மகாகவி பாரதியார், மொழி வேற்றுமையின்றி அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற கருத்துகளைக் கவிதைகளாக்கியவர் என்பதால் அவற்றை அனைவரிடமும் கொண்டுசெல்லும் விருப்பத்தில் பயணம் செய்கிறார் செளந்தர்யா சுகுமார்.
‘சக்திதாசன் - ஒரு கவிஞரின் சத்தியத் தேடல்’ எனும் தலைப்பில் ‘ஆவண நாடகம்’ ஒன்றைத் தயாரித்துள்ள அவர், பாரதி தமது வாழ்வில் நுழைந்தது முதல், அவர் குறித்த ஆவணப்படத்தை எடுக்கத் தூண்டிய நிகழ்ச்சிகள் வரை பல்வேறு சுவாரசியமான தகவல்களைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
‘சக்திதாசன்’
“பாரதியார் குறித்த திரைப்படங்கள், ஆவணப்படங்கள் நிறைய வெளிவந்துள்ளன. அவரது வாழ்க்கை வரலாற்றை நான் கூறி பலரும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை.
“ஆனால், அவருக்கு ஆன்மிகத்தில் இருந்த ஈடுபாடு குறித்தும் வாழ்வு முழுவதும் அவர் பிறரைப் போலன்றி மாறுபட்டுச் சிந்தித்து, செயல்பட்டதன் காரணமாக அமைந்த நிகழ்ச்சிகள் எனப் பலவற்றைத் தொகுத்தும் இதனைப் படைத்துள்ளோம்,” என்றார் செளந்தர்யா.
குறிப்பாக, தேசத்தின் சுதந்திரப் போராட்டம் அவர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அவரது அரசியல் வழிகாட்டிகள் யார், அவருக்கு ஆன்மிகம் குறித்த புரிதலை ஏற்படுத்திய திருப்புமுனை நிகழ்வுகள், மனிதர்கள் எனப் பலவற்றையும் அவரது சிந்தனைகள் தற்காலச் சூழலுக்கும் எவ்வாறு பொருந்துகிறன என்பதையும் இந்த ஆவண நாடகம் ஆராய்கிறது.
இதில், அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை நாடகமாகக் காட்சிப்படுத்தியதுடன், அவரது சந்ததியினரான கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி, அவருடைய மகன் நிரஞ்சன் பாரதி உள்ளிட்ட பலரது நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.
“பொதுவாக, ஆவணப்படங்கள் முழுநீளக் கதைகளாக இருக்கும். ஆனால், இப்போது அதுபோன்ற நீண்ட காணொளிகளைப் பார்ப்பதைப் பலரும் விரும்புவதில்லை. எனவே, அதனை சுவாரசியமான வகையில் படைக்க, சில பகுதிகளை நாடகமாகக் காட்சிப்படுத்தியுள்ளதுடன் பாடல்கள், நேர்காணல்கள், நடனம் என மாறுபட்ட முறையில் படைத்துள்ளோம்,” என்ற செளந்தர்யா, இந்தப் பயணத்தின் தொடக்கம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
“சிறுவயது முதலே பாரதிமீது பற்று இருந்தாலும், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பாரதியின் வாழ்வு, அவருக்கும் நிவேதிதா தேவி, சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் எனப் பல ஆன்மிகப் பெருமக்களுக்குமான தொடர்பு, அவரது வாழ்வில் ஆன்மிகத்தின் தாக்கம் ஆகியவை குறித்த தேடல் ஏற்பட்டது,” என்ற செளந்தர்யா, அதுவே இந்த நாடகத்தின் தொடக்கத்துக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கான தொடக்கக் காலத்தில் பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி ஆதரவளித்ததாகக் கூறிய அவர், இந்நாடகப் பயணம் தமக்கும் ஓர் ஆன்மிகப் பயணமாகவே அமைந்தது என்றும் சொன்னார்.
பாரதியாரின் அறிமுகமும் தாக்கமும்
“பாரதியார் என் வாழ்வில் நுழைந்தபோது எனக்கு எட்டு வயது. என் பள்ளியில் என்னுடன் மாறுவேடப் போட்டியில் பங்கேற்ற ஒரு மாணவி, ‘அச்சமில்லை அச்சமில்லை’ எனும் பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றாள். அன்று பாரதியின்மீது கடுங்கோபத்துடன், அவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவரது வாழ்க்கைக் கதையையும் அவரது கவிதைகளின் நயத்தையும் என் பாட்டி எடுத்துச் சொல்லவே, கோபம் மறைந்து ஆர்வம் மேலோங்கியது,” எனப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தார் செளந்தர்யா.
பாரதியார் கவிதைகள் தமது வாழ்வில் பெருமாற்றங்களை நிகழ்த்தியுள்ளதாகக் கூறிய அவர், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்று பாடுவதற்குத் தனித்துவமான சிந்தனை வேண்டும் என்றும் சிலிர்ப்புடன் சொன்னார்.
“மனித மனம் எப்போதும் தனக்கு நேர்ந்த எதிர்மறை விளைவுகள் குறித்தே வருந்தும் குணம் கொண்டது. பாரதி ஒருவரால் மட்டுமே, வாழ்வில் தாம் அனுபவித்த சிரமங்கள் அனைத்தையும் மறந்து, இன்பம் குறித்துப் பாட முடியும்,” என்றும் அவர் புகழ்ந்தார்.
பாரதியாரின் கவிதைகளுக்கு உள்ள ஒரு தனித்துவம் பற்றிப் பகிர்ந்துகொண்ட செளந்தர்யா, “அவரது பாடல்கள் கவிதையாக இல்லாமல் ஜதி, தாளம், ராகத்துடன் எழுதப்பட்டவை. கலைகளை விரும்புவோர் அவரது கவிதைகளை விரும்பாமல் இருக்க முடியாது,” என்றார்.
பாரதியார் கவிதைகள் களஞ்சியம் போன்றது என்றும் அள்ள அள்ளக் குறையாத சுவைமிகு அரிய கருத்துகளும் அடங்கியுள்ளதால் அவற்றை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் ஆவல் உள்ளதாகவும் கூறினார்.
வலியுறுத்தும் கருத்துகள்
இந்த ஆவண நாடகத்தின் மூலம் மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்த விரும்புவதாக செளந்தர்யா கூறினார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பே சாதி, சமயம் என எந்தவொரு வேற்றுமையும் இல்லையெனும் புரட்சிக் கருத்தை வலியுறுத்தியவர் பாரதியார். இப்போதும் பல்வேறு வேறுபாடுகள் நிலவும் நிலையில், இக்கருத்து அனைவரிடமும் சென்று சேரவேண்டும்.
“மாயை ஆட்டிப்படைக்கும் உலகில், மாயையை விடுத்து, நம் வாழ்விற்கு நாமே பொறுப்பு எனும் எண்ணம் வர வேண்டும் என்பார் பாரதி. மேலும், வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் துன்பத்தைப் பார்க்காமல் இன்பத்தைப் பார்ப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இவற்றை அனைவரும் உணர இந்நாடகம் உதவும் என ஆழமாக நம்புகிறேன்,” என்றார் செளந்தர்யா.
பாரதி தமிழ்க் கவிஞர் என்றாலும் அவரது கருத்துகள் உலகெங்கிலும் சென்று சேரவேண்டும் என்பதற்காக இந்நாடகத்தை யூடியூப் தளத்தில் வெளியிட்டதாகவும் செளந்தர்யா சொன்னார்.
இது பன்மொழி பேசுவோரிடம் சென்றுசேரும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் சிந்தித்து வருவதாக அவர் கூறினார்.

