சோதிட ரீதியிலான கோள்களின் தோஷங்களை நீக்க, செல்வத்தைக் குவிக்க, கல்வியில் சிறக்க என்பன போன்ற சோதிடப் பரிகாரங்களுக்காகப் பெரியவர்கள் அக்காலத்தில் ரத்தினங்களைத் தேடித் தேடி வாங்குவது ஒரு மரபாக இருந்தது.
ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துவதற்காக அக்கற்கள் அணிகலன் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டு, பயனாளர்கள் தொடர்ந்து அவற்றை அணியும்படி வலியுறுத்தப்பட்டது.
இன்றும் ரத்தினக் கற்கள் நகைக்கடைகளில் விற்கப்படும் நிலையில், இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் நல்வாழ்விற்காகப் பளிங்குக் கற்களின் (crystals) பக்கம் திரும்பியுள்ளனர்.
மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்கவும், மன அமைதியையும் லட்சியங்களையும் ஈர்க்கும் ‘மேனிஃபெஸ்டேஷன்’ (Manifestation) பயிற்சிக்காகவும் இந்தப் பளிங்குக் கற்களை அவர்கள் ஒரு கருவியாக மாற்றியுள்ளனர்.
இயல்பு ஒன்றே, வடிவமே வேறு!
இந்நிலையில், “இரண்டும் ஒன்றுதான், வடிவங்கள்தான் வேறு,’ என்கிறார் பளிங்குக் கற்களை விற்கும் இணைய வணிகமான ‘லியோ கிரிஸ்டல் மெராக்கி’ உரிமையாளர் சு. நிர்மல் பாய், 31.
2021ஆம் ஆண்டில் தமது வணிகத்தைத் தொடங்கிய அவர், அதற்குமுன் பளிங்குக் கற்களைச் சேகரித்து வந்தார்.
பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் இயற்கையான, கரடுமுரடான வடிவம் கொண்டவை பளிங்குக் கற்கள். அதே கல்லைச் செதுக்கி, பளபளப்பாக்கி, தங்கம் அல்லது வெள்ளியில் பதிக்கும்போது அது விலைமதிப்பற்ற ரத்தினமாக மாறுகிறது என்று அவர் விளக்கினார்.
“இருப்பினும், அவை இரண்டும் அணிந்திருப்பவர்களுக்கு ஒருவித ஆற்றலை (energy) வெளியிடுகின்றன,” என்றார் திரு நிர்மல்.
உலகில் மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் என அனைத்துமே அணுக்களால் ஆனவை; அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அதிர்ந்துகொண்டே இருக்கின்றன என்பது அறிவியல், ஆன்மிக அடிப்படையில் பலரது நம்பிக்கை.
ஒரு பளிங்குக் கல்லின் ஆற்றல், அதைத் தொடுபவரின் சொந்த ஆற்றலுடன் இணையும்போதுதான் வேலை செய்யத் தொடங்கும் என்கிறார் நிர்மல்.
“பளிங்குக் கற்களோ ரத்தினங்களோ, அவை கண்ணாடியைப் போன்றவை. ஒருவரது உடலில் எந்த ஆற்றல் குறைவாக இருக்கிறதோ, அதனை ஈடுகட்டும் வேலையை மட்டுமே அவை செய்கின்றன,” என்று அவர் விவரித்தார்.
“அதனால்தான், ஒரே கல் இரண்டு பேருக்கு இரண்டுவிதமான அனுபவங்களைத் தருகிறது,” என்று அவர் சுட்டினார்.
அத்துடன், ராசிக்குப் பொருந்திவரும் ஒரு கல், ஒருவரின் தற்போதைய மன அழுத்தத்திற்குப் பொருந்தாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால், பளிங்குக் கற்களைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க தனிமனித விருப்பம். ஒருவர் அந்த நிமிடத்தில் தமக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, தமது உள்ளுணர்வுக்கு ஏற்ப ஒரு கல்லைத் தேர்ந்தெடுக்கிறார்,” என்று திரு நிர்மல் விளக்கினார்
கோள்களின் தசைகளும் மாறும் கற்களும்
ஒருவர் பிறக்கும் தருணத்தில் சூரியன், சந்திரன் உள்ளிட்ட கோள்களும் ராசிகளும் அமைந்திருக்கும் துல்லியமான நிலைகளின் தொகுப்பே ஜாதகம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
இந்த ஜாதகக் கணிப்பின் அடிப்படையில்தான் ஒருவருக்குப் பொருத்தமான ரத்தினக்கல் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரது ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ற கல் என்பதால் அதனை ராசிக்கல் என்று அழைப்பர்.
ஒருவரது ஜாதகத்தில் கோள்களின் இடங்கள் மாறாது என்றாலும், அண்டத்தில் அவற்றின் திசைகள் மாறும். இதன் காரணமாக, ஒருவரது ராசிக்கல்லும் மாறும் என்று கூறினார் ‘லட்சுமி பேலஸ்’ நகைக்கடையின் ரத்தினக்கல் பிரிவு மேலாளர் கமலக்கண்ணன் லட்சுமணன்.
“ஒவ்வொருவர்க்கும் பிறந்த தருணத்தைக் குறிக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. அதிலிருந்தே அவர்களுக்குச் சில குறிப்பிட்ட குணங்கள் அமைந்திருக்கும். அவைதான் ஒருவரின் ராசிக்கல்லைத் தீர்மானிக்கின்றன,” என்று அவர் விளக்கினார்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்து செல்கின்றார். மாறிவரும் வாழ்க்கைச்சூழல் ஒருவரது குணங்கள், பழக்கவழக்கங்களையும் மாற்றும். அதற்கேற்ப, அவர்களுக்குப் பொருத்தமான கற்களும் மாறுகின்றன.
ராசிக்கல்லைத் தவிர வேறு ரத்தினங்கள் கொண்ட அணிகலன்களையும் அணியலாம் என்றார் திரு கமலக்கண்ணன்.
“மற்ற ரத்தினங்களை அணிவதால் எதிர்மறை விளைவுகள் ஏதும் நேராது. ஆனால், சில நேரங்களில் அது பலனளிக்காது,” என்று அவர் எச்சரித்தார்.
“எல்லாவற்றுக்கும் மேல், உண்மையான சக்தி என்பது அணிபவரின் எண்ணத்தில்தான் உள்ளது,” என்றார் திரு கமலக்கண்ணன்.
“நல்லவை நடக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் இருந்தால், நல்லது மட்டுமே நடக்கும். அதற்குச் சில நேரங்களில் எந்தவொரு ரத்தினமும்கூடத் தேவையில்லை; எண்ணத்தின் தூய்மையே அனைத்தையும் மாற்றிவிடும்,” என்று அவர் சொன்னார்.
தீர்வன்று, கருவிதான்!
பாரம்பரிய ரத்தினங்களை அணிந்து வந்த லலிதா கரம்ஜீத் சிங், 30, தன் வாழ்க்கையின் சூழல்கள் மாறியபோது அந்த ரத்தினங்கள் தனக்குச் சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.
“அதனால்தான் நான் பளிங்குக் கற்கள் பக்கம் திரும்பினேன்,” என்றார் அவர்.
ரத்தினங்களைவிடப் பளிங்குக் கற்கள் இப்போது தமக்கு மிகுந்த மன அமைதியையும், ஆழ்ந்த நிம்மதியையும் தருவதாகத் திருவாட்டி லலிதா கூறினார்.
வடிவங்கள் வேறுபட்டாலும் இரண்டுக்கும் இடையே உள்ள ஆழமான ஒற்றுமையை விளக்கினார் ‘ரெய்க்கி’ ஆன்மிகப் பயிற்சியாளர் ஷாமளா ராமசாமி, 52.
“ரத்தினங்களும் பளிங்குக் கற்களும் அடிப்படையில் ஒன்றே. இரண்டுமே தற்காப்பிற்கும் மனநலத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன,” என்றார் அவர்.
அதே வேளையில், இன்றைய இளையர்கள் பளிங்குக் கற்களை ஓர் உடனடித் தீர்வாக நாடுகிறார்களே தவிர, அது மனநலத்திற்கு உதவும் ஒரு ‘கருவி’ மட்டுமே என்பதை அவர்கள் பல நேரங்களில் உணர்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நகைக்கடைகளில் ஒளிரும் பாரம்பரிய ரத்தினங்களாக இருந்தாலும் சரி, இன்றைய இளையர்களின் கருத்தைக் கவர்ந்த நவீன பளிங்குக் கற்களாக இருந்தாலும் சரி, ஆற்றலின் உண்மையான பிறப்பிடம் கற்கள் அல்ல, மனித மனம்தான்!

