தொண்டூழியமும் உடற்பயிற்சியும் ஒன்றிணைந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சனிக்கிழமை (மே 10) காலை 40க்கும் மேற்பட்டோர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஒன்றுகூடினர்.
இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே 2017ல் தொடங்கப்பட்ட ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழுவும் ‘ஜென்டில்மேன்’ முடிதிருத்தும் கடையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ‘ஹேர் ஃபார் ஹோப் அண்ட் ரன்’ நிகழ்ச்சியில், குழந்தைகள் புற்றுநோய் அறக்கட்டளையை ஆதரிக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் 17 பேர் தலைமுடியைத் துறந்தனர்.
முதல் முறையாக இந்த வடிவத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு அளிக்க அனைத்து வயதினரையும் ஒன்றிணைத்தது. அவர்களில் ஆக இளைய பங்கேற்பாளரான 10 வயது வால்டர் அர்ஜூனா, தன் தந்தையுடன் இணைந்து தானும் தலைமுடியை மழித்துக்கொண்டார்.
‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவின் நீண்டகால உறுப்பினரும் மருத்துவ உதவியாளருமான பாலச்சந்திரன் சரவணன், 36, இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தமது தலைமுடியைத் துறந்தார்.
“சமூகத்திற்குத் திருப்பித் தருவதற்கான ஒரு முயற்சி இது. ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவின் பல முயற்சிகளில் பங்கேற்றுள்ளேன், ஆனால் ‘ஹேர் ஃபார் ஹோப்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு இதுவே முதல் முறையாகும்.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியாக இல்லை. அவர்கள்மீது அக்கறை கொண்டு, துணையாக இருக்கப் பலர் உள்ளனர் என்பதை இந்தச் செயல் வெளிப்படுத்தும் என நம்புகிறேன்,” என்றார் அவர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ‘ஹேர் ஃபார் ஹோப்’ நிகழ்ச்சியை ஆதரித்து வரும் ‘ஜென்டில்மேன்’ முடிதிருத்தும் கடை உரிமையாளர் வெங்கடேஷ் தனபால், 39, இந்த ஆண்டு நிகழ்ச்சியை வெளிப்புறத்தில் நடத்தலாம் என்ற யோசனையைச் செயல்படுத்தினார்.
“இதற்குமுன் ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் ஓர் அறையில், உட்புறத்தில் இதைச் செய்து வந்தோம். இதைச் சிறப்பான முறையில் மாற்றியமைக்க, ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவுடன் இணைந்து செயல்பட நினைத்தோம்.
தொடர்புடைய செய்திகள்
“இதை நாங்கள் முதன்முறையாக ஒன்றாக ஏற்பாடு செய்திருந்தாலும், மக்களின் வருகையும் அவர்களின் நேர்மறையான உணர்வுகளும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது,” என்றார் வெங்கடேஷ்.
நிகழ்ச்சியின் மற்றோர் அங்கத்தில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 5 கி.மீ. ஓட்டம் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் ‘ஹேர் ஃபார் ஹோப்’ சட்டைகளைப் பெருமையுடன் அணிந்துகொண்டு ஒன்றாக இந்த அங்கத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின்வழி குழந்தைகள் புற்றுநோய் அறக்கட்டளைக்காக இதுவரை $9,000க்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது. இதை வருடாந்தர நிகழ்ச்சியாகத் தொடர ஏற்பாட்டாளர்கள் இருவரும் ஆர்வம் தெரிவித்தனர்.
“எங்கள் ஓட்டக் குழுவின் இலக்கு வெறும் ஓட்டத்தை மட்டும் சார்ந்ததில்லை,” என்று ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சேம் ராமசாமி, 46, கூறினார்.
“விழிப்புணர்வை ஏற்படுத்தி, அர்த்தமுள்ள சமூகக் காரணங்களுக்கு ஆதரவளிக்க அதிகமானோரை ஊக்குவிக்க விரும்புகிறோம். இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கம். அடுத்த ஆண்டில் இதை மேலும் விரிவாக, பேரளவில் நடத்த விரும்புகிறோம்,” என்றார் அவர்.