சிங்கப்பூரின் தகவல் தொடர்பு, ஊடகத்துறையில், குறிப்பாகத் தமிழ் ஊடகப் பிரிவில் இளையர்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சிங்கப்பூரின் ஒரே தமிழ் வானொலி நிலையமான மீடியாகார்ப் ஒலி 968, காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.
இளைய தலைமுறையினரைத் தன்வசம் ஈர்க்கவும், தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் முற்படும் ஒலி 968, நேயர்களின் மாறிவரும் சுவைக்கு ஏற்ப தனது படைப்பு, அறிவிப்புப் பாணிகளைத் தகவமைத்து வருகிறது. தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப, நிகழ்ச்சிகளை வழங்கும் பாணியும் மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மக்களின் புதிய ரசனைக்கு ஏற்ற வகையில், ஒலி 968 இளம் படைப்பாளர்களான நவின் குணசேகரன், கிரிஷ்மிதா ஷிவ் ராம், யாழினி கமலக்கண்ணன் ஆகியோர் தங்கள் தலைமுறை இளையர்களை ஈர்த்து வருகின்றனர்.
இவர்கள் மூவரும் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்தாலும், தமிழ்மொழி மீதான காதலும் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பும் இவர்களை ஒரே மையப்புள்ளியில் இணைத்துள்ளன.
கலைக்கூடமாகத் திகழும் வானொலி நிலையம்
ஒலி 968ன் புதிய குரலாக இணைந்துள்ள 27 வயது நவின் குணசேகரன், 2023ல் நடைபெற்ற ‘வசந்தம் ஸ்டார்’ பாட்டுத் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்.
பாடகராகத் தொலைக்காட்சி மேடையில் தடம் பதித்த இவர், தற்போது முழுநேர வானொலிப் படைப்பாளராகச் செயலாற்றுகிறார்.
மூத்த வானொலிப் படைப்பாளர் முகம்மது ரஃபியுடன் இணைந்து ‘இரவில் ஆட்டம்’ நிகழ்ச்சியை நவின் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலமான வானொலிப் படைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவது, வானொலியின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள அவருக்குச் சிறந்த களமாக அமைந்துள்ளது. மேடைப் பாடகராகவும் நடிகராகவும் இருந்த அனுபவம் இவருக்கு நன்கு பேசக் கைகொடுக்கிறது.
“என்னைப் பொறுத்தவரையில் வானொலி நிலையம், கலைகள் பலவற்றுக்கான கூடம்,” என்கிறார் இவர்.
திரு ரஃபியின் வழிகாட்டுதலைப் பற்றி விவரித்த நவின், “புதிய கருத்துகளை நான் முன்வைத்தால் அதனை அவர் கவனத்தோடு கேட்பார். பழக்கமில்லாத யோசனைகள் நன்றாக இருந்தால் அதனை ஏற்கத் தயங்கமாட்டார். அவரிடமிருந்து நிதானத்தையும் சரியான உச்சரிப்பையும் நான் கற்றுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.
தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, வானொலியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முற்படும் நவின், நாளும் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தம்மை மெருகேற்றி வருகிறார்.
சமூக விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம்
ஒலி 968ன் சனிக்கிழமை காலைப் பொழுதை (காலை 6 - 10 மணி) தமது துடிப்பான பேச்சால் பொலிவூட்டி வருகிறார் 22 வயது கிரிஷ்மிதா ஷிவ் ராம்.
மற்ற இளையர்களிடமிருந்து மாறுபட்டு, கிரிஷ்மிதா வானொலியை வெறும் பொழுதுபோக்குத் தளமாகப் பார்க்காமல், சமூக விழிப்புணர்வுக்கான முக்கியக் கருவியாகக் கருதுகிறார்.
குறிப்பாக, சமூகத்தில் பேசத் தயங்கும் ‘சர்ச்சைத் தலைப்புகள்’, திரைப்படங்களில் பெண்களின் சித்தரிப்பு போன்றவை சார்ந்த உரையாடல்கள்வழி இளையர்களிடத்தில் சிந்தனைகளைத் தூண்ட இவர் விரும்புகிறார். முதல் நேரலையின்போது அச்சத்தில் பின்வாங்க நினைத்த தமக்கு, பல்லாண்டு அனுபவமுள்ள படைப்பாளர் ரவி ஜி ஊக்கமளித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“எது நடந்தாலும் நாம் அதைத் தாண்டி முன்னேறிச் செல்ல வேண்டும்; அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திப்பதே வெற்றிக்கான வழி,” என்கிறார் கிரிஷ்மிதா.
நேயர்களின் விமர்சனங்களைச் செவிமடுக்கும் இவர், தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்தி அதனை மெருகேற்றி வருகிறார்; தமிழ் ஊடகத்துறையில் பெண்களின் வலுவான அடையாளமாகத் தம்மை நிலைநிறுத்த முயல்கிறார்.
தமிழுக்கு எந்நாளும் சிறப்பு
நாப்பிறழாது தமிழ்மொழியைச் சீராக, நயத்தோடு பேசவேண்டும் என்பதே இளம் படைப்பாளர் யாழினி கமலக்கண்ணனின் உறுதியான கொள்கை.
யாழினியைப் பொறுத்தவரை, வானொலி என்பது இளையோரையும் முதியோரையும் இணைக்கும் பாலம். வானொலி நிகழ்ச்சிகளில் வயது முதிர்ந்த நேயர்களுடன் உரையாடும்போது நிகழும் கருத்துப் பரிமாற்றங்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இத்தகைய உரையாடல்கள் ஒலியேறும்போது, நேயர்கள் வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க ஊக்கம் பெறக்கூடும் என்கிறார் இந்த இளையர்.
இதற்கு முன்னதாக, ‘வி சுப்ரீம்’ போட்டியில் நேரலையில் செயல்பட்ட அனுபவம், வானொலியில் தவறு செய்யாமல் பேசும் தன்னம்பிக்கையைத் தமக்கு அளித்ததாகக் கூறுகிறார் யாழினி. தமிழைத் தூய்மையாகவும் துல்லியமாகவும் உச்சரிக்கும்போது மொழியின் இனிமையும் வலிமையும் வெளிப்பட்டு, இளையர்கள் அதனால் ஈர்க்கப்படுவதாக அவர் முழுமையாக நம்புகிறார்.
‘ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு’ என்பதை வலியுறுத்திய யாழினி, வாழ்க்கையில் நன்னிலை அடைய ஒருவர் சலிக்காமலும் சளைக்காமலும் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்கிறார்.
புதிய தலைமுறைவழி புத்துயிர் பெறும் சிங்கப்பூர்த் தமிழ் வானொலி, நம் தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தை மேலும் உரக்கச் சொல்கிறது.

