பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளத்தை வென்ற செயின்ட் ஜோசஃப் கல்விநிலைய மாணவர்கள்

பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளத்தை வென்ற செயின்ட் ஜோசஃப் கல்விநிலைய மாணவர்கள்

படம் : செயின்ட் ஜோசஃப் கல்விநிலையம்

07 Aug 2026 - 6:44 am

2 mins read

மாணவர்கள் ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் தங்களது அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள உதவும் கல்வி அமைச்சின் ‘பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளம் (இடிபிஎஸ்) 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு 20 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் அந்த உதவித்தொகையைப் பெற்றனர்.

அவர்களில் மூவர் செயின்ட் ஜோசஃப் கல்விநிலையத்தைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவர்கள். சத்யன் துரைமுருகன், அச்யுத் அரவிந்த், கார்ஸ்டன் யுங் செர்ன் ஆனந்த் ஆகிய மூவரும் அந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டனர்.

“எனது கல்விப் பயணத்திற்கு எனது பெற்றோர் ஒவ்வொரு நாளும் ஆதரவு தருகிறார்கள். திரு.கைருல் போன்ற எனது ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தி, மேலும் தொடர்ந்து கற்க எனக்கு ஆதரவளிக்கின்றனர்,” என்றார் சத்யன் துரைமுருகன்,16.

“பள்ளியின் சூழல் 'ஸ்டெம்’ துறையில் எனது ஆர்வத்தையும் திறமையையும் மேம்படுத்தியுள்ளது. இந்தத் துறையில் எனது அணுகுமுறையையும் மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. பொறியியல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஆராய்வதற்கு 'இடிபிஎஸ்’ ஒரு சிறந்த வழியாக இருக்கும்,” என்று கூறினார் அச்யுத் அரவிந்த் ,17.

உயர்கல்வி நிலையங்களின் ‘ஸ்டெம்’ பயிலரங்குகள், தொழில் பங்காளிகளின் ஆதரவுடன் வழங்கப்படும் வேலைப்பயிற்சி அனுபவங்கள் ஆகிய இரண்டும் இந்த உபகாரச் சம்பளத்தின் இரு முக்கியக் கூறுகள்.

“தற்போது இந்த உதவித்தொகை எனக்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நான் ஒரு புதிய துறையில் முயற்சி செய்யலாம்,” என்று கூறினார் கார்ஸ்டன் யுங் செர்ன் ஆனந்த்,17.

“இந்த உதவித்தொகை அறிவியல் மாணவர்களைத் தொழில்நுட்பத் தலைவர்களாக மாற்றும் என்று நம்புகிறேன். திட்டங்களை எவ்வாறு நிர்வகிப்பது, தொழில்முறைச் சூழல்களைக் கையாள்வது, உண்மையான தொழில்துறைச் சவால்களைத் தீர்ப்பதற்குத் தங்களின் ஆராய்ச்சித் திறன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த உதவித்தொகை மூலம் வரும் அனுபவங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்,” என்றார் ஆசிரியர் கைருல்சாத் சுலைமான், 47.

கணிதம், அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் இம்மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்பள்ளிக் கல்விஉதவித்தொகைகல்வி