சிறுவயதிலிருந்தே அம்மாவைப் போல் சேலை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பெண் குழந்தைகள் பலர், துப்பட்டாவைச் சேலையாக உருமாற்றி அணிந்து அழகு பார்ப்பார்கள்.
அவ்வாறு வெறும் விளையாட்டாகத் தொடங்கிய சிலரின் ஆர்வம், இன்று ஆடை அலங்காரத் துறைக்கு அவர்களை இட்டுச்சென்றுள்ளது.
அண்மைக் காலங்களில் சேலைகளை முன்கூட்டியே மடித்துக்கட்டும் திறன் மக்களிடையே மிகப் பிரபலமாகி வருகிறது.
ஒரு காலத்தில் சேலை கட்டுவதற்கு ஏறக்குறைய இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை ஆகும் என்ற நிலை மாறி, இன்று நவீன மடிப்பு முறைகளின் மூலம் மிகக் குறைந்த நிமிடங்களில் நேர்த்தியாகச் சேலையை அணிந்துவிட முடிகிறது.
மணப்பெண்கள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பலரும் இன்று நேரத்தை மிச்சப்படுத்தவும் கச்சிதமான தோற்றத்தைப் பெறவும் சேலைகளை முன்கூட்டியே கட்டுவதற்கு ஏதுவாகத் தயார் செய்து தரும் சேவையை நாடுகின்றனர்.
சிங்கப்பூரில் தனித்துவம் வாய்ந்த அந்தத் துறையில் தடம் பதித்த ஐந்து பெண்கள் கலைப்பயணத்தையும் அனுபவங்களையும் பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.
சிறுவயது நினைவுகளும் கலையின் வரலாற்றுப் பின்னணியும்
சேலைகளை மடித்துத் தரும் கலையில் ஈடுபடும் பெண்களின் பயணம் பெரும்பாலும் அவர்களின் வீடுகளிலிருந்தே தொடங்குகிறது.
30 வயது லக்ஷனா ஶ்ரீரங்கம், மிகச் சிறிய வயதிலேயே துப்பட்டாவைச் சேலை போல் சுற்றி விளையாடி மகிழ்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சேலைகளின்மீது அவருக்கு இருந்த அளப்பரிய காதலால், ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தில் அவர் சேலை அணிந்த படங்களைப் பதிவிட்டார். பின்னர் அதுவே, அவரை இந்தத் தொழிலை நோக்கி நகர்த்தியது.
33 வயது கல்பனா பன்னீர்செல்வம், அவருடைய அம்மாவின் புடவைக் கடையில் இருந்த பொம்மைகளுக்குச் சேலை கட்டி அலங்கரித்ததன் மூலம் துறையின்மீது ஈடுபாடு கொண்டார்.
பாட்டியும் அம்மாவும் சேலை கட்டுவதைப் பார்த்து வளர்ந்ததாக அவர் கூறுகிறார்.
அதேபோல, அம்மா மிகவும் விரைவாகப் சேலை கட்டுவதைப் பார்த்து வியந்ததாக 33 வயது கெவித்தரா குணசேகரன் நினைவுகூருகிறார்.
“அம்மா சேலை கட்டும் விதத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன், அது சுலபமாகத் தோன்றும், ஆனால் நாமே செய்யும்போதுதான் அதன் உண்மையான சிரமம் புரியும்,” என்று கெவித்தரா அவரின் ஆரம்பகால முயற்சிகளைப் பற்றிக் கூறுகிறார்.
54 வயது ராபியா முகமது ஹுஸேனுக்குச் சேலை என்றாலே அலாதி பிரியம். ஆரம்பத்தில் தமக்குத் தெரிந்ததை வைத்து சுயமாகவே சேலை கட்ட அவர் கற்றுக்கொண்டார்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒப்பனைக் கலைஞரான மகளின் வாடிக்கையாளர்களுக்குச் சேலை மடிக்க உதவியபோது ராபியாவின் பயணம் தொடங்கியது.
35 வயது ஷாமளா ரவிந்திரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றிருந்தபோது அங்குள்ள மணப்பெண்களின் கச்சிதமான சேலை அலங்காரத்தைப் பார்த்து வியந்து, சிங்கப்பூரிலும் அதே நேர்த்தியைக் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலில் இத்துறைக்குள் நுழைந்தார்.
போட்டி நிறைந்த துறையில் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம்
சேலை கட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துரும் நிலையில், தங்களைத் தனித்துவமாகக் காட்டிக்கொள்ள இவர்கள் தொடர்ந்து புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
அதிகப் போட்டியிருந்தாலும் இத்துறையில் உள்ளோர், தங்களை மேம்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை.
சுயமாகக் கற்றுக்கொள்ளும் ஒருவராகத் தம்மைக் கருதும் ராபியா, மலேசியா, இந்தியாவிற்குப் பயணம் செய்து பல முன்னணிக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
தொடர் கற்றலின் அவசியத்தை வலியுறுத்தினார் ராபியா.
”அனைத்தையும் அறிந்துவிட்டதாகக் கருதுவது வளர்ச்சியைத் தடுக்கும். பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எப்போதும் ஏதேனும் ஒன்று உண்டு; கௌரவக் குறைவாக அதனைக் கருதாமல், ஒரு நல்வாய்ப்பாகவே பார்க்க வேண்டும்,” என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
ஷாமளாவும் இணையம் வழியாக நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, பின்னர் மலேசியாவில் அனுபவம் வாய்ந்த கலைஞர்களிடம் நேரடியாகப் பயின்று திறனை வளர்த்துக்கொண்டார்.
ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு தனி பாணி இருக்கும். ஆனால் தமக்கென தனித்துவமான ஒரு பாணியை உருவாக்க முயற்சி செய்வதாக ஷாமளா கூறுகிறார்.
கல்பனா பாரம்பரிய முறையை அவரது பாட்டியிடம் கற்றுக்கொண்டாலும் நவீன முறைகளைத் தெரிந்துகொள்ள மலேசியாவிலிருந்து வரும் நிபுணர்களிடம் பயிற்சி பெற்றார்.
புதிய போக்குகளைக் கவனிப்பதே தொழிலில் நிலைக்க உதவும் என லக்ஷனா நம்புகிறார்.
கெவித்தரா தொழில்துறையில் உள்ள போட்டியை மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.
“மற்றவர்களைப் போட்டியாகப் பார்க்காமல், உங்களையே உங்களுக்குப் போட்டியாகப் பார்க்க வேண்டும். உங்கள் முந்தைய வேலையை விடச் சிறப்பான வேலையைத் தர வேண்டும்,” என்று அவர் உத்வேகத்துடன் குறிப்பிடுகிறார்.
மணப்பெண்களையும் சவாலான வாடிக்கையாளர்களையும் கையாளுதல்
சேலை கட்டுவது, குறிப்பாக மணப்பெண்களுக்குக் கட்டுவது பெரிய பொறுப்பாகும்.
வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் பார்ப்பவற்றில் உள்ள சேலைகளின் தோற்றத்தைப் போலவே தங்களுக்கும் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், ஒவ்வொரு துணியின் தன்மையும் வேறுபடும் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பது ஒரு சவாலாகும்.
வாடிக்கையாளர்கள் சிலர் புடவையின் துணி வகை பற்றி அவ்வளவு அறிந்திருப்பதில்லை என்றும் அதை அறிந்துகொள்ளாமல் தங்களுக்குப் பிடித்தவாறு சேலையின் மடிப்புகள் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள் என்றும் ராபியா அவரின் அனுபவத்தைப் பகிர்ந்தார்.
“தங்களது உடல் அமைப்பிற்கும் சமூக வலைத்தளங்களில் தோன்றும் பெண்களின் உடல் அமைப்பிற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு என்பதை வாடிக்கையாளர்கள் உணர வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
கல்பனா அதனை ஆமோதித்தார்.
“ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் மாறுபடும் என்பதால், அனைவருக்கும் ஒரே அளவு பொருந்தும் என்ற முறை இதில் சரிவராது,” என்று அவர் விளக்கினார்.
வாடிக்கையாளர்கள் சிலர், பழைய மடிப்புகள் கலையாத புடவைகளைக் கொண்டுவருவார்கள் என்று கூறிய கல்பனா, அதனைச் சரி செய்வதில் அதிகக் கவனம் செலுத்துவதாகச் சொன்னார்.
சில நேரங்களில் பட்டுச் சேலைகளில் அதிக மடிப்புகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால் எல்லாத் துணிகளிலும் அவ்வாறு செய்யமுடியாது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நேரில் புரியவைப்பதாக ஷாமளா கூறுகிறார்.
லக்ஷனா, சேலை கட்டுவதற்கு உடலமைப்பு பிரச்சினையில்லை என்று வலியுறுத்துகிறார்.
“சேலை என்பது அனைத்து உருவ அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அவர்களின் உடலமைப்புக்கு ஏற்பப் புடவைகளைத் தயார் செய்து தருவது அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையைத் தருகிறது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களைக் கேட்டு அதற்கேற்பப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் செலவழித்துச் சேலையைத் தயார் செய்வதாக கெவித்தரா கூறுகிறார்.
வேலை வாழ்க்கைச் சமநிலை
நேர்காணல் கண்ட அனைவருமே சேலை மடிப்பதைத் தாண்டி பல்வேறு கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள். அவர்கள் நேரத்தை மிகவும் நேர்த்தியாக நிர்வகித்து வருகின்றனர்.
உயிரியல் மருத்துவத் துறையில் பயின்ற லக்ஷனா, பகுதி நேரமாகச் சேலை மடிப்புத் துறையில் இறங்கினார்.
தமது சேவைக்குக் ‘கட்டு’ என்று பெயரிட்டு, அதற்கான சின்னத்தை அவரே வடிவமைத்துள்ளார்.
ராபியா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிர்வாகத் துறையில் முழுநேரமாகப் பணிபுரிகிறார். வார இறுதி நாள்களில் மட்டும் சேலை மடிக்கும் பணியை அவர் செய்கிறார்.
குடும்பத்துக்கான நேரமும் முக்கியம் என்பதால், வேலை இல்லாத நாள்களில் குடும்பத்தாரோடு இருப்பதை அவர் உறுதிசெய்கிறார்.
கல்பனா ஒரு முழுநேரக் கணக்காளராகப் பணிபுரிகிறார்.
அவர் தற்போது வேலை மாறுவதால், சேலை கட்டுவதைப் பகுதி நேரத் தொழிலாகச் செய்துவருகிறார்.
ஷாமளா கடந்த பத்து ஆண்டுகளாகத் தொழில்முனைவராக முழுநேரப் பணியில் இருக்கிறார்.
அதில் அவர் காட்டும் துல்லியமும் நேர்த்தியும் சேலை மடிப்பதிலும் அவருக்குக் கைகொடுக்கிறது.
ஒவ்வொரு சேலையிலும் அவர் காட்டும் தனி கவனம் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியைத் தருவதாக ஷாமளா நம்புகிறார்.
கெவித்தரா, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல், கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர் பணி அனுபவம், சேலை கட்டும் வகுப்புகளை இன்னும் திறம்பட நடத்த உதவுவதாக அவர் கூறுகிறார்.
அலுவலக வேலைகளுக்கிடையிலும் இத்துறை மீதான மிதமிஞ்சிய காதலாலும் முறையான திட்டமிடலாலும் அவர்கள் அனைவரும் சேலை கட்டும் தொழிலிலும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.
சேலை மடித்தல் துறையின் எதிர்காலப் போக்குகள்
இன்றைய அவசர உலகிற்குப் புடவைகளை முன்கூட்டியே சீராக மடித்துவைக்கும் திறன், நவீன, அவசியமான தீர்வாக மாறியுள்ளது.
பாரம்பரியமாகப் சேலை உடுத்தும் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில், அந்தச் சேவையின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கும் கலாசாரம் கொண்டுசெல்லப்படும் என லக்ஷனா உறுதியாக நம்புகிறார்.
முந்தைய தலைமுறையினர், இயந்திரங்களைக் கொண்டு புடவையை மடிப்பதால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகச் சேலையின் தரம் குறையும் என்று கூறுகின்றனர். ஆனாலும் இன்றைய இளைய தலைமுறையினர், வாழ்க்கையின் முக்கியத் தருணங்களில் குறைபாடற்ற தோற்றத்தை விரும்புவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் இத்துறை மேலும் வளரும் என்பதற்கு ஏற்ப, ராபியா மலேசியாவிலிருந்து நீராவி இஸ்திரிப் பெட்டிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்.
“ஒரு முறை அழுத்தினால் போதும், அவ்வளவு நேர்த்தியாக வரும்,” என்று அவர் கூறுகிறார்.
இந்த எளிமையான சேலை கட்டும் முறையினால் தமிழர் அல்லாத பலரும், குறிப்பாக மணப்பெண்களின் தோழிகளும் சேலையை அணியத் தற்போது ஆர்வம் காட்டுவதாகக் கல்பனா கூறுகிறார்.
காலங்கள் மாறும்போது இளைய தலைமுறையினர் வித்தியாசமான நவீன சேலை கட்டும் பாணிகளை அதிகம் விரும்புவார்கள் என்று ஷாமளா கணிக்கிறார்.
ஒரு திருமண விழாவில் ஒப்பனை, சிகை அலங்காரத்திற்கு ஒதுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம் சேலை கட்டுவதற்கும் ஒதுக்கப்படுகின்ற காலம் நிச்சயம் மலரும் என்பது கெவித்தராவின் ஆழமான நம்பிக்கை.
எவ்வளவு நாகரிக மாற்றங்கள் வந்தாலும் சேலையின் பாரம்பரிய அழகும் அதன் நேர்த்தியும் என்றும் மாறமாட்டா.
சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களுக்கு அப்பால் சேலை அணியும் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பெரிய பொறுப்பை ஐந்து பெண்களும் தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்.
அவர்களின் விடாமுயற்சியும் கலையின் மீதான காதலும் நேர்த்தியான சேவையும் சிங்கப்பூரில் சேலை கட்டும் துறையைப் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றே கூறவேண்டும்.

