தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்புக் கலை ஆசானுக்குப் பெருமை தந்த தந்தைமை

2 mins read
b934508c-1f85-4ace-afe8-d680766725b7
மகன் ஆர்யா கணேசனை ஏந்தி பெருமிதம் அடையும் திரு கணேசன் சந்திரகாசன்.  - படம்: கணேசன் சந்திரகாசன்

தற்காப்புக் கலைஞரும் ஆசிரியருமான சந்திரகாசன் கணேசன், 36, தமது துறையில் மேன்மேலும் தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுக்கு முதலிடம் அளித்து வந்தார்.

இப்பொழுது வீட்டில் துணைவியின் சிரிப்பொலியும் மகனின் மழலை ஓசையும் நிரம்பி இவரது வாழ்க்கைக்கு முழுமை சேர்க்கிறது. பிள்ளைகளைத் தொட்டு அன்பு காட்ட தந்தையர் சிலர் தயங்கினாலும் இவர் தம் மகனை நீண்ட நேரம் ஆரத்தழுவுவது வழக்கம். 

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த திரு கணேசன், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக அளவில் சிலம்பம், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, முவே தாய் தற்காப்புக் கலை போட்டிகளில் பங்குபெற்று உயரிய பதக்கங்களைப் பெற்றவர். 

மனைவி பிரியா, குழந்தை ஆர்யாவுடன் கணேசன் சந்திரகாசன். 2023ல் எடுக்கப்பட்ட படம்.
மனைவி பிரியா, குழந்தை ஆர்யாவுடன் கணேசன் சந்திரகாசன். 2023ல் எடுக்கப்பட்ட படம். - படம்: கணேசன் சந்திரகாசன்

சிங்கப்பூருக்கு 2013ல் வந்த திரு கணேசன், இளம் மாணவர்களுக்கு ஆசிரியராகவும் இருக்கிறார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பெண்ணான மனிதவள நிபுணர் அருண் ராணி பிரியாவை 2022ல் திருமணம் செய்தார். இருவரும் மணம் புரிந்த ஓராண்டில் குழந்தை ஆர்யா கணேசன் பிறந்தார். இப்போது ஆர்யாவுக்கு இரண்டு வயது.

வாழ்க்கைத் தொழிலில் பல்வேறு உச்சங்களைத் தொட்டுள்ள திரு கணேசன், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதைச் சீரான குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக ஆக்கிக்கொண்டார். 

“புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர் என்ற முறையில் கற்பிப்பதற்கான வாய்ப்புகள் என்னை ஏராளமாகத் தேடி வருகின்றன. ஆனால், பணம், விருது ஆகியவற்றுக்கான வேட்கையைக் கடந்தது குடும்பத்தின் மீதான என் அன்பு,” என்கிறார் இவர். 

பிள்ளைகளின் நலனும் வாழ்க்கைத் துணையின் நலனும் வெவ்வேறன்று என்பது திரு கணேசனின் நிலைப்பாடு. வெவ்வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்த தமக்கும் தம் மனைவிக்கும் கலாசார வேறுபாடுகள் இருந்தாலும் அதனை ஒரு பிரச்சினையாகப் பெரிதுபடுத்துவதில்லை

வெளிநாடுகளில் பயிற்சி, பயிற்றுவிப்புகளைச் செய்து போட்டியிட்டதால் பலவகை பின்புலங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்த திரு கணேசன், இதனால் தமது கண்ணோட்டமும் விரிவடைந்துள்ளதாகக் கூறுகிறார்.

“வெளியிலிருந்து மனைவியுடன் தொலைபேசியில் உரையாடும்போது முதலில் அவரது நலம் குறித்து விசாரித்த பிறகுதான் என் மகனின் நலனை விசாரிப்பேன்,” என்று திரு கணேசன் கூறினார். மனைவி நலமாக இல்லை என்றால் பிள்ளைகள் நிச்சயம் நலமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். 

“ஒருவரது வாழ்க்கைத்தொழிலிலும் அவர் தேர்ந்தெடுத்துள்ள துறையிலும் மாற்றங்கள் ஏற்படும்போது, அதற்கு அவர் தன்னைத் தகவமைத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அதே போல, பிள்ளைகளின் வயதுக்கும் தேவைக்கும் ஏற்ப பெற்றோர்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்வது சிறந்ததாகும்,” என்றார் திரு கணேசன்.

பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பாளர் என்ற முறையில் பெற்றோர்க்குரிய பராமரிப்பையும் காட்டி வருவதாக இவர் கூறினார். 

ஆசிரியர் என்ற முறையில் பிள்ளைகளை நெறிப்படுத்தி, வழிகாட்ட வேண்டியுள்ளதால் அதற்குக் கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நிச்சயம் தேவைப்படும் என்பது இவரது நிலைப்பாடு

“ஆயினும், எதற்கு எடுத்தாலும் செய்யாதே, முடியாது போன்ற எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்த்து, இந்த இடத்தில் இதைச் செய்யலாம், அந்த இடத்தில் இதைச் செய்யக்கூடாது, என்ற நியாயமான, ஆக்ககரமான முறையில் விளக்கம் அளிப்பேன்,” என்றார் திரு கணேசன். 

பாசமும் பாதுகாப்பும் இயல்பாக வழிந்தோடும் கட்டமைப்பில் ஒவ்வொரு நாளுமே தந்தையர் தினமாகவும் பிள்ளைகள் தினமாகவும் காதலர் தினமாகவும் திகழும் என்பது இவரது கருத்து.

குறிப்புச் சொற்கள்