ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான பத்தாண்டுகளில் 15 முதல் 29 வயதுடையோரிடையே பக்கவாதப் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.

30 முதல் 39 வயதுடையோரிடையே அது ஏறக்குறைய 40 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதே காலகட்டத்தில் பதிவான பக்கவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை 6,720லிருந்து 10,664ஆக அதிகரித்தது. 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு பத்தாண்டு வயதுப் பிரிவிலும் பக்கவாத ஆபத்து இருமடங்காகிறது.

அதிக உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதும் உடற்பயிற்சி செய்யாததும் அதற்கு முக்கியக் காரணங்கள் என தேசிய நரம்பியல் கழகத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் கரோல் தாம் கூறினார்.

இதனால், இளையர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, உடற்பருமன் ஆகியவை ஏற்படுவதாகவும் குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோராக இருக்கும் இளையர்களுக்கு இது பேரிழப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தப் பக்கவாதச் சம்பவங்களில் 80 விழுக்காடு ரத்தக் குழாய் அடைப்பாலும் 20 விழுக்காடு மூளையில் ரத்தக் கசிவாலும் ஏற்படுகின்றன.

அதிக ரத்தக் கொழுப்பும் உயர் ரத்த அழுத்தமுமே பக்கவாத நோயாளிகளிடம் காணப்படும் பொதுவான காரணிகளாகும்.

புகைபிடிப்பதை நிறுத்துவது, சமச்சீர் உணவை உண்பது, வாரந்தோறும் 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது, வழக்கமான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது, மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வது ஆகியவற்றால் பக்கவாதத்தைத் தடுக்கலாம்.

இளையர்கள் என்பதாலேயே பக்கவாதம் வராது என எண்ணக் கூடாது எனவும் எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து உரிய மருத்துவ உதவி பெறுவது அவசியம் எனவும் அங் மோ கியோவிலுள்ள பக்கவாத ஆதரவு நிலையத்தின் மூத்த இயன்முறை மருத்துவர் மிஷெல் நியோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பக்கவாதம்இளையர்

தொடர்புடைய செய்திகள்